Diwali Timepassonline
Lifestyle

அது ஒரு டவுசர் தீபாவளி!

Saran R

தீபாவளிக் கொண்டாட்டமெனும் ஒரு விஷயம் என் சின்ன வயசுல எப்படில்லாம் எனக்கு ரவுசு கொடுத்திருக்குனு டைம் மெஷின்ல ஏறிப்போய் பார்த்துட்டு வருவோமா..?

ரை ரை!


ஊர் பூரா ஒரு மாசத்துக்கு முன்னாடியே களைகட்டிரும். எங்க அம்மால்லாம் தீபாவளிச் சீட்டுப் போட்டு தனக்குப் புடவை, தங்கச்சிகளுக்கு சுடிதார்னு ஆர்டர் போட்டு வெச்சிருவாங்க. ரேஷன்ல பாமாயில், சீனி, கோதுமை, மைதா, ரவை, மண்ணெண்ணெய் வாங்க ராத்திரியே என்னைப் போயி இடம் போட்டு வைக்க ரேஷன்கடைக்கு பத்தி விட்ருவாங்க. நானும் கழண்டு விழுற டவுசரைக் கையில பிடிச்சுக்கிட்டே ரேஷன்கடைக்குப் போயி சீட்டுப் போட்டு பொருட்கள் வாங்கிட்டு வருவேன். தள்ளுமுள்ளுல சட்டை கிழிஞ்ச வரலாறுலாம் இருக்கு.

ஏரியாப்பசங்ககிட்ட ஜபர்தஸ்தா, 'எலே இசுக்குகளா...இந்த வருஷம் சிவகாசில இருந்தே வெடி வாங்கிட்டு வர்றேன்னு சொன்னாருடா எங்க அப்பா!'னு பசங்க வயித்துல ஒரு கிலோ புளியைக் கரைப்பேன். ஏன்னா அப்பல்லாம் எங்களுக்குள்ள யாரு அதிகம் வெடி விடுறதுனுதான் போட்டியே நடக்கும். முஸ்லீமா இருந்தாலும் கறிக்கடைக்காரர் பையன் இப்ராஹிம் எங்களோட ஜோதியில ஐக்கியமாகி புதுச் சொக்கா, புதுப்புது வெடினு பட்டையைக் கிளப்புவான். எப்படி அவங்க அப்பாக்கிட்ட உஷார் பண்ணான்னே தெரியாது. ராத்திரிக்கு கலர்கலரா வானத்துல வேடிக்கை காட்டுவான். 

நானும் தான் ஒவ்வொரு வருஷமும் அவனை ஜெயிச்சுக்காட்ட மனசுக்குள்ள சபதமெடுப்பேன். பயபுள்ள எப்படியாச்சும் அவங்க அப்பா பாக்கெட்ல ஆட்டையைப் போட்டு வெடியா வாங்கி குவிச்சிருவான்.  

எங்க அப்பாவைப் பத்தி சொல்லியே ஆகணும். கவர்ன்மெண்ட் பஸ் டிரைவர். அதுவும் மப்சல் பஸ். 'யப்பா யப்பா...  ராஜபாளையம்லாம் போறீல்ல...சிவகாசிக்கு வண்டி ஓட்டுப்பா. நான் கேக்குற வெடியைலாம் வாங்கிட்டு வாப்பா!'னு நமநமனு நமுத்துட்டே இருப்பேன். மனுஷன் கண்டுக்கவே மாட்டாரு. ஒரு வருஷம் என்ன நினைச்சாரோ என்பேச்சைக் கேட்டுட்டாரு. ராமேஸ்வரம் டு சிவகாசி ரூட் எடுத்தாரு பாருங்க. அதுவும் சிவகாசியில நைட் ஹால்ட். நல்லா சிவகாசிப்பூரா சுத்தி பட்டாசா எறக்கப்போறாருனு கலர்கலரா கனவு கண்டுட்டு கெடந்தேன். திருநெல்வேலி ஹால்ட் எடுத்தப்பல்லாம் இருட்டுக்கடை அல்வாவா வாங்கிட்டு வருவாரு.

அப்புறமென்ன சந்தோஷத்துல மனசுக்குள்ள தவுசண்ட் வாலா வெடிச்சுப் பார்த்தேன். ஒரு பெரிய ட்ரை சைக்கிள் நிறைய்ய வெடிகள், மத்தாப்பு , வான வேடிக்கைகள்னு அள்ளிப் போட்டு அவரே ரிக்‌ஷா மாமா படத்துல சத்யராஜ் ஓட்டிட்டு வர்ற மாதிரி கனவு கண்டேன். நினைச்ச மாதிரி தீபாவளியும் வந்துருச்சு. எங்க அப்பாவும் கத்தை கத்தையா சேவல் மார்க் பட்டாசை வாங்கிட்டு வந்தாரு. எனக்குத்தான் அம்புட்டும் வாங்கிட்டு வந்திருக்காருன்னு மனப்பால் குடிச்சிருக்கேன். ஏன்னா நான் பெரிய லிஸ்ட்டே எழுதிக் கொடுத்துவிட்டேன். சிவகாசில இருந்து வாங்கிட்டு வந்த பார்சல்களை எல்லாம் வீட்டுல இறக்கி வெச்சுட்டு என்னைக் கூப்பிட்டாரு.

"அடேய்...இதுல கையி கிய்யி வெச்சே பிச்சிப்புடுவேன். இதுலாம் எங்கூட வேலை பார்க்குற டிரைவர் கண்டெக்டர்கள் காசுகொடுத்து வாங்கிட்டு வரச் சொன்னது. நீபாட்டுக்கு நம்ம வெடினு எடுத்துராதே..!" என்று நாக்கைத் துருத்தினார்.

என் ஆசை பூரா புஸ்வானம் ஆனது. அப்புறம் அம்மாதான் பார்சல்களைப் பிரிச்சு இதுல ஒண்ணு அதுல ஒண்ணுனு ஆட்டையப் போட்டு திருப்பி பக்குவமா பேக்கிங் செஞ்சு கொடுத்தாங்க. இதுலாம் தப்பில்லையா மம்மி எனக் கேட்டேன். 'உனக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைடா ராஜா!'னு நாயகன் பட டயலாக்கைப் பேசுனாங்க. 

வழக்கம்போல வெடி விஷயத்துல இப்ராஹிம்கிட்ட தோக்குறதே வாடிக்கையாப்போச்சு. ஆனா, தீபாவளி மறுநாள் யார்வீட்ல அதிமா வெடி போட்டோம்னு ஆவணப்படுத்த வேண்டி தெரு முழுக்க வெடிச்சி சிதறவிட்ட வெடிகளோட பேப்பர் கத்தைகளை யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி அள்ளிட்டு வந்து வீட்டு வாசல்ல கொட்டி என்னமோ நான் தான் அம்புட்டு வெடியையும் வெடிச்சேன்னு சீனைப் போட்டேன். ஆனால், அதுல ஒரு லோடு மண்ணை அள்ளிக் கொட்டிருச்சு என் அப்பத்தா,

"எலேய் முட்டாப்பய மவனே, ஏன்லே தெருக்காடு பூரா வெடிக்காத வெடிய வாரிட்டு வந்து வீட்டு முன்னாடி கொட்டுனே? பாரு நடக்க முடியல!" என போட்டுடைத்தாண்டி கதையா அசிங்கப்படுத்திருச்சு. 'சீ... இதுலாம் நீ வெடிச்ச வெடி இல்லையா!' என எதிர்வீட்டு மாலதி புள்ள முகத்தைச் சுழிச்சது இப்பவும் வெட்கமா இருக்கு.  ஒரு வருஷம்லாம் அப்பா பண்டல் பண்டலா பாம்பு மாத்திரையும், சாட்டைவெடியும் மட்டும் வாங்கிட்டு வந்து என் மனசை புண்படுத்திட்டாரு.  


வெடி கதைதான் இப்புடினா தீபாவளி டிரெஸ் எனக்கு வாங்கிக் கொடுக்குறதுல செமையா பல்பு வாங்கியிருக்கேன். சத்ரியன் படம் பார்த்ததிலிருந்து போலீஸ் டிரெஸ்தான் வேணும்னு அழுது அடம்புடிச்சி காக்கிக்கு ஓகே வாங்குனேன். துணிக்கடைல நீளமா 2 மீட்டர் துணியை வாங்கி என்னையும் அளவுகொடுக்க ராயல் டெய்லர்ஸ்ட்ட கூட்டிட்டுப் போனாரு அப்பா. 

நான் என்னமோ நிஜ போலீஸ் யூனிபார்ம் மாதிரி தோள்பட்டைல ஸ்டார், ரோப்,  அலுமினிய கலர்ல பட்டன்னு  என்னன்னமோ சொன்னேன். 'அண்ணனுக்கு ஊத்தாப்பம்'கிற மாதிரி ராயல் டெய்லர் ராசுக்குட்டி அண்ணே, 'தம்பி.... உனக்கு பிரமாதமா ரெடி பண்ணித் தர்றேன் டா... போட்டுட்டு வந்து டுப்பாக்கி வச்சு இந்த மாமனை சுட்ராதே!' என ஏக பில்ட்-அப்லாம் கொடுத்தார். றெக்கை கட்டிப் பறந்தேன். லேடீஸ் ஏட்டம்மாக்கள் போடும் நான்கு சட்டைப் பாக்கெட் வெச்ச சட்டையை தைச்சுட்டாரு. சும்மா பார்க்கவே சிரிப்பு வரும்படியான கண்றாவியான ஃபிட்டிங்குகளுடன் தீபாவளி அன்னிக்கு அப்பாதான் ராயல் டெய்லர்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தார். குரங்கு பொம்மைக்குப் போடலாம் போல இருந்துச்சு. 

    'ஏ...யப்பா, நான் கேட்டது சத்ரியன் போலீஸ் டிரெஸ்ப்பா!' என தேம்பித் தேம்பி அழுதபடி அப்பாகிட்ட சொன்னேன். 'எலேய் கிறுக்கா... இது எம்.ஜி.ஆர் என் கடமை படத்துல போட்ட உடுப்புடா.!'னு அள்ளிவிட்டார்.  அதையும் அரைகுறை மனசோட நம்பி, மாட்டிக்கிட்டு வெளியே வந்தப்ப நாய் ஒண்ணு என்னைப் பார்த்து வேகுவேகுனு குலைச்சது. அப்பவே சுதாரிச்சிருக்கணும். தீபாவளி எனக்கு தீபாவலி ஆனது. ஆமாம்,  நாங்க அப்போ குடியிருந்த காம்பவுண்ட்டில் சிறுசு பெருசு எல்லாமே ஏகத்துக்கும் கலாய்ச்சு தள்ளிருச்சுங்க.  அதைக் கழட்டி வீசிட்டு வீட்டுக்குள் தரையில் புரண்டு அழுது தீர்த்தேன்.

அப்பா என்னை சமாதானப்படுத்தி ஏதாச்சும் வாங்கிக் கொடுப்பாருனு தான் நினைச்சேன். ஆனா, குடுத்தாரு... முதுகில் நாலு சாத்து!  அந்த ஒரு வருஷம் என் முதுகுல வெடி மாதிரி அடி வாங்கியதெல்லாம் கருப்பு சரித்திரம் ப்ரோ.


டிரெஸ்ஸை விடுங்கப்பா...தித்திக்கும் தீபாவளின்னாலே பலகாரங்கள் தானே? அம்மா என்னை பரிசோதனை எலியாக்கி விதம் விதமாக சுட்டுக் கொடுப்பாள். முதலில் மைசூர் பாகு என்பதையே அப்போதெல்லாம் 'தாம்பூலம் சிறக்க ரோஜா பாக்கு' என்பதுபோலத்தான் 'மைசூர் பாக்கு' என சொல்லிக் கொண்டு அலைவேன். அம்மா செய்த அந்த பாகுவை அவ்வளவு சீக்கிரம் கடிச்சிட முடியாது. அதுக்கு பாகுபலி ஆவதற்கு நீங்க தயாரா இருந்தா பல்லு உடையாம சாப்பிட்டுரலாம்.  அதேபோல அம்மா செய்யும் பல பலகாரங்களுக்கு பெயரும் வெச்சிட முடியாது. முறுக்கெல்லாம் முறுக்கேறி கடிக்கவே முடியாத அளவுக்கு இருக்கும். நல்லவேளையா பக்கத்து வீடுகளில் இருந்து பலகாரங்கள் வந்துசேர ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக அன்று வயிறு கடாமுடா தான்!


ஆனாலும் இப்ப என் மகன், மகள்கிட்ட, 'இதுலாம் என்ன தீபாவளி... நாங்கள்லாம் அந்தக் காலத்துல எப்படி தீபாவளி கொண்டாடுவோம் தெரியுமா?' என ரீல் சுத்துகிறேன். 

அப்போ பூமர் அங்கிளா நானு?