Yuvan Shankar Raja  Timepass
சினிமா

Yuvan Vibe: கீழக்கரையில் யுவன் மாதக்கணக்கில் இருப்பதன் பின்னணி இதுதானா?

2015-ல் கீழக்கரை மாப்பிள்ளை ஆனபிறகு கொஞ்சம் கொஞ்சமாக கீழக்கரைவாசியாகவே மாறிவிட்டார். தன்னை அப்துல் காலிக் என்று அழைத்தால் சந்தோஷப்படும் நபராக மாறிவிட்டார். ஏன் இந்த திடீர் மாற்றம்?

Saran R

யுவன் ஷங்கர் ராஜாவை  இப்போதெல்லாம் சென்னையில் பார்க்க முடிவதில்லை. அதற்குக் காரணம் 2015-ல் கீழக்கரை மாப்பிள்ளை ஆனபிறகு கொஞ்சம் கொஞ்சமாக கீழக்கரைவாசியாகவே மாறிவிட்டார். தன்னை அப்துல் காலிக் என்று அழைத்தால் அதிகம் சந்தோஷப்படும் நபராகவும் மாறிவிட்டார். ஏன் இந்த திடீர் மாற்றம்?
சுருக்கமாக பார்க்கலாம்.

அவருக்கும் கீழக்கரையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜஃப்ரூன் நிஷாவுக்கும்  திருமணம் ஆன புதிதில் கீழக்கரைக்கு மாதம் ஒருமுறை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் யுவன். துபாயிலும் சென்னையிலும் ஜஃப்ரூன் நிஷாவின் குடும்பம் இருந்தாலும் அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மா தற்போது வசிப்பது கீழக்கரையில் தான். கீழக்கரையில் இருக்கும் 9 பங்களா ஏரியாவில் பள்ளிவாசல் பக்கத்திலேயே இருக்கும் அந்த வீட்டை யுவன் அதிகம் நேசிக்கக் காரணமே அந்த மேலத்தெருவில் உள்ள புதிய பள்ளிவாசல் தான். ஜஃப்ரூனை சந்திப்பதற்கு முன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர் யுவன். அப்போது அஜ்மீர் தர்காவில் ஆரம்பித்து ஏர்வாடி தர்கா வரை ஆன்மீக நாட்டத்தில் பயணித்திருக்கிறார். அந்த சமயத்திலேயே ஒருமுறை இந்தப் பள்ளிவாசலுக்கு வந்திருக்கிறார். பின்னாளில் ஜஃப்ரூன் நட்பு கிடைத்தபோது இதைச் சொன்னதும் ஆச்சர்யமாகி இருக்கிறார் ஜஃப்ரூன்.

சென்னையில் வீட்டில் தொழுகை செய்யும் அவருக்கு பள்ளிவாசல் சென்று தொழுவது சவாலாக இருந்ததால் கீழக்கரையின் அமைதி சூழ்ந்த தென்னந்தோப்புகள், கடற்கரை, பிரமாண்டமான பள்ளிவாசல் ஆகியவை மனசுக்கு இதமாகவும் தொழுகைக்கு உகந்ததாகவும் இருப்பதாக சொல்கிறார்.

'அம்மா போனபிறகு என்னை மீட்டுத் தந்தது அல்லா தான். அவர் இல்லையென்றால் குடிப்பழக்கத்தில் கரைந்து காணாமல் போயிருப்பேன். கீழக்கரையில் அவரோடு நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன்!' என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொன்னார்.

அதனால் இப்போதெல்லாம் மாதத்தில் பாதி நாட்கள் கீழக்கரையில் இருக்கிறார். சென்னையில் இருக்கும் ரசிகர்கள் தொந்தரவு கீழக்கரையில் ஆரம்பத்திலிருந்தே இல்லை. யுவனை ஆரம்பத்தில் ஆச்சர்யமாக பார்த்த சிலரும் இப்போது, 'இது நம்ம ஊரு புள்ளப்பா' என்பதுபோல கேஷுவலாகக் கடந்து செல்கிறார்கள். 'யுவனுக்கும் இது புதுசாக இருப்பதால் அதிகம் கீழக்கரையை நேசிக்கிறார்' என்கிறார் அவர் மனைவி ஜஃப்ரூன். துபாயில் டிஸைனராக இருக்கும் இவர், தன் கணவரின் கேரியருக்காக தற்போது கீழக்கரையில் அதிகம் வசிக்கிறார். மாதத்தின் சில நாட்கள் யுவனோடு துபாய் போய்விட்டு வருகிறார் ஜஃப்ரூன்.

யுவன் சென்னையிலிருந்து ஃப்ளைட் பிடித்து மதுரை போனால், கீழக்கரையில் இருக்கும் யுவனின் லேட்டஸ்ட் பிஎம்டபுள்யூ கார், மதுரை ஏர்ப்போர்ட்டுக்கு டிரைவர் சகிதம் அனுப்பப்படுமாம். யுவனின் மச்சான்கள் இரண்டு பேர் பாதுகாவலாய் கூடவர... அடுத்த இரண்டு மணி நேரக் கார் பயணத்தில் கீழக்கரை வீட்டுக்கு வந்துவிடுவார் யுவன். கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டும் யுவனே கீழக்கரைக்கு டிரைவ் செய்கிறார்.

கீழக்கரை வந்த முதல் வேளையாக கைலியும் டீ ஷர்டும் அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்குக் கிளம்பிப் போய்விட்டு அப்படியே கீழக்கரைக்குள் நடமாடுவதை வாடிக்கையாக்கி விட்டார் யுவன்.

'கருப்பு திராவிடன்... பெருமைமிகு தமிழன்' என்ற ட்ரெண்டிங் சோஷியல் மீடியா ஷேரிங்கை கீழக்கரை கடற்கரையில் இருந்துதான் போஸ்ட் செய்தார் யுவன்.

கீழக்கரையில் இருக்கும்போது மாலை வேளைகளில் தென்னந்தோப்புக்குள் மச்சான்களின் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, தோப்பில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பது என ஏர்வாடிக்கு செல்லும் வழியில் இருக்கும் 'செங்கல் நீரோடை' எனும் கிராமத்தை தன் ஃபேவரைட் ஸ்பாட்டாக்கி வைத்திருக்கிறார் யுவன் எனும் அப்துல் காலிக்.

- சமர்