நடிகர் கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத் ஆகியோர் 'நெல் பாதுகாப்பு மையம்’ அமைப்பின் நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்து பேசினர். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, நெல் திருவிழாக்கள் மூலமாக ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு சேர்த்தவர் தான் நெல் ஜெயராமன்.
இவர் பெயரிலேயே 'நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்' இயங்கி வருகிறது. இந்த மையத்தைச் சேர்ந்த விவசாயிகளை, கமல்ஹாசன், எச்.வினோத் ஆகியோர் சென்னையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இதில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும், நிர்வாகிகளிடம் பேசிய கமல்ஹாசன், “ தமிழர்களின் மரபிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமது வேளாண்மைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத இடம் உண்டு. வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறினார். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும். பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை. என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன்.” என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இந்த சந்திப்பின் ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கமல் நடிக்கும் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகவும் KH233 படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கமல்ஹாசனின் 233-வது படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.