பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டென்டுல்கர் - விநோத் காம்ப்ளி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இந்தியாவிற்கும் நியூஸிலாந்திற்கும் நடந்து வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழ் வர்ணனையில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஆகியோருடன் கௌதம் வாசுதேவ் மேனனும் கலந்துக்கொண்டார்.
அப்போது ஆர்.ஜே.பாலாஜியின் கேள்விக்கு பதிலளித்த கௌதம் மேனன், "மாவட்ட அளவிலான போட்டிகளில் இருந்து, மாநில அளவிலான போட்டிகளுக்கு சென்று, பின் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக்கொள்ளும் இரண்டு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படத்தை இயக்கும் எண்ணம் உள்ளது. சரியாக சொன்னால், சச்சின் - காம்ப்ளி ஆகியோரின் வாழ்க்கையை தழுவி திரைப்படம் எடுக்கும் ஆசை உள்ளது. நட்பு, விளையாட்டு என கலந்து இருக்கும். இதற்கான எழுத்து பணிகள் செய்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவின் மூன்று மகன்களும் கிரிக்கெட் வீரர்கள். அதில் ஒருவர் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நெல்லை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.