Metti Oli Metti Oli
சினிமா

Metti Oli 2 : Gopi அண்ணா is Back - யார் யார் நடிக்கிறார்கள்? | சிறிய இடைவேளைக்குப் பிறகு Epi 24

அய்யனார் ராஜன்

டிவியில் இந்த வாரம் விறுவிறுப்பாகப் பேசப்பட்ட இன்னொரு டாபிக், 'மெட்டி ஒலி' தொடரின் இரண்டாவது சீசன் வரப்போகிறது' என்பதுதான். 'மெட்டி ஒலி' இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பலத்த வரவேற்பை பெற்ற சீரியல்.

ஐந்து சகோதரிகளின் வாழ்க்கைதான் கதை. ஐந்து பெண் பிள்ளைகளின் அப்பாவாக நடிகர் டெல்லிகுமார் நடித்திருந்தார். நடிகர்கள் சேத்தன், போஸ் வெங்கட் (இந்த சீரியல் கேரக்டர் பெயரான போஸ்தான் வெங்கட்டை போஸ் வெங்கட் ஆக்கியது), வியட்நாம் வீடு சுந்தரம், சாந்தி வில்லியம்ஸ், ஜெயமணி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த தொடரில் திருமுருகனும் 'கோபி' என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.

சீரியலின் டைட்டில் சாங்கான 'அம்மி அம்மி மிதித்து' பாடலுக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானதெனச் சொல்லலாம். அந்தப் பாடல் காட்சியில் நடனமாடியவர் சாந்தி. நல்ல டி.ஆர்.பி. கிடைத்து வந்த நிலையில், தொடர் முடிவடைய, இரண்டு மூன்று முறை மறுஒளிபரப்பும் கூட செய்து விட்டார்கள்.

இந்த நிலையில்தா இயக்குநர் திருமுருகன் 'மெட்டி ஒலி' தொடரின் இரண்டாவது சீசனை எடுக்கும் முயற்சியிலிருக்கிறார் என தற்போது தகவல். 'மெட்டி ஒலி' முதல் சீசனில் நடித்திருந்த சிலரிடம் பேசினோம்.

'ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தை நடந்திருக்கு. சிலர்கிட்டப் பேசியிருக்காங்க. ஆனா யார் யார் நடிக்கிறாங்கனெல்லாம் இப்போதைக்கும் எதுவும் எங்களுக்குத் தெரியாது. டெல்லி குமார் சாரைப் பொறுத்தவரை முதல் சீசன்ல இறந்துட்ட மாதிரி காட்டியிருப்பாங்க. அதனால் இரண்டாவது சீசன்ல அவர் இருப்பாரானு தெரியலை'' என்கிறார்கள்.

ஓரிரு மாதங்களில் இதுகுறித்து அடுத்தகட்டத் தகவல்கள் தெரியவரலாமெனத் தெரிகிறது.

சினிமாவில் எப்படியோ சீரியல்களைப் பொறுத்தவரை, ஹிட் ஆன ஒரு சீரியலின் அடுத்த சீசன்கள் வெளியானால் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். சித்தி மற்றும் பாரதி கண்ணம்மா தொடர்களின் முதல் சீசன் ஹிட். ஆனால் அடுத்த சீசன்களுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லை.

ஆனால் திருமுருகனுக்கு ரசிகர்களை இழுக்கும் ஒரு மேஜிக் தெரியுமென்கிறார்கள். அந்த உத்தியைப் பயன்படுத்தி பழைய சென்டிமென்டை உடைப்பாரா? அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும்.

'குக்கு வித் கோமாளி' 4வது சீசன் ஒருவழியாக நிறைவடைந்து விட்டது. மைம் கோபி வெற்றியாளராக அறிவிக்கப்பட, இரண்டாவது இடம் நடிகை சிருஸ்டி டாங்கேவுக்குக் கிடைத்தது.

சிருஸ்டியிடம் பேசினோம்.

''உண்மையைச் சொல்லணும்னா எனக்குச் சமையலும் தெரியாது; இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிடற வரைக்கும் ஷோவின் முந்தைய சீசன்களை நான் பார்த்ததும்  கிடையாது. திடீர்னு ஒரு நாள் நிகழ்ச்சியின் தயாரிப்புத் தரப்புல இருந்து  ஃபோன் செய்து 'உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா'ன்னு கேட்டாங்க. 'தெரியாது'னு சொன்னேன்.

'குக்கு வித் கோமாளி' ஷோ பார்த்திருக்கீங்களா'னு கேட்டாங்க. அதுக்கும் 'நோ'தான் என் பதில். ஆனா சர்ப்ரைஸ் என்னன்னா, ரெண்டு மூணு நாள் கழிச்சு நேரில் வரசொல்லிக் கூப்பிட்டாங்க. போனா, ஒரு டைனிங் டேபிள்ல சாப்பாடெல்லாம் தயாரான நிலையிலிருக்க, அந்த இடத்துலதான் அந்த மீட்டிங்கே நடந்தது.

எனக்கு அந்தச் சூழல் வித்தியாசமானதாகவும், பிடிச்சதாகவும் இருந்தது. பிறகென்ன, ஒரு சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோவுல நானும் இருந்துட்டு வந்துட்டேன். நல்ல ஒரு அனுபவமா இருந்தது'' எனச் சிரிக்கிறார்.

''உண்மையைச் சொல்லுங்க, டைட்டில் கிடைக்கலையேங்கிற வருத்தம் உங்களுக்கு இருக்குதானே' என்றால், ''நான் டைட்டில் எதிர்பார்த்தெல்லாம் போகலை. போய்ப் பார்க்கலாமேன்னு ஜாலியாப் போய் கலந்துகிட்டேன். அந்த நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடி என் தமிழ் அவ்வளவா நல்லா இருக்காது. ஷோவுல என் தமிழைக் கலாய்ச்சவங்க, 'நாங்க சொல்லித் தர்றோம்'னு அழகாச் சொல்லித் தந்தாங்க. அதனால சமையல் வருதோ இல்லையோ, இப்ப தமிழ் பரவால்லாம வருது''என்கிறார்.