Super Singer
Super Singer timepass
சினிமா

Super Singer, Cooku with Comali இனி Hit ஆகுமா? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 15

அய்யனார் ராஜன்

’இவருக்குப் பதில் இவர்’ என நடிகர் நடிகைகள் மாறுவது சீரியல்களில் வழக்கமானதுதான். கேமராவுக்குப் பின்புறம் இயங்கும் இயக்குநர்களே மாறுவதெல்லாம் கூட நடக்கும். இவை வெளியில் தெரிவதில்லை, அவ்வளவுதான். ஆனால் ஒரு சீரியலோ, ரியாலிட்டி ஷோவோ.. தயாரிப்பாளர்கள் கூட மாறுவார்கள் என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?

தொலைக்காட்சி பிசினசும் கார்ப்பரேட் மயமாகிப் போன பின்னால், இது சகஜமாகி விட்டது. கடந்த சில தினங்களாகத் தமிழ்த் தொலைக்காட்சி உலகில் ‘அப்படியா’ என ஆச்சரியத்துடன் வினவப்படும் ஒரு தகவல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மாறியது குறித்துதான்.

ஆமாம், தமிழ்நாட்டின் செல்லக்குரலைத் தேடும் ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியைத் தொடங்கியது முதல் இப்போது வரை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரித்து வந்த மீடியா மேஷன் நிறுவனத்திடமிருந்து அந்தப் பொறுப்பு கைமாற்றப்பட்டு ‘குளோபல் வில்லேஜர்ஸ்’ என்கிற நிறுவனத்தின் வசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘மீடியா மேஷன்’ வசம் இருந்தவரை நிகழ்ச்சியை அந்த நிறுவனத்தின் ரவூஃபா என்பவரே இயக்கியும் வந்தார்.

முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் வரை இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு ஹிட்டான நிகழ்ச்சியாகவே ஒளிபரப்பாகி வந்ததை யாரும் மறுக்க முடியாது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத இசை ஜாம்பவான்களே இல்லை.

இளையராஜாவின் பாடல்களை மனமுருகிப் பாடி போட்டியாளர்கள் டைட்டிலைத் தட்டிச் சென்றது நடந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நித்யஸ்ரீ, பிரியங்கா, திவாகர், நிகில் மேத்யூ, சாய் சரண் ஸ்ரீநிஷா, மூக்குத்தி முருகன், முதல் இப்போது சினிமாவில் நடிகையாகவும் வலம்வரத் தொடங்கியிருக்கும் ராஜலட்சுமி செந்தில்கணேஷ் வரை இந்த நிகழ்ச்சி, தமிழ்த்திரையுலகத்துக்குக் கொடுத்திருப்பவர்களின் பட்டியல் ரொம்பவே நீளம்.

இந்த நிகழ்ச்சியைத் தழுவியே பிற சில சேனல்கள் இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இப்படி சக்ஸஸ்ஃபுல்லாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் இப்போது இந்த திடீர்மாற்றம் ஏன்? நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.

‘’ரொம்ப வருஷமா ஹிட் நிகழ்ச்சியைத் தயாரிச்சிட்டிருந்தவங்கதான். அதனால நிகழ்ச்சியில் எது வேணும் எது வேண்டாம்கிறதை அவங்களே தீர்மானிச்சிட்டிருந்தாங்க. அதேநேரம் அவங்க ஒரு தயாரிப்பாளர் மட்டும்தான். அதனால் சேனலின் பிரதிநிதி ஒருவருக்கும் நிகழ்ச்சியைக் கண்காணிக்கற பொறுப்பு இருக்கும்.

அப்படி சேனலின் பிரதிநிதியா இருந்த ஒரு உயரதிகாரிக்கும் மீடியாமேஷன் தரப்புக்கும் கொஞ்ச நாளாகவே பனிப்போர் போயிட்டிருந்திருக்கு. நிகழ்ச்சி தொடர்பா சேனல் நிர்வாகி ஏதாவது கருத்து சொன்னால் அதைக் காது கொடுக்கறதில்லையாம் ரவூஃபா டீம்.

இந்த நிலை தொடர்ந்ததால் அந்த அதிகாரி, சேனலின் தலைமையிடமான மும்பை அலுவலகத்துக்கு தன்னுடைய குமுறலை மின்னஞ்சலில் கொட்டி அனுப்பியிருக்கார். ’முடிஞ்சா என்னை இந்தப் பொறுப்புல இருந்தே மாத்திடுங்க’ என்கிற அளவுக்கு விரக்தியின் உச்சத்தில் இருந்திருக்கிறது அவரது ஆதங்கம்.

எனவே, ‘இதுதொடர்பா என்ன ஏதுன்னு விசாரிங்க’ என மும்பை அலுவலகத்திலிருந்து சேனல் தலைமைக்கு உத்தரவு வந்ததாகத் தெரியுது. அதனுடைய தொடர்ச்சியாத்தான் கடைசியில வேற வழி இல்லாம, தயாரிப்புத் தரப்பை மாத்தியிருக்காங்க’ என்கிறார்கள் இவர்கள்.

இந்தப் பிரச்னையில் ரவூஃபா தரப்புக்கு ஆதரவாக சேனலிலேயே சிலர் பேசியதாகவும் ஆனாலும் தயாரிப்பாளர் மாற்றம் என்பதில் சேனல் தலைமையிடம் உறுதியாக இருந்ததாகவும் சொல்கிறார்கள் வேறு சிலர்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சீனியர், ஜூனியர் என இரு நிகழ்ச்சிகள் நடக்கும். இப்போது ஒளிபரப்பாகி வரும் சீனியர் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் புதியதாக தொடங்கவிருக்கும் ’ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி’யை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறதாம்.

இதில் இன்னொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ தயாரித்த மீடியா மேஷனே ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியையும் தயாரித்தார்கள். எனவே அந்த நிகழ்ச்சியுமே வரப்போகிற சீசனிலிருந்து கைமாறக்கூடுமெனத் தெரிகிறது.

’சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இரண்டுமே பழைய நிறுவனம் தயாரித்த போது ஹிட் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்களின் ஒர்க்கிங் ஸ்டைல் அப்படியிருந்தது. ஆனால் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் எப்படி இருக்குமோ’ என்கிற ஐயம் இந்த நிகழ்ச்சிகளின் உண்மையான ரசிகர்களிடம் இப்போது எழுந்திருக்கிறது. இந்த சந்தேகத்துக்கான பதில் போகப்போகத்தான் தெரியும்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.