இரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கும் மகனுக்கும் கதை சொல்லும் நிர்ப்பந்தம். 'கதைகேளு கதை கேளு' என மைக்கேல் மதன காமராஜன் படத்தையே ஐபேடில் 'அமெஸான்' ஆப்பில் போட்டுக் காட்டினேன். நள்ளிரவைத்தாண்டி படம் பார்த்தார்கள். இரண்டு பேருக்கும் அவ்வளவு பிடித்துப்போனது ஆச்சர்யம் தான். ஒரே சிரிப்பாணி!
சொல்லி வைத்ததுபோல இருவருமே மீண்டும் அந்தப்படத்தை பார்க்க ஆசைப்பட்டார்கள். சிலபல அடல்ட்ஸ் ஏரியாக்களை ஃபாஸ்ட் ஃபார்வர்டில் கடந்து இன்னொருமுறை ப்ளே பண்ணினால் அதே சிரிப்பலை!
கமல் காலங்களைக் கடந்த கலைஞன் என்பதற்கு சிறந்த உதாரணம் மைக்கேல் மதன காமராஜன் படம் தான். 90-ல் எதிர்பார்த்து பெரியளவில் ஹிட்டடிக்காத படம். இப்போதும் தியேட்டரில் அந்த நாளுக்குள் போய் பார்த்த உணர்வு வருகிறது. ஆனால், கமலுக்கு வழமையான 'ahead of time'தான் இப்படம். இன்றும் அந்தப்படம் ஓடினால் சிரித்துப்புரண்டு பார்க்கும் நண்பர்களை நானறிவேன். எனக்கே சின்ன குறுகுறுப்பு இருக்கும்.
டெக்னிக்கலாக சினிமா வளராத காலத்திலேயே உடல்மொழியால் 4 பேரை கண்முன் நிறுத்தியிருப்பார் கமல். மார்ஃபிங் டெக்னாலஜியை சரியாய் அறிமுகப்படுத்திய தமிழ் சினிமா! முதுகெலும்பாய் இளையராஜாவின் இசை, எலும்பும் தோலுமாய் கிரேஸி மோகனின் குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள் என படம் வேற லெவலில் இருக்கும்.
``பீம் பாய் பீம்பாய் அந்த லோக்கர்ல இருக்குற ஆறு லச்சத்தை எடுத்து இந்த அபிஷ்ட்டு அவினாசி மூஞ்சியில விட்டெறி!''
``என்னது கட்டிண்டு இருக்கோம்...
ஆமா... கட்டிண்டிருக்கோம்!''
``திருப்பு திருப்புன்னான்... நான் ஸ்கூட்டரை திருப்பி...''
``பாலக்காட்டுக்கு பக்கத்துல குக்கிராமம்....''
``நீங்களும் குக்கு நானும் குக்கு!''
- இப்படி லிஸ்ட் நீளும்!
இந்தப்படத்தின் மூலக்கதை காதர் காஷ்மீரி என்ற பாலிவுட் இயக்குநர் , கதாசிரியராக எழுதிய பாகிஸ்தான் சினிமா என்பது ஆச்சர்யமோ ஆச்சர்யம். நல்ல கதை சொல்லியான பஞ்சு அருணாச்சலம் ஏன் பாகிஸ்தான் சினிமாவரை பாய்ச்சல் காட்டினார் என்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. காதர் காஷ்மீரிக்கு பணம் கொடுப்பதில் பிரச்னை என்றெல்லாம் தகவல் கசிந்தது.
ஏற்கனவே நல்ல கதை சொல்லியான பஞ்சு அருணாச்சலம், தன் மனைவி மீனா பெயரில் தயாரித்த மைக்கேல் மதன காமராஜனின் ஒரிஜினல் கதையை ஏன் பாகிஸ்தான் படத்திலிருந்து எடுத்திருந்தார் என்பதுதான் இன்றும் பலரின் சந்தேகமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன் அதற்கு பஞ்சு அருணாச்சலமே ஒரு பேட்டியில் பதில் சொல்லியிருந்தார். நடந்தது இதுதான்:
"நான்கு சகோதரர்களின் ஆள் மாறாட்ட குழப்படி கதை என்பது பாகிஸ்தான் சினிமாவிலிருந்து உருவான ஐடியாதான். கமல்தான் அந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த யோசனையைச் சொன்னார். அவர் அந்தப் படம் பார்க்கவில்லை. அந்த ஐடியாவிலிருந்து புதுக் கதையை ஒரிஜினலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் நானும் கிரேஸி மோகனும் இணைந்து திரைக்கதை வசனத்தை எழுதிவிட்டோம். ஆனாலும் முறைப்படி காதர் காஷ்மீரிக்கு டைட்டில் கார்டில் நாங்கள் கிரெடிட் கொடுத்ததோடு ஒரே தவணையில் 5 லட்சம் கொடுத்தோம். அவரும் மகிழ்ந்தார்! ஆனால் அதன்பிறகு அவர் கூடுதலாக பணம் கேட்டார். வாய்மொழி ஒப்பந்தப்படி முழுத்தொகையும் கொடுத்ததோடு ஒரே மாதிரி தோற்றம் கொண்ட சகோதரர்களின் கதை என்பதோடு ஒரிஜினலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் கொடுக்கவில்லை!" என்றார்.