Tamil serial Timepass
சினிமா

TamilSerials: கடைத்தெருவுக்கு வரும் ‘கடை’நடிகரின் வீட்டு பஞ்சாயத்து|சிறிய இடைவேளைக்குப் பிறகு|Epi6

பிரபல பிரைம் டைம் சீரியலில் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும், தம்பிகளையெல்லாம் அரவணைத்து ஆளாக்கிவிடும், மனைவியை அப்படித் தாங்குபவராக நடிக்கும் நடிகர் நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிராக வாழ்ந்து வருகிறார்.

சீரியலில் மாமியார் மருமகளாக முறைத்துக் கொண்டு நடிக்கும் இரண்டு நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜமாகவே எலியும் பூனையுமாக இருப்பது பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம்.

இந்த வார மேட்டர் அதற்கு நேரெதிர். பிரபல பிரைம் டைம் சீரியலில் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக தம்பிகளையெல்லாம் அரவணைத்துச் சென்று ஆளாக்கி விடும் பொறுப்புள்ள மூத்த மகனாக... மனைவியை அப்படித் தாங்குபவராக நடித்து வரும் நடிகர் ஒருவர் நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிராக வாழ்ந்து வருகிறார் என்பதுதான் விஷயம். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், ’கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துகிறார்’ என அவரது மனைவி போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து விட்டால்? கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வரத்தானே செய்யும்! ‘கடை’ வைத்திருக்கிற நடிகர் என்பதற்காக விதிவிலக்கு இருக்குமா என்ன?

யார் அந்த நடிகர்? என்ன பிரச்னை எனப் பார்க்கலாமா?

பக்கத்து மாநிலத்தையொட்டி அருவி, பள்ளத்தாக்கு என இயற்கை வளம் சூழ அமைந்திருக்கும் ஊர்தான் நடிகருக்குச் சொந்த ஊர். கல்லைக் கூட நடிக்க வைத்து விடுகிற இயக்குநருக்குச் சொந்தக்காரர் எனச் சொல்வார். இருபதாண்டுகளுக்கு மேல் நடித்து வருகிற போதும் சென்னையில் வீடு இல்லை. ஷூட்டிங் இருந்தால் சென்னை கிளம்பி வரும் நடிகர் ஷூட்டிங் முடியும் வரை ஹோட்டலில்தான் தங்குகிறார். ஷூட்டிங் முடிந்ததும் சொந்த ஊருக்குக் கிளம்பி விடுவார்.

’குடும்பத்தையும் சென்னைக்குக் கூட்டி வந்து விட வேண்டியதுதானே’ என சக நடிகர்கள் கேட்டால், ‘ஊரில் விவசாயம் பார்க்கிறேன்’ ’மனைவி பிள்ளைகளுக்கு நகர வாழ்க்கை பிடிக்காது’ என ஏதோவொரு காரணம் சொல்வார்.

சீரியல்களில் வெள்ளந்தியாக நடித்து விருதுகள் பல வாங்கிய போதும் கூட அந்த நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அழைத்து வந்ததே கிடையாது. இவருக்குக் குடும்பம் பிள்ளைகள் இருக்கிற விஷயமே உடன் நடிக்கும் பலருக்குத் தெரியாது என்கிறார்கள்.

இப்படியே வருஷங்கள் கடக்க, ஒருகட்டத்தில் ‘இந்த மனுஷன் ஏன் நம்மை சென்னைக்குக் கூட்டிட்டே போக மாட்டேங்குறார்’ என நினைக்கத் தோன்றியிருக்கிறது. அதைக் கணவரிடம் கேட்டபோது, ‘அப்ப நீ என்னை சந்தேகப்படுறியா’ எனப் பதிலுக்கு நடிகரும் வார்த்தைகளை விட, பிரச்னை அப்படியே வளர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் நடிகரின் இரண்டு மகன்களும் வளர்ந்து கல்லூரி கிளம்பத் தயாராகி விட்டார்கள். ஒரு மகன் சென்னையிலும் ஒரு மகன் மதுரையிலும் சேர்ந்தார்கள்.

‘இப்ப வீட்டுல தனியாதான் இருக்கேன். நீங்களும் பாதி நாள் சென்னையில் இருக்கீங்க, பையனும் கல்லூரியில் விடுதியில எதுக்கு இருக்கணும், பேசாம அங்க ஒரு வீடு பாருங்க, நானும் வந்திடுறேன்’ என மறுபடியும் கேட்டிருக்கிறார் அந்த மனைவி.

அப்போதும் நடிகர் காதுகொடுக்காமல் போகவே, மனைவிக்கு ஆத்திரம். அப்படின்னா, நான் சந்தேகப்பட்டாதான் என்ன தப்பு’ எனக் கேட்டாராம் அந்த மனைவி.

இப்படிப் பிரச்னை பெரிதானதால், கடந்த சில மாதங்களாகவே, ஷூட்டிங் இல்லையென்றாலும் கூட சென்னையிலேயே தங்கத் தொடங்கி இருக்கிறார் நடிகர்.

வேறு வழியில்லாமல் அவருடைய மனைவி விவகாரத்தைத் தன் பிறந்த வீட்டுக்குக் கொண்டு செல்ல, அவருடைய உடன்பிறப்புகளோ, ‘நல்லா இருக்கப் போய்த்தானே, சேட்டை பண்ணிட்டிருக்காப்ல’ கைய கால உடைச்சிட்டு வீட்டுல போட்டுக் கஞ்சி ஊத்திடலாமே’ என்பது வரை யோசித்தார்களாம். ஆனாலும் சகோதரியின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாதென பொறுமை காக்கிறார்களாம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ஊருக்குச் செல்ல, அங்கு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் பெரிதாகி, ஒருகட்டத்தில் நடிகர் மனைவியைக் கைநீட்டி விட்டதாகத் தெரிகிறது.

உடனே உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விட்டார் மனைவி. ‘என்னம்மா சொல்றீக, அந்தாளா அப்படி நடந்துக்கிடுறார், நாங்கெல்லாம் கூட அவர் நடிக்கிற சீரியலைப் பார்க்கிறோமே’ என அங்கலாய்த்திருக்கிறார்கள் போலீசார்.

உடனடியாக நடிகரைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், ‘இங்க பாருங்க சார், நீங்க செலிபிரிட்டி, குடும்ப விவகாரம் இந்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் வரை வர விடலாமா? இங்க வந்துடுச்சுன்னா, அப்புறம் ஊருக்கே தெரிஞ்சுடும். அப்புறம் உங்களூக்குதான் அசிங்கம், அதனால புள்ளகல்லாம் வளர்ந்த பிறகு எதுக்கு சண்டை? போய் அமைதியாக் குடும்பம் நடத்தப் பாருங்க’ என அறிவுரை சொல்லி அனுப்பினார்களாம்.

ஆனாலும் ‘போலீஸ் ஸ்டேஷன் வரை போற அளவுக்கு உனக்குத் துணீச்சல் வந்திடுச்சுல்ல’ எனக் கத்தி விட்டு நடிகர் சென்னைக்கு பஸ் ஏறி விட்டாராம்.

‘இனி இந்த விவகாரத்துல ஒரு முடிவு எடுக்காம, அவர் கூட சேர்ந்து ஒரே வீட்டுல இருக்கிறதுல சிக்கல் வரலாம்’ எனப் பயந்த அவருடைய மனைவியோ தன் பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

இரண்டு மகன்களுமே அம்மா பக்கம் நிற்பதால், அவர்கள் மீதும் நடிகருக்குக் கோபம்தான் என்கிறார்கள். 

- அய்யனார் ராஜன்