ஏழைகளுக்கு உதவிகள் புரிவதற்காக பாராட்டுகளை பெற்றுவருபவர் நடிகர் சோனு சூட். கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதி உதவி, பஸ் வசதி உள்பட பல உதவிகளை வழங்கினார்.தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ தனியாக அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸில், ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி சோனு சூட் உருவத்தை ரசிகர்களுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வரைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மிகவும் நெகிழ்ந்து போன சோனு சூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த அரிசி முழுவதும் ஏழ்நிலையில் உள்ள பல குடும்பங்களுக்கு என்.ஜி.ஓ (NGO) மூலம் அனுப்பிவைக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.