பாகவதர் டைம்பாஸ்
சினிமா

தமிழ் சினிமாவை உலுக்கிய லெட்சுமி காந்தன் கொலை வழக்கு - பழைய பேப்பர் கடை | Epi 9

இந்த எத்திராஜ் தான் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியை நிறுவியவர். இந்த வழக்கு நடந்த காலமான சுமார் இரண்ரை ஆண்டுகள் சிறையில் இருவரும் கொடும் வேதனையை அனுபவித்தனர்.

Saran R

இயக்குநர் ஏ.எல்.விஜய் எத்தனையோ ஃபர்னிச்சர்களை உடைத்திருக்கிறார். அவர் லேட்டஸ்ட்டாக உடைக்கத் தயாராக இருந்தது எம்.கே.டி பாகவதரின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கொலை வழக்கை! நல்லவேளையாக  'தி மெட்ராஸ் மர்டர்' என்ற பெயரில் சோனி லிவ்-க்காக சூரிய பிரதாப் என்பவர் இயக்குகிறார். ஷோ ரன்னராக மட்டும் விஜய் இருக்கிறார். அந்த கொலை வழக்கு 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு'! அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்... 

சுதந்திரத்துக்கு முன் மெட்ராஸ் மாகாணத்தில் முன்னணி நடிகராக இருந்த தியாகராஜ பாகவதரும், காமெடியில் கோலோச்சிய தனிப்பெரும் ஆளுமை என்.எஸ்.கே என்ற கலைவாணரும் தான் அதில் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள்!

ஆச்சர்யமாக இருக்கிறதா..?தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் எப்படி அந்த வழக்கில் சிக்கினார் என்று பார்ப்போமா..?

எம்.கே.டி என்ற தியாகராஜ பாகவதரின் படங்கள் அப்போது ஹிட்டுக்கு மேல் ஹிட்டடித்த காலம். ஒரு படத்தில் 100 பாடல்கள் வரை இருந்த காலம் அது. அவர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' என்ற படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 700 நாட்கள் தாண்டி ஓடியது வரலாறு. 

அவர் காரின் பின்னால் பெண் ரசிகைகள் கூட்டம் தலைதெறிக்க ஓடிவருவார்களாம். தங்கத் தட்டில் சாப்பிட்டு, தங்கத் தாம்பாளத்தில் கால் கழுவி, வெள்ளிச் சொம்பில் பன்னீரால் வாய்க்கொப்பளித்து என ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் எம்.கே.டி பாகவதர். மனிதர் தொட்டதெல்லாம் துலங்கிய காலம் அது. அவர் நடிப்பில் வெளியான 'சிந்தாமணி' என்ற படத்தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ் என்ற நிறுவனம் அதில் கிடைத்த வருமானத்தை வைத்தே சிந்தாமணி தியேட்டர் என்ற பெயரில் புது தியேட்டரையே உருவாக்கியதெல்லாம் வரலாறு. 

சினிமா தூது என்ற பெயரில் ஒரு புகழ்பெற்ற மஞ்சள் பத்திரிகையை நடத்தி வந்தவர் தான் லெட்சுமி காந்தன். சினிமா விமர்சனம் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்களை அலசிக் காயப்போட்டு பத்திரிகையின் சர்க்குலேஷனை உயர்த்தி லாபம் பார்த்தவர் இவர். தமிழின் முதல் கிசுகிசு பத்திரிகை அதுதான். பெரும்பாலும் சுவாரஸ்யத்துக்காக நேரில் பார்த்ததைப்போல, புனைவு கலந்து எழுதுவதையே வாடிக்கையாக வைத்திருந்தவர் இவர். இவரின் எழுத்துக்களில் அதிகம் பாதிக்கப்பட்டது எம்.கே.டியும் என்.எஸ்.கே-வும் தான்!

லெட்சுமி காந்தனுக்குப் பாடம் புகட்ட எண்ணி  இருவரும் ஓரிடத்தில் தீர்த்தத்தில் திளைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுடன் இருந்தவர் ஶ்ரீராமுலு நாயுடு என்ற பக்‌ஷிராஜ் ஸ்டூடியோஸின் உரிமையாளர். அவர் சொன்ன யோசனையின் படி அன்றைய சென்னை மாகாண ஆளுநரான ஆர்தர் ஆஸ்வால்ட்டிடம் புகார் தந்து அந்தப் பத்திரிகையின் உரிமத்தை ரத்து செய்ய முடிவெடுத்தனர். அடுத்தநாளே புகார் மனு ஏற்கப்பட்டு அந்த வாரம் அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

ஆனால், லெட்சுமிகாந்தன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்தவில்லை. வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு போலியான ஆவணங்கள் மூலம் வெளியிட்டு வந்தார். அவர் எழுத்தில் 'இந்து நேசன்' என்ற பத்திரிகையில் கிசுகிசுக்கள் இன்னும் உக்கிரமாக அணிவகுத்தன. அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என லெட்சுமி காந்தனின் புனைவுக் கதை படலங்கள் விரிவடைய விரிவடைய பணமும் கொட்டியது எதிரிகளும் பெருகினார்கள். 

இப்படி பரபரப்பாக லெட்சுமிகாந்தனின் 'எழுத்து' வாழ்க்கை போய்க்கொண்டிருந்த ஓர்நாள் இரவில், வேப்பேரி அருகில் வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்குப் போய்விட்டு சைக்கிள் ரிக்‌ஷாவில் அவர் திரும்பியபோது மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். குற்றுயிரும் கொலையுயிருமாய் இருந்த லட்சுமி காந்தன் மருத்துவமனைக்குச் செல்லாமல் வேப்பேரி காவல் நிலையத்துக்குப்போய் தன்னை அடையாளம் தெரியாதவர்கள் குத்தியதாக சொல்லி மயங்கியிருக்கிறார். காவல்துறையினர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரவு நன்றாக உடல்நலம் தேறியவர், மறுநாள் இறந்தது இன்றுவரை மர்மமாக இருக்கிறது.

லட்சுமி காந்தனின் வழக்கறிஞர் நண்பரின் முயற்சியால் சந்தேகம் எழுப்பப்பட்டு குற்றப்பத்திரிகையில் தியாராஜ பாகவதர், ஶ்ரீராமுலு நாயுடு மற்றும் என்.எஸ்.கே பெயர்கள் சேர்க்கப்பட்டன. தமிழகத்தின் முன்னணி வழக்கறிஞர்களான ராஜாஜி, வி.டி.ரங்கசாமி, கோவிந்தசாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆகியோர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகி வாதாடினர். 

வழக்கு விசாரணையின் முடிவில் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்கேவும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

(இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு 1955-ல் இந்தச் சட்டம் நீக்கப்பட்டது)

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  அதிலும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது. லண்டனில் இருக்கும் ப்ரிவ்யூ கவுன்சிலுக்கும் மேல்முறையீடு செய்தார்கள். வழக்கை சரியாக கீழமை நீதிமன்றம் விசாரிக்கவில்லை எனச் சொல்லி மறு விசாரணைக்கான உத்தரவும் அங்கிருந்து வந்தது. 

இறுதியாக சென்னை நீதிமன்றத்தின் ஹேப்பல், ஷஹாபுதீன் அமர்வுக்கு முன் இவ்வழக்கு வந்தது. காரணமே இல்லாமல் வழக்கு இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ( ஷஹாபுதீன் பின்னாளில்  பாகிஸ்தானுக்கு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியானார்) கடைசியாக சென்னையின் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் இவர்களுக்காக வாதாடினார். புதிய பெஞ்சிலிருந்து, 'இருவரும் குற்றமற்றவர்கள்' என்று தீர்ப்பளிக்கப்பட்டு ஒருவழியாக விடுதலை செய்யப்பட்டனர். 

இந்த எத்திராஜ் தான் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியை நிறுவியவர். இந்த வழக்கு நடந்த காலமான சுமார் இரண்ரை ஆண்டுகள் சிறையில் இருவரும் கொடும் வேதனையை அனுபவித்தனர். தாங்கள் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் விற்றுத்தான் வழக்கை நடத்தி வந்தனர். பாகவதர் கைது செய்யப்படும்முன் 12 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். வழக்கிலிருந்து வெளியில் வந்து படவாய்ப்பே இல்லாமல் முடங்கிப்போனார்.

 வறுமையிலும் நோயின் காரணத்தாலும் பாகவதர் இறந்துபோனார். என்.எஸ்.கே மட்டும் ஃபீனிக்ஸ் போல் நிறைய படங்கள், நாடகங்களில் நடித்தார். தன் 48-வது வயதில் அவரும் மறைந்தும் போனார்.லெட்சுமி காந்தனை யார் கொலை செய்தது என்ற மர்மம் இன்றும் நீங்கவில்லை!

(தூசு தட்டுவோம்..!)