சீரியல் என்னும் இரண்டாம் இன்னிங்ஸ்! அல்லது டிவியால் மறுவாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள்!
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் வரும் ஒரு கதாபாத்திரம் ஆதி.குணசேகரன். சினிமாவில் டைரக்ஷன், நடிப்பு என இருந்த மாரிமுத்துவை இந்தக் கேரக்டருக்குக் கமிட் செய்தார்கள். சீரியலுக்குள் இவர் வந்தாலும் வந்தார், சீரியலுக்கு வேற லெவல் ரீச் கிடைத்திருக்கிறது.
தொடரில் இவர் பேசிய ‘ஏய் இந்தாம்மா’ என்கிற டயலாக் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகத் தெறிக்க, 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ், என எல்லாருமே ‘யாரு சாமி இவரு’ எனத் இவர் குறித்துத் தேடத் தொடங்கினர்.
ஒரு பேட்டியில் மாரிமுத்துவே, இத்தனை வருட சினிமா தராத புகழை இந்த ஒரு சீரியல் தந்து விட்டது எனச் சொல்லியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தே இந்த சீரியல் குறித்துத் தன்னிடம் பாராட்டியதாகவும் கூறினார்.
இப்போது ‘மாரிமுத்து இல்லாவிட்டால் எதிர்நீச்சல்’ இல்லை என்கிற நிலை வந்து விட்டது.
பொதுவாக ஒரு சேனலின் சீரியலில் பிரபலமாகத் திகழும் ஆர்ட்டிஸ்ட்டை இன்னொரு சேனல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. அவர்களுக்கு ஏன் விளம்பரம் தரவேண்டும் என்பதுதான் காரணம். ஆனால் மாரிமுத்து விஷயத்தில் இந்தக் காரணத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அவரைத் தங்களது நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைக்கப் போட்டி போடுகின்றன எல்லா சேனல்களும்.
முதல் வாரம் கலைஞர் டிவி நிகழ்ச்சி என்றால் மறுவாரம் ஜீ தமிழ் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
’கலக்குறீங்க போல சார்’ என மார்முத்துவுக்கு வாழ்த்துச் சொன்னால், ‘ஏய், இந்தாப்பா, அப்டி எல்லாம் இல்லப்பா’ எனக் கேட்கிறார்.
மாரிமுத்து மட்டுமில்லை. சின்னத்திரையில் செகண்ட் இன்னிங்ஸ் துவக்கி புகழும் பணமும் கிடைக்கப் பெற்ற இன்னும் சிலர் இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் பார்க்கலாமா?
ராதிகா சரத்குமார்
பெரிய திரையின் கதாநாயகியாக ஒரு ரவுண்ட் வந்த சேட்டிலைட் சேனல் தமிழுக்கு வந்த நேரத்திலேயே டிவிக்கு வந்துவிட்டார். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், என தமிழின் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டுவிட்டு டிவிக்கு வந்த ராதிகாவுக்கு சின்னத்திரையிலும் தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. ‘சன்’ டிவியில் ஒளிபரப்பாக ‘சித்தி’ சீரியல் டிவியில் முத்திரை பதித்த ஒரு தொடர் என்றால் மிகையில்லை. தயாரிப்பாளராக, நடிகையாக கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக டிவியிலும் தனக்கென தனியே ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்போது சன் டிவியுடனான தனது பிசினஸை முடித்துக் கொண்டு விஜய் டிவி பக்கம் வந்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ராடானின் ’கிழக்கு வாசல்’ தொடர் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது.
தேவயாணி
சினிமாவில் கமல், சரத்குமார், பார்த்திபன் என சீனியர் நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் முடித்து விட்டு, ‘காதல் கோட்டை’, ஃப்ரண்ட்ஸ்’ என அஜித் விஜய் படங்களிலும் பட்டை கிளப்பியவர் தேவயாணி. காலம் என்றால் தேவயாணி. ‘ஹோம்லி கதாநாயகி’ எனப் பெயரெடுத்தவர், இயக்குநர் ராஜகுமாரனைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கொஞ்சம் பிரேக் விட்டு சின்னத்திரைக்கு வந்தார். சீரியல்களில் விகடன் தயாரிப்பில் வெளியான ‘கோலங்கள்’ இவருக்குத் தந்த ரீச் ரொம்பவே பெரிது.
‘இன்னைக்கும் பொது இடங்கள்ல என்னைப் பார்க்கிற பத்துப் பேர்ல பாதிப் பேருக்குதான் நான் தேவயாணி. மீதிப் பேருக்கு நான் ’அபி’தான் என ஆனந்த விகடன் பேட்டியில் ஒருமுறை சொன்னார்.
இப்போதும் ஜீ தமிழ் சேனலின் சீரியல் ஒன்றில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் வருகிறார்.
ஓவியா
சினிமாவில் கதாநாயகியாக ஆசைப்பட்டு வந்தவர். சில படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் இவர் எதிர்பார்த்த புகழைத் தரவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்பட்டார் அதுவும் நடக்கவில்லை.
‘எல்லாம் விதிப்படிதான் நடக்கும்’ என ஒதுங்கிவிட்டவரை பிக் பாஸ் முதல் சீசனுக்குப் போட்டியாளராகக் கூட்டி வந்தது விஜய் டிவி.
அந்த நிகழ்ச்சி இவருக்குத் தந்த புகழ் அதுவரை சினிமாவில் இவர் காணாதது. ‘ஓவியா ஆர்மி’ என ரசிகர் கூட்டம் உருவாக, அந்த நேரம் நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் ’ஓவியாவுக்குப் போடுற ஓட்டை எனக்குப் போட்டீங்கன்னா நான் முதலமைச்சராவேன்’ என ஆதங்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ்.
பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வெல்லவில்லை என்ற போதும் நல்ல பெயர் கிடைத்தது. அந்தப் புகழை வைத்து அடுத்த ஒரு வருடத்துக்குக் கலந்து கொள்ளக் கேட்டு வெளிநாட்டு நிகழ்ச்சிகள் இவருக்குப் புக் ஆனதாக சொன்னார்கள்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்குப் பின் பெரிதாக வாய்ப்புகள் வந்தது போல் தெரியவில்லை. ஆனாலும் இதுவரை நடந்த மொத்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் சேர்த்துப் பார்த்தால். அந்த நிகழ்ச்சியால் நல்ல பெயர் கிடைத்தவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் ஓவியாதான் முதலிடத்திலிருக்கிறார்.
அடுத்த வாரம் பார்க்கலாம்