tamil cinema timepassonline
சினிமா

Tamil Cinema : Vaarisu, Jailer, Vikram, PS 1 - கூட்டணி போட்டு வென்ற படங்களின் லிஸ்ட் !

’விக்ரம்’ படத்துல ’தம்பி நீ வான்னு விஜய் சேதுபதியையும், ’சேட்டா இவிட வரணும்’னு பகத் பாசிலையும், ’லொகேஷனும் சொல்றேன் கார்ல வந்துரு’ன்னு நரேன்கிட்டையும் சொல்லி செம கலெக்‌ஷனும் பார்த்திருக்கார் நம்மவர்.

டைம்பாஸ் அட்மின்

‘எப்பவும் நாங்க தனி டிராக்குலதான் போவோம்’னு ஒத்தைக்கால்ல ஒத்தையா நின்னு அடம்பிடிச்ச தமிழ் ஹீரோக்கள், தனக்குன்னு ஒரு ஸ்டைல், தனக்குன்னு ஒரு ரசிகப் பட்டாளம், தனக்குன்னு தனி மேக்கப்மேன்னு வெச்சி வாழ்ந்துட்டுதான் இருந்தாங்க.

எந்த ஹீரோவோடவும் கூட்டும் இல்ல.. குருமாவும் இல்லன்னு தனித்தனியா தவுல் வாசிட்டு இருந்தாங்க. ஆனாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி நடிச்சி ’கூண்டுக்கிளி’, கமல் – ரஜினி நடிச்ச ’நினைத்தாலே இனிக்கும்’, விஜய் – அஜித் நடிச்ச ‘ராஜாவின் பார்வையிலே’ மாதிரி ரெண்டு ஹீரோ படங்கள் வந்துட்டு இருந்துச்சி… கொஞ்ச காலத்துக்கு அப்புறம் ஆளாளுக்கு வெற்றி ரெக்கை முளைச்சி பறக்க ஆரம்பிச்சதும் ’வர்றிய்யா உன் படமா.. என் படமா.. மோதிப்பாக்கலாமா..?’ ங்கிற ரேஞ்சுல்தான் இருந்தாங்க. ஆனா, இப்போ மறுபடியும் ஜோடி சேர்ந்து கலக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்டி கூட்டா சேர்ந்து கல்லா கட்டின சில படங்கள்.

1 . மணிரத்தினம் அவ்வப்போது ஆர்ட்டிஸ்ட் கூட்டு பிரார்த்தனை பண்ணிட்டுதான் இருக்காரு. கார்த்திக் – பிரபுவை வெச்சி ’அக்னி நட்சத்திரம்’, மாதவன், சூர்யா, சித்தார்த் போன்ற ஹீரோக்களை சேர்த்து ’ஆயுத எழுத்து’, அரவிந்தசாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி ஹீரோஸ் கேங்கை வெச்சி ’செக்கச் சிவந்த வானம்’னு ஒரு கேங்க்ஸ்டர் படத்தை பண்ணியிருப்பார்.

நாலு ஹீரோஸ் பத்தாதுன்னு மொட்டை மாடியில நின்னு, கன்னத்துல கை வெச்சி யோசிச்சப்பதான் ’பொன்னியின் செல்வம்’ ஒன், டூ பார்ட்டுலயும் ஒட்டுமொத்த தமிழ் ஹீரோஸ், ஹீரோயின்களையும் இறக்கிவிட்டிருப்பாரோ என்னவோ… ஒவ்வொரு ஃபிரேம்லயும் ஏதாச்சும் ஒரு பவர்புஃல் ஸ்டார் மிணுக்கிற மாதிரி பார்த்துக்கிட்டார். அடுத்து ஒரு படம் எடுத்தா ஆல் லாங்வேஜ் ஹீரோக்கள் ஒவ்வொருத்தருக்கும் கால் பண்ணி கால்ஷீட் வாங்கி, மொத்தப் படத்துலயும் வர்ற பத்து பக்க டைலாக்கையும் ஆளுக்கு ரெண்டு வரியா பிரிச்சுக்கொடுத்துடுவார் போல... எத்தனை ஆக்டர்ஸ் இருந்தாலும் கதைங்கிற கப்பு முக்கியம் பிகிலூ..லூ..லூ.லூ..

2 . சமீபத்துல வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச ’ஜெயிலர்’ படத்துக்கு கூட மோகன்லால், சிவராஜ்குமார், கிஷோர், ஜாக்கி ஷெராப்னு வேற லாங்வேஜ் ஹீரோக்கள் தேவைப்பட்டிருக்காங்க. இப்டி பிரபலமான ஹீரோக்களை போடறதால எல்லா மொழி ரசிகர்களையும் திருப்தி படுத்தினமாதிரியும் இருக்கும். படம் நெனைச்ச அளவுக்கு வசூலையும் வாரிக்கொட்டும்.

இப்டி மற்ற ஆர்ட்டிஸ்டுகளுக்கு சீன்கள் பிரிச்சுக் கொடுக்கிறது மூலமா.. ரஜினி சார் பத்து இருபது நாட்கள் படப்பிடிப்புக்கு வந்தாலே போதும். அவருக்கான சீன்களை முடிச்சு வீட்டுக்கு அனுப்பிடலாம். அதுவுமில்லாம போஸ்டர்ல நாலஞ்சு ஹீரோக்கள் தலைய போடுறதால ஆடியன்ஸும் தயங்காம தியேட்டர்குள்ள வருவாங்கங்கிற கால்குலேஷனாவும் இருக்கலாம். என்ன ஒண்ணு நிறைய ஹீரோக்கள்தான் இருக்காங்களே அப்றம் கதை எதுக்குன்னு சில இயக்குனர்கள் ஸ்டோரி பண்ணாமலே விட்டுர்றாங்க. அதான் அவங்க பண்ற பெரிய தப்பு.

3 . சூப்பர் ஸ்டார் ரஜினியே படம் ஹிட்டாகிற பார்முலாவை ஏத்துக்கிட்டு எல்லா நடிகர்கலோடவும் ஒண்ணா கைகோர்த்துக்கிட்டு படம் பண்ணும்போது கமல்ஹாசன் பண்ணமாட்டாரா..? அப்டி.. ஒண்ணுமுண்ணா வந்தோம் ஒண்ணா சேர்ந்து படமும் பண்ணுவோம்னு தற்போது ரிலீஸான ’விக்ரம்’ படத்துல ’தம்பி நீ வான்னு விஜய் சேதுபதியையும், ’சேட்டா இவிட வரணும்’னு பகத் பாசிலையும், ’தம்பி நரேன் எங்க ஆளையே காணும் ஷூட்டிங் டேட்டும், லொகேஷனும் சொல்றேன் கார்ல வந்துரு’ன்னு அவர்கிட்டையும் சொல்லிட்டு படத்தை எடுத்து ரிலீஸும் பண்ணி செம கலெக்‌ஷனும் பார்த்திருக்கார் நம்ம நம்மவர்.

இந்த ஏஜ்ல கமல் மட்டும் நடிச்சா படம் பார்க்க வர்ற இளசுங்களுக்கு ஏமாற்றமா இருக்கும்னு புரிஞ்சு வெச்சிக்கிட்டதோட, இந்திய சினிமாவோட இன்றைய ட்ரெண்டிங்கும் இதாங்கிற சூட்சமத்தையும் கற்று வெச்சிருக்கார். உலக நாயகனோட அரசியல் கணக்குதான் தப்பு தப்பா போட்டு தடுமாறி நிற்பாரே தவிர மற்றபடி சினிமாவுல கல்லா கட்டுற கணக்குல நம்ம ’மையம்’ கில்லிதான்.

4 . படம் முழுக்க இளைய தளபதி விஜய் ஒருத்தரே நடிச்சாலும் அவரோட ரசிகருங்க ரிபீட்டு.. ரிபீட்டுன்னு திரும்பத் திரும்ப படம் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அவங்களோட கலெக்‌ஷன் மட்டும் பட பட்ஜெட்டுக்கு தாங்காது. அதுவும் இப்போல்லாம் ஹீரோ டேட் கெடைச்சிட்டாப்போதும் கதையெல்லாம் படம் முடிச்சிட்டுப் பார்த்துக்கலாம்னு சூட்டிங்க் போற டைரக்டர்ஸ்தான் அதிகம். அப்டி சரியான கதை பண்ணாட்டினா எப்பேர்பட்ட ஹீரோவா இருந்தாலும் ரோட்ல போற வர்ற ஆட்களை கையைப்புடிச்சி இழுத்துக்கொண்டுபோய் தியேட்டர்ல குந்த வைக்கிற நிலமை வந்துடும்.

அதனால.. சில ஹீரோக்களோட முகங்கள் படத்தை கொஞ்சமாச்சும் காப்பாத்தட்டுமேங்கிற சின்ன சீக்ரெட்டு சிஸ்டமேட்டிக்தான் இதுவும். அப்டிதான் விஜய் நடிச்ச ’வாரிசு’ படம். விஜய்யோட சேர்த்து எஸ்.ஜே.சூர்யா, ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், சரத்குமார்னு ஒரு பெரிய ஹீரோ குருப்பே நடிச்சிருப்பாங்க அதே மாதிரி ’லியோ’ படத்துலயும் அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப்னு நிறைய ஆர்ட்டிஸ்ட் ஸ்கிரீனை ஃபில்லப் பண்ணிருப்பாங்க.

இதுலயும் வழக்கம்போல விஜய் படத்துக்கு அசிஸ்டெண்டு இயக்குனர்கள் மண்டைய பிச்சுக்கிக்கிட்டு ரெடி பண்ணின பன்ஞ் டய்லாக்குக்குகள் இருந்தாலும்.. அதுவும் ஓல்டு பேஷனாயிடுச்சி. இப்போ… ஒரு படத்துல மொத்தம் எத்தனை ஹீரோக்கள் இருங்காங்கிறதுதான் ஆடியன்ஸோட அளவீடா இருக்கு.

5 . சமீபத்துல வெளியாகி ’நல்லாருக்கு.. சுமாராயிருக்கு’ன்னு ரெண்டு விதமான ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்ல குழப்பிபோன படம்தான் ’மார்க் ஆண்டனி’ இதுலயும் ரெண்டு ஹீரோஸ் ஒருத்தர் விஷால் இன்னொருத்தர் பெர்ப்ஃபாம் பிசாசு எஸ்.ஜே.சூர்யா. கூடவே சுனில், செல்வரகவனும் நடிச்சிருப்பாங்க. டைம் டிராவல் மிஷின் பத்தின கதை, அதுவும் ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிக்கப்பட்டது. விஷாலுக்கு அப்பன் புள்ளை டபுள் ஆக்‌ஷன், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அதே மாதிரி ரெண்டு கேரக்டர். சில்க் ஸ்மிதா மாதிரி சாயல்ல உள்ள பொண்ணை சில்கா நடிக்க வெச்சிருப்பாங்க.

எஸ்.ஜே.சூர்யா கூட வேற எந்த ஹீரோவையும் மாற்றா போட்டிருக்கலாம். ஆனா, எஸ்.ஜே.எஸ்ஸுக்கு மாற்றா வேற ஒரு ஆக்டரை கற்பனை பண்ணிப் பார்த்தோம்னா அந்த கற்பனையே கல்லெடுத்து அடிக்கும். அந்த அளவுக்கு கலகலப்பான கல்யாண விருந்தே போட்டிருப்பாரு. இந்த ’பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு’ங்கிற டயலாக் எத்தனை வருஷத்துக்கு நம்ம பின்னாடியே அலையும்னு தெரியலை.

- உத்தமபுத்திரன்.