பாலா
பாலா  டைம்பாஸ்
சினிமா

'அடித்துவமான' இயக்குனர் பாலா - அது ஒரு டவுசர் காலம் | Epi 16

Aravindraj R

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.

தமிழ் சினிமாவில் 'அடித்துவமான' இயக்குனர் யார் என்று கேட்டால், தயங்காமல் பாலாவை சொல்லலாம். அப்படிப்பட்ட பாலாவின் பள்ளி காலம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

பளபள என பில்டிங்குகள் உள்ள இண்டர்நேஷனல் ஸ்கூலில் சேத்துவிட்டால் சேர மாட்டேன் என்று கூறிவிட்டு, ஊருக்கு ஒதுக்கு புறமாக சுடுகாட்டிற்கு பக்கத்தில், மொத்த ஸ்கூல் பில்டிங்கும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிடம் இருந்து வாடகைக்கு எடுத்த மாதிரி இருக்கும் ஸ்கூலில்தான் சேருவேன் என்று அடம்பிடித்திருப்பார்.

தினமும் காலை அசம்பிளியில், மற்ற மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாட, இவர் மட்டும் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி.." என்று பாடியிருப்பார். அடுத்த நாள், 'ஓம் சிவோகம் ஓம் சிவோகம்.. அகம்பிரம்மாஸ்மி ஓம் ஓம்' என பாடியிருப்பார்.

ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படிஷன் நடந்தால் கலந்துக்கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால், சாதா நாளிலேயே அகோரி கெட்டப்பிலும், ஆண்டி கெட்டப்பிலும் வந்து எல்லாரையும் பயமுறுத்தியிருப்பார்.

பி.டி., ப்ரீடியட்களில், மற்ற மாணவர்கள் கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட, இவர் மட்டும் தனியாக லங்கர் கட்டை உருட்டி விளையாடியிருப்பார். ஸ்போர்ட்ஸ் டேவில் 'லங்கர் கட்டை விளையாட்டில்' ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் வேண்டும் என்று அடம்பிடித்திருப்பார்.

வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்கள், அவர் விளையாட கார் பொம்மை வாங்கிக் கொடுத்தால், 'எனக்கு மண்டை ஓட்டு பொம்மை வாங்கிட்டு வாங்க' என கேட்டு, அவர்களைத் திடுக்கிட வைத்திருப்பார்.

தப்பு செய்து டீச்சரிடம் அடிவாங்கும்போது, 'நான் ஆத்தாளப் பார்க்காத சுடுகாட்டுப் புள்ள... தனனான தனனான தனனா தன்னே தனனான தனனான தனனா’ என பாடி எஸ்கேப் ஆகிருப்பார்.

"ஸ்போர்ட்ஸ் டே ஃபங்ஷன், ஆனுவல் டே ஃபங்ஷன் எல்லாமே இனி சுடுகாட்டு போட்டலில் நடத்துங்க மேடம்" என ஹெச்.எம்மிடம் கோரிக்கை வைத்திருப்பார்.

மற்ற வகுப்புகளில் ஆசிரியருக்கு பயந்து மாணவர்கள் பிரம்பை ஒளித்து வைக்கும்போது, இவரின் வகுப்பில் மட்டும் இவருக்கு பயந்து ஆசிரியரே பிரம்பை ஒளித்து வைத்திருப்பார்.