'ராட்சசன்', 'நெஞ்சுக்கு நீதி' படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்தவர் நடிகர் சரவணன். அவரிடம் பேசியதில்
"அரியலூர் மாவட்டம் வெற்றியூர்தான் என் சொந்த ஊர். டிப்ளமோ படிச்சிட்டு திருச்சில ஒரு மெடிக்கல் ஷாப்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா ஆசை இருந்துச்சு. சரி முயற்சி பண்ணித்தான் பாப்போமேனு 2005ல சென்னை வந்து இறங்கினேன்.
ரெண்டு வருஷம் வாய்ப்பு தேடி அலைஞ்சேன். காமெடி நடிகர் முத்துக்காளை அண்ணன் கூட சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் எல்லாம் போவேன். அங்கே எப்படி நடிக்கிறாங்க எப்படி டப்பிங் பேசுறாங்கனு ஓரமா நின்னு கவனிப்பேன். சினிமா ஆடிஷன்ஸ் அட்டன் பண்ணுவேன். அங்கே நடிச்சிக் காட்ட சொல்வாங்க. 'அந்நியன்' ஸ்டைல்ல எனக்குத் தெரிஞ்சதை பண்ணிக்காட்டுவேன்.
அப்படியே சின்னச் சின்ன கேரக்டர்கள் கிடைக்க ஆரம்பிச்சது. குறிப்பிட்டுச் சொல்லனும்னா 'நான்' படத்துல பஸ்ல சீன்ல விஜய் ஆண்டனி சார் பக்கத்துல நான்தான் உக்காந்திருப்பேன். ஆக்சிடண்ட் ஆனதும் என் சர்டிபிகேட்ட எடுத்துட்டு போய்தான் விஜய் ஆண்டனி சார் சலீமா மாறுவார். அந்தப் படத்துல நடிச்சதுல இருந்து வெறும் சரவணனா இருந்த நான் நான் சரவணன் ஆகிட்டேன்".
உசுர கொடுத்து நடிச்சிருந்தாலும் நான்தான் 'ராட்சசன்' வில்லன்னு நீங்களா சொன்னாதான் நாலு பேருக்கு தெரியும். அந்த வருத்தம் இருக்கா ?
"எப்படி இல்லாம இருக்கும். ஏ.வி.எம் தியேட்டர்ல என் சீட்டுக்கு முன்னால ஒரு குடும்பம் கிறிஸ்டோபர், மேரி பெர்னாண்டஸ் சீனுக்கு பாப்கார்ன் எல்லாம் பறக்க விட்டு கத்திட்டு இருந்தாங்க அவங்கள கூப்பிட்டு நான்தாங்க அதுன்னு சொல்லணும் போல இருந்துச்சு. சொன்னா நம்பாம சிரிச்சிடுவாங்களோனு சொல்லாமலே விட்டுட்டேன். நான் சென்னைல ஒரு வாடகை வீட்லதான் குடியிருக்கேன்.
என் பக்கத்து வீட்ல ஒருத்தர் 10 வருசமா இருக்கார். நானும் கடந்த 10 வருசமா அவரை பாக்குறேன். ஒருவாட்டி கூட அவர் என்கிட்ட வந்து பேசினதோ சிரிச்சதோ கிடையாது. 'ராட்சசன்' பார்த்துட்டு அவர் மட்டும் இல்லாம அவர் குடும்பத்தையே கூட்டிட்டு வந்து பாராட்டி பேசிட்டு போனார். மறக்க முடியாத சம்பவம் அது
'ராட்சசன்' மேக்கப் பத்தி சொல்லியே ஆகணும். தினமும் ஷூட்டுக்கு முன்னால 6 மணி நேரம் மேக்கப் போடுவாங்க. மேக்கப் சரியா செட்டாக ஒரு கெமிக்கல் யூஸ் பண்ணுவாங்க அதுல இருந்து வர்ற நெடி அடிவயிறு வரைக்கும் இறங்கி அடிக்கும். யாரையாவது தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு தோணும். அந்தளவு பொறுமையை சோதிக்கும். எங்கயும் நகர முடியாது, எதுவும் சாப்பிட முடியாது. இப்படி ரொம்ப கஷ்டப்பட்டுதான் அந்தப் படத்துல நடிச்சேன்"
உங்களைப் பத்தி வந்த மீம்ஸ்களைப் பார்த்தீங்களா ?
வடிவேல் சார் டெம்பளேட் வெச்சு "ஆளப்பார்த்தா டம்மி பீஸ் மாதிரி இருந்துட்டு பயங்கரமான நடிகனா இருக்காரே"ன்னு எனக்கு மீம்ஸ் போட்டாங்க. என்னைப் பத்தி வந்த மீம்ஸ் எல்லாம் பாசிட்டிவாதான் இருந்துச்சு. தமிழ்ல மட்டும் இல்லாம மலையாளத்துலயும் நிறைய மீம்ஸ் வந்துச்சு.
மலையாளம் தெரிஞ்சவங்ககிட்ட அதுல என்ன போட்டிருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்குவேன். எனக்கு சப்போர்ட் பண்ணிய மீம் கிரியேட்டர்ஸ் எல்லாருக்கும் நான் நன்றியை தெரிவிச்சிக்கிறேன்.
நெஞ்சுக்கு நீதில நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க ?
'நெஞ்சுக்கு நீதி' முதல்நாள் ஷூட்ல 15 அடி தூரத்துல உதய் சார் நின்னுட்டு இருந்தார். அவர்கிட்ட எப்படி போய் பேசலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு அவரே "சரவணன் நீங்க 'ராட்சசன்'ல சூப்பரா பண்ணியிருந்தீங்க"னு பாராட்டி கை கொடுத்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு அப்படியே அதிர்ச்சியாகி நின்னுட்டேன்.
அவர் பெரிய அரசியல் குடும்பத்து வாரிசு சும்மா ஜாலிக்கு சினிமால நடிக்க வந்திருக்கார்னு சிலர் சொல்றாங்க. ஆனா, உண்மை என்னன்னா அவருக்கு சினிமா மேல அவ்ளோ ஆர்வம் இருக்கு. அதே மாதிரி அரசியல்ல அவர் தலைமைக்கு வந்தா இன்னும் நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது
நான் திருச்சில மெடிக்கல்ல வேலை பார்த்தேன்னு சொன்னேன்லயா அப்போ ஸ்டாலின் சார் திருச்சி வந்திருந்தாங்க. எங்க பக்கத்து கடை அண்ணன் ஒருத்தர் கால் நடக்க முடியாதவர். அவர் ஒரு மாலையோட ஸ்டாலின் சாருக்காக ரோட்ல காலையில இருந்து காத்துக்கிடந்தார்.
அவரால கண்டிப்பா அந்த மாலையை அவருக்கு போட முடியாதுன்னு எனக்கு தோணுச்சு. அவரோட ஆசையை எப்படியாவது நிறைவேத்தணும்னு நான் மாலையை வாங்கி ஸ்டாலின் சார் வண்டி மேலே தூக்கி வீசினேன்.
அடுத்த செகண்ட் 2 மெஷின் கன் டக்குன்னு என் பக்கம் திரும்புச்சு. நான் அலறிட்டேன். அப்பறம் ஸ்டாலின் சாரே அந்த துப்பாக்கிகளை விலக்கிவிட்டார். 'நெஞ்சுக்கு நீதி' பார்த்துட்டு முதல்வர் பாராட்டினதா சொன்னாங்க. இன்னும் அவரை நேர்ல சந்திச்சு பேச வாய்ப்பு அமையலை. சந்திக்கிற ஆசை இருக்கு.
தொடர்ந்து வில்லனா நடிக்கிறது போரடிக்கலயா ?
"வில்லனா நடிக்கிறதுல நிறைய அட்வான்டேஜ் இருக்கு. ஹீரோன்னா நல்லவனா மட்டும்தான் நடிக்க முடியும். ஆனா வில்லன்ல நிறைய வெரைட்டி காட்ட முடியும். சின்ன லுக்ல ஒருத்தரை பயமுறுத்த முடியும். நம்ம தமிழ் சினிமால ஆர்.பி.விஸ்வம்னு ஒரு வில்லன் நடிகர் இருந்தார். நான் சின்ன வயசுல அவர் படங்கள் பார்த்து பயந்திருக்கேன். இப்போ பெயர் வைக்காத ஒரு படத்துல ஹீரோன்னு சொல்ல முடியாத ஹீரோ மாதிரி ஒரு கேரக்டர் பண்ணிக்கிட்டு இருக்கேன்"
உங்க ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு ?
"சினிமா காரனுக்கு காலையில பிரியாணி கிடைக்கும் .மதியம் பழைய சோறு கிடைக்கும். நைட்டு அதுவும் சில நேரம் கிடைக்காது. இதுதான் சினிமா வாழ்க்கை. அதை ஏத்துக்கிட்டு என்னை புரிஞ்சிக்கிட்ட என் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க. அதுதான் என்னை தொடர்ந்து இங்கே ஓட வெச்சிக்கிட்டு இருக்கு. இன்னும் பெருசா வருவேன்னு நம்பிக்கையும் இருக்கு". என்கிறார் சரவணன்.