surya
surya timepass
சினிமா

25 Years of Nerukku Ner : சூர்யாவைத் தூங்கவிடாமல் செய்த இரண்டு சம்பவங்கள்!

Saran R

'நேருக்கு நேர்' படத்தில் அஜித் குமார் 18 நாட்கள் நடித்த பிறகே விலகி இருக்கிறார். படத்தின் இயக்குநர் வசந்த் தன்னிடம் கதையைச் சொல்லாமலே ஷூட் செய்து வருவது பிடிக்காமல் படத்திலிருந்து அஜித் விலகியதாக மீடியாக்களில் செய்தி வெளியானது. 

'டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் என் பங்கு என்ன என்பது தெரியாமல் நடிப்பது நன்றாக இருக்காது. அதனால் தான் விலகல் முடிவு!' என்று விளக்கம் கொடுத்தார் அஜித்.

இயக்குநர் வசந்த்துக்கு தர்மசங்கடம். 'ஆசை' படத்தின் மூலம் அஜித்துக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்த உரிமையில் கதையைச் சொல்லாமல் எடுத்தது தன் தவறுதான் என பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டார் வசந்த். இப்போது படத்துக்கு புது ஹீரோ தேவைப்பட்டார். ஏற்கனவே 'ஆசை'க்காக சிவக்குமாரின் மூத்த மகன் சரவணனை நடிக்க வைக்க (அப்போது சூர்யாவின் பெயர் சரவணன்) சிவக்குமார் வீட்டுக்கே போய் கேட்டிருந்தார். ஏதோ சில காரணங்களால் அது முடியாமல் போயிருந்தது. இம்முறை சிவக்குமார் மகனை நடிக்க வைத்து விடலாம் என முடிவெடுத்து சிவக்குமாரை அப்ரோச் செய்திருக்கிறார்.

''டேய் சரவணா... நான்லாம் சினிமாவுக்குள்ள வர்றதுக்கு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சேன். எத்தனையோ நாட்கள் சாப்பிட கையில காசில்லாம அலைஞ்சிருக்கேன். உனக்கு வாய்ப்பு ஒருமுறை தட்டும்போது மறுத்ததுக்கு ஒரு காரணம் இருந்துச்சு... இரண்டாவதுமுறை தட்டும்போது மறுக்காதே. நீ வேணாம்னு நிராகரிக்குற ஒரு இடம் பல பேரோட கனவுடா'' எனச் சொல்லி 'மனசுக்குள் வரலாமா?' என்ற டைட்டில் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சரவணனை கமிட் செய்துவிட்டார். மணிரத்னம் தான், 'நேருக்கு நேர்' என்ற டைட்டில் கொடுத்தார். 

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு என்பதால், மணிரத்னத்திடமே சரவணனுக்கு நல்ல பெயர் வைக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் வசந்த். தன் ஹிட் படமான, 'தளபதி' படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரையே முன்மொழிந்தார் மணிரத்னம். 'சூர்யா...ஆஹா... புதிதாக உதிக்கப் போகும் ஒரு கதாநாயகனுக்கு இதைவிட நல்ல பெயர் கிடைக்காதுப்பா!' என சிவக்குமார் சிலாகிக்க, ஒரு நாயகன் உதயமாகிவிட்டான். 

சூர்யா அப்போது ஒல்லியான தேகம் கொண்டவராக இருந்ததால் காஸ்ட்யூம்களில் பூசிய உடல்வாகு கொண்டவராக அவரைக் காட்ட மெனக்கெட்டனர். தோள்பட்டையில் 'பேட்' வைத்து தைத்த சட்டைகளை அணிந்து நடித்தார் சூர்யா.  கூட நடித்த சிம்ரனுக்கு இது முதல் படம். பாலிவுட் இறக்குமதி வேறு. ஷூட்டிங் 'டிலே' ஆக சிம்ரனின் இரண்டு படங்கள் முந்திக் கொண்டது. ஷூட்டிங் சூர்யாவுக்கு சிம்ரனுடன் போட்டி போட்டு நடிக்கவும் சிரமமாக இருந்தது. விஜய்யுடன் மோதும் காட்சியில் கொஞ்சம் சமாளிக்க முடிந்ததற்குக் காரணம் ஏற்கனவே அவர்கள் இருவரும் கல்லூரி நண்பர்கள் என்பது தான்.

டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் வராததால், 'எங்கெங்கே..' பாடலை கொல்கத்தாவில் படமாக்கும்போது சும்மா ஓடவிட்டே எடுத்தனர். இயல்பிலேயே கூச்ச சுபாவியான சூர்யா, பல காட்சிகளில் சரியான உணர்ச்சி பாவனைகளைக் காட்ட சிரமப்பட்டதால் இயக்குநர் வசந்த் டென்ஷனாகிக் கத்த ஆரம்பித்தார்.

இதனால் இயக்குநர் வசந்த் இல்லாதபோது, 'நான் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை. டெக்ஸ்டைல் பிசினெஸ் பண்ணப் போகிறேன்!' என்று ஓப்பனாகவே யூனிட் ஆட்களிடம் பேச ஆரம்பித்தார் சூர்யா. அது மேலும் இயக்குநர் வசந்த்தை கடுப்பாக்கி விட்டது தான் சோகம். எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க வைத்து ஒருவழியாக படத்தை முடித்தார் வசந்த். 

''எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஒருநாள் கொல்கத்தாவில் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும்போது பிரேக்கில் கொல்கத்தாவில் கிடைக்கும் ஒரு உணவு ஐட்டத்தைப் பற்றி வசந்த் சாரிடம் சொன்னேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் தலையில் கைவைத்தபடி, 'உனக்கு உன் பிரச்னை!' என்று கமெண்ட் அடித்தார். மிகவும் அவமானமாக இருந்தது எனக்கு.

அந்தப் படம் முடிந்த பிறகு, நடிகர்கள் சங்க நிதி திரட்ட கலை நிகழ்ச்சிக்கு ரயிலில் திரை உலகமே கிளம்பிப் போனோம். அப்போது நான் டின்னர் முடித்து விட்டு ஒரு பெர்த்தில் தூங்கி விட்டேன். என்னை தட்டியெழுப்பிய ரகுவரன் சார், 'டேய்...என்னடா சாதிச்சுட்டே நீ...உனக்குலாம் எப்படிரா இவ்ளோ சீக்கிரம் தூக்கம் வருது?' என்று கேட்டார். என்னை பலநாட்கள் இந்த இரண்டு சம்பவங்களும்  தூங்கவிடவில்லை. அது ஒரு வெறியை உண்டு பண்ணியது. மெல்ல மெல்ல சினிமாவில் என்னை தகவமைத்துக் கொண்டேன்!'' என்று சூர்யாவே ஓப்பனாக பேட்டிகளில் இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு சிரிக்கிறார்.  

'நீ ஜெயிச்சிட்டே மாறா!' - இந்த டயலாக் சூர்யாவுக்கும் பொருந்தும்.