மயில்சாமி
மயில்சாமி timepass
சினிமா

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் - ரஜினிகாந்த்

டைம்பாஸ் அட்மின்

நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாள்களைச் சந்தித்து பேசிய அவர், "மயில்சாமி எனது நெடுங்கால நண்பர். அவர் 23,24 வயதில் மிமிக்கிரி கலைஞராக இருக்கும் போதே எனக்கு அவரைத் தெரியும். மிமிக்கிரி கலைஞனாக இருந்து நகைச்சுவை நடிகராக இருந்தார்" என்று தெரிவித்தார்.

"மிகத் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் அவர். அதைவிட தீவிரமான சிவபக்தராகவும் இருந்தார். நாங்கள் அடிக்கடி சந்திக்கும் போது நான் சினிமா உலகம் பற்றி பேசினாலும், அவர் எம்ஜிஆர், சிவன் இந்த இரண்டைப் பற்றி மட்டும் தான் பேசுவார். நெருங்கிய நண்பர்களாக இருந்தும் நாங்கள் இணைந்து நிறைய படங்களில் நடிக்கவில்லை" என்று அவர் கூறினார்.

"ஒவ்வொரு முறையும் கார்த்திகை தீபத்திற்கும் திருவண்ணாமலைக்கு சென்று, அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்து பரவசமடைந்து அங்கிருந்து எனக்கு போன் செய்து பரவசப்படுவார். கடந்த முறை கார்த்திகை தீபத்தின் போதும் எனக்கு போன் செய்தார் நான் சூட்டிங்கில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை.

விவேக் - மயில்சாமி இந்த நகைச்சுவை நடிகர்களின் இழப்பு சினிமா உலகம், அவர்களின் நண்பர்களுக்கு மட்டும் இல்லை, சமூகத்திற்கே மிகப்பெரிய இழப்பு. இரண்டுபேருமே நல்ல சிந்தனைவாதிகள், சமூக அக்கறையுள்ள மனிதர்கள். அவர் இந்த சிவராத்திரியன்று காலமானது ஏதோ தற்செயல் நிகழ்வு கிடையாது. அவருடைய (வானத்தை நோக்கி கை காட்டுகிறார்) கணக்கு."

அவருடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் கூப்பிட்டுக்கொண்டார். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. மயில்சாமியின் வாரிசுகளுக்கு சினிமா உலகில் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, 'கடைசியாக சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட சிவன் கோயிலில் ரஜினிகாந்த் பாலபிஷேகம் செய்யவேண்டும் என்று டிரம்ஸ் சிவமணியிடம் மயில்சாமி கூறியது' குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "ஆமங்க நானும் கேள்விப்பட்டேன். அதுபற்றி சிவமணியிடம் விசாரித்துவிட்டு கண்டிப்பாக மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்" என்று கூறினார்.