TTF Vasan
TTF Vasan timepass
சினிமா

TTF Vasan : 'சர்வதேச லைசென்ஸ் வச்சு பைக் ஓட்டுவேன்' - அதென்ன International licence?

டைம்பாஸ் அட்மின்

பிரபல யூடியூப் பைக் ரைடர் டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விபத்துக்குள்ளானார். 

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசனிடம் டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, "இந்த வழக்கில் 10 வருடம் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பது நியாயமே இல்லாதது. இது என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல இருக்கிறது. விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனபோது மனம் வருந்தி கண் கலங்கி விட்டது. என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருப்பதால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன்" என்று கூறினார்.

அதென்ன சர்வதேச லைசென்ஸ் ?

        சர்வதேச ஓட்டுநர் உரிமம் என்பது பல சமயங்களில் நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு செல்லும் போது, அந்நாட்டின் அதிகாரப்பூர்வமாக வாகனம் ஓட்ட தேவைப்படும் ஆவணமாகும். நீங்கள் வாகனம் ஓட்டத் திட்டமிடும் நாட்டின் சர்வதேச லைசென்ஸ் ஒப்பந்தங்களைப் பொறுத்தே இந்தமுறை செல்லுபடியாகும்.

மேலும், சர்வதேச லைசென்ஸ் வைத்திருப்பதன் மூலம், வெளிநாடுகளில் ஓட்டுவது எளிதாகும். இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமமத்தை வைத்து சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாகனம் ஓட்டலாம். இதில் நீங்கள் நினைவில் வைத்திக்கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும்.

இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு படிமம் 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும்.

டிடிஎஃப் வாசனின் இந்த பேச்சுக்கு தமிழக போக்குவரத்து காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட முடியாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


- மு.குபேரன்.