இந்தி சினிமாவின் பிரபல நடிகையான கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பதிவுகளாலும், அரசியல் கருத்துகளாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர். தமிழில் 'தாம்தூம்', 'தலைவி' ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் 'சந்திரமுகி' வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கங்கனாவும் நடித்து வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர வடிவேலுவும் நடிக்கிறார். இசையமைப்பாளர் கீரவாணி, கலை இயக்குநர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் போன்றவர்களும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், ட்விட்டரில் #askkangna என்ற ஹேஸ்டாக் வழியாக நெட்டிசன்களின் கேள்விகளுக்கு கங்கனா பதிலளித்து வருகிறார். அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கங்கானவிடம் 'தமிழ் படங்களில் நடித்து வருகிறீர்கள். தமிழ் திரையுலகிற்கும், பாலிவுட் திரையுலகிற்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்' என்று கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த கங்கனா, "இது நான் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவே இதை நான் விரும்புகிறேன். அவர்கள் என்னிடத்தில் 'நான் மிகவும் அமைதியாக, மற்றவர்களிடத்தில் தேவையில்லாமல் பேசாமல் என்னுடைய வேலை மட்டும் பார்த்து கொன்டு இருப்பதாக' படப்பிடிப்பின்போது என்னைப் பற்றி கூறினார்கள். இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில், இப்படி இருப்பதை பாலிவுட்டில் திமிர் என்கிறார்கள்" என்று கூறுகியிருக்கிறார்.