tamil hero timepass
சினிமா

கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

ஆழ்வார்ல வர சீன்கள்ல பக்தி வர்றதுக்குப் பதிலா பகபகன்னு சிரிப்புதான் வந்துச்சி. அந்த படம் ரிலீஸாகறப்ப இங்க பிஜேபி துளிர் விடுல. ’தல’ ய தலையெடுக்க விடாம பண்ணிருவோம்னு ’உதார்’ விட்டிருப்பாங்க.

டைம்பாஸ் அட்மின்

நடிகர்கள் சினிமாவுல கடவுள் வேஷம் போடுறதும் ஒரு வகையில கோராமைதான். அதிலும் சிவன் மாதிரி புலித்தோல் டிசைன்ல துணிய மாட்டிக்கிட்டு தையாதக்கான்னு ஒரு டான்ஸ் ஆடுவாங்க பாருங்க. ஈசன்னு ஒரு கடவுள் உண்மையா இருந்தார்ன்னா… மான நஷ்ட வழக்குப்போட்டு மானத்த வாங்கிடுவான். அந்த அளவுக்கு ஆடி அசிங்கப்படுத்துவாங்க..

இந்த டான்ஸ் மூவ்மெண்ட்லயே ருத்ர தாண்டவம்னு ஒரு கிரிட்டிக்கல் போர்சன் இருக்கு. கண்ணை ஆக்ரோசமா உருட்டிகிட்டு படுபயங்கரமா பூமி அதிர ஆடணும். அப்படி ஆடி அதிரவெச்சி அதிமட்டம் பண்ண நடிகர்களையும், மற்ற கடவுள் வேஷம் போட்ட ஹீரோக்களையும் பார்ப்போம்.

1 . ’ஸ்ரீமுருகன்’ னு ஒரு படம். ரொம்ப ஓ…ஓ….ல்டு மூவி. பேருக்குத்தான் இது எம்.ஜி.ஆர் படம். ஆனா ஹீரோ இவர் இல்லை. வேற ஒருத்தர். அந்த படத்துல சிவன் – பார்வதி சேர்ந்து டான்ஸ் ஆடுறது மாதிரி ஒரு சீன். மாலதிங்கிற நடிகை பார்வதியாக நியமிக்க, நம்ம பொன்மனச் செம்மல்தான் சிவன். தலைவர் டான்ஸ் மூவ்மெண்டெல்லாம் எப்டி பின்னுவாருன்னு தான் நமக்குத் தெரியுமே. இன்னும் ஆரம்ப கட்டத்துல எப்டி ஆடி அசத்திருப்பாருன்னு பாத்துக்கங்க.

அந்த படத்துல ஹீரோவைவிட புரட்சித் தலைவரோட ஆட்டம் படத்தை தூக்கி நிறுத்திச்சின்னு பேசிக்கிட்டாங்களாம். அவரோட நண்பர்கள் யாராச்சும் பாராட்ட வரும்போது ’பங்காளி அந்த சிவன் டான்ஸ் மூவ்மெண்டை போட்டுக்காட்டுறது’ ன்னு கேட்டதும் தயங்காம எந்திரிச்சு தபதபன்னு கூச்சமில்லாம ஆடுவாராம் எம்.ஜி.ஆர். நம்ம டி.ஆர் மாதிரி.

2 . அப்போ வந்த ’கந்தன் கருணை’ னு ஒரு படம். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்னு ஏகப்பட்ட பிரபலமான ஆர்ட்டிஸ்டுகள் நடிச்சிருப்பாங்க. சூட்டிங்க் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதுல முருகன் கேரக்டர்ல நடிக்க இளம் நடிகர் ஒருத்தரை வளைச்சி வளைச்சி தேடிகிட்டு இருந்தாங்க. அந்த டைம்ல பிரபலமான சில பேர் மூவ் பண்ணினப்போ… நீ பிரபலமான ’நடிகனா செல்லாது… செல்லாது’னு பத்திவிட்டுட்டு இருந்தப்பதான் பிரெஸ் பீஸா வந்து சிக்கினவர்தான் நடிகர் சிவக்குமார்.

அவரை மேக்கப் ரூம்ல கூட்டுப்போய் முகத்துல அரிதாரத்த அழுத்திப் பூசி நல்லா பளபளன்னு பழம் மாதிரி மேக்கப் போட்டு, முருகன் கெட்டப்புல டிரஸ்ஸும், கிரீடமும், கையில வேலும் கொடுத்து நிக்க வைக்க, அவ்ளோ பொருத்தமா இருந்திருக்காரு சிவக்குமார். அந்தப் படத்துக்கு அப்புறம் சாமி படங்களா எடுக்கிற டைரக்டர்கள் வா..வான்னு ஆபீசுக்கு இழுக்க, கடுப்பாகி, பழம் மாதிரி இருந்த சிவக்குமார் முகம் வெம்பிப் போற அளவுக்கு மாறிடுச்சி.

3 . ’ஆழ்வார்’னு ஒரு படம். அஜித் அதுல அட்ராசிட்டி பண்ணி அசத்தியிருப்பார். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஆகாதுங்கறதுதான தமிழ் சினிமாவோட மூலப்பத்திரம். ஒரு கட்டத்துல வில்லன் ஆட்களை பழி வாங்க ரோட்ல விரட்டிகிட்டு ஓடின அஜித், திடீர்னு கைல கிடைச்ச நீல சாயத்தை முகத்துல பூசிகிட்டு, காட் கிருஷ்ணரா மாதிரி மாறு வேஷத்துக்கு மாறி அடியாட்களை அடி பின்றார். அடுத்து மெயின் வில்லனை லாக் பண்ணணும்.

அதுக்கு கிருஷ்ணர் கெட்டப் ஸாப்டா இருக்கும்னு டைரக்டர் ஃபீல் பண்ணாரோ என்னவோ கண்ண மூடி திறக்கறதுக்குள்ள ’இது எப்ட்றா’ னு வியந்து வாயப்பொளக்கிற அளவுக்கு நரசிம்ம அவதாரத்துல வந்து நிப்பாரு. அந்த சீன்கள்ல பக்தி வர்றதுக்குப் பதிலா பகபகன்னு சிரிப்புதான் வந்துச்சி. நல்லவேளை அந்த படம் ரிலீஸாகறப்ப இங்க பிஜேபி துளிர் விடுல. இல்லன்னா ’தல’ ய தலையெடுக்க விடாம பண்ணிருவோம்னு ’உதார்’ விட்டிருப்பாங்க பயபுள்ளைங்க.

4 . சில வருஷத்துக்கு முன்னால வெளியான படம் ’சீமராஜா’ சிவகார்த்திகேயன் – சமந்தா நடிச்சிருப்பாங்க. ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்துட்டு இருக்கிற சமந்தாவை கரெக்ட் பண்ணணும்னு வாட்சு விற்கிற வடநாட்டுக்காரனா வருவாரு எஸ்கே. அது ஒர்க்கவுட் ஆகாது. எப்டியாச்சும் சமந்தாவை லவ் பண்ண வெச்சே ஆகணும் குறுக்கு புத்தி குறுக்கால பாய ஒரு கட்டத்துல ராமர் கெட்டப்புல வந்து லவ்ஸ் பண்ணுவாரு மாறு வேஷத்துல அதுவும் ராமர் வேஷத்துல வந்தா பொண்ணுங்க மயங்கி லவ் பண்ணுவாங்கன்னு எந்த சினிமா ஸ்தபதி தப்புத்தப்பா வரைஞ்சு வெச்சாங்கன்னு தெரியலை.

ஆனா, அந்த ராமர் வேஷத்தோட பவரும் பஞ்சராக இன்னும் கடுப்பாகிறாங்க கதாநாயகி. பொண்ணை கரெக்ட் பண்றதுக்கு எங்க நாயகனான ராமன் வேஷத்தை எப்படி போடலாம்னு அப்பவும் யாரும் பொங்கல. ஒருவேளை பொங்கல் வடைக்கு துட்டு வாங்கிட்டு வாய பொத்திக்கிட்டாங்களோ என்னவோ.

5 . நடிகர் கமல் எப்பவாச்சும் சில படங்கள்ல கடவுள் கெட்டப்புல வந்திருந்தாலும் ’பம்பல் கே. சம்பந்தம்’ படத்துல சிவன் பக்தர்கள் எல்லாம் ஈசானி மூலையில உட்காந்து நெனச்சி… நெனச்சி அழற அளவுக்கு, மெட்ராஸ் பாசைல பேசி பின்னிப்பெடல எடுத்திருப்பார். ஏற்கனவே கமல் நாஸ்திகம் பேசுறவர். எதாச்சும் சின்ன கேப் கெடைச்சாலும் அங்க தான் கடவுள் மறுப்பாளர்னு காட்டிக்குவார்.

அந்த படத்துல சென்னை லோக்கல் தமிழ் பேசுற கேரக்டர்னதும் ரொம்பவே அழகா பேசி நடிச்சிருப்பார். அந்த படம் வந்தப்ப சிலருக்கு சந்தோஷத்தையும் சிலருக்கு கடுப்பையும் ஏற்படுத்திச்சி. ஆனாலும், கமல்தான் அதைப் பத்தியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத ஆளாச்சே. அப்படியே ’ஏன் நடிச்சேன்..?’ னு விளக்கம் சொல்லி இருந்தாலும் யாருக்கும் புரிஞ்சிருக்காது.

6 . காலங்காலமா கதையோட கடைசியில ஹீரோங்க ஜெயிக்கிறதுதான நடைமுறை அந்த வழக்கத்துல கொஞ்சமும் பிசிறு விலகாம ஹீரோ விஜயகாந்து ஜெயிக்கிற படம்தான் ’நரசிம்மா’. விஷ்ணுவோட பல கேட்டகிரி கெட்டப்புல நரசிம்மன் அவதாரமும் ஒண்ணு. நரசிம்மர்னு பேரை வெச்சிக்கிட்டு சிங்கம் மாதிரி கர்ஜிக்காம இருக்க முடியுமா…? கிளைமாக்ஸ் சிங்கத்தோட மாஸ்க்கை மாட்டிகிட்டு கொம்பும் – கேரள செண்டை மேள அதிர்வோட வருவாரு கேப்டன்.

சிங்க முக மாஸ்க்கை கழட்டினதுதான் வந்திருக்கிறது விஜயகாந்துன்னு வில்லனும், அவரோட ரசிகர்கள் கூட ஷாக்காகி பாக்குற அளவுக்கு மாஸ் எண்ட்ரி கொடுப்பாரு. அப்றம் என்ன படத்துக்கு வேற பேரு வெச்சிருந்தா அடியோட விட்டிருப்பாரு. நரசிம்மாங்கிறதால வில்லனோட நெஞ்சில கை வெச்சி ஆவேசமா கண்ணை உருட்டுவாரு பாருங்க ஐயோ… அப்டி இருக்கும்.

- எம்.ஜி.கன்னியப்பன்