2024 முதல் கலிபோர்னியாவில் உள்ள உணவகப் பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு $20 டாலர் ஊதியம் வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் ஃபாஸ்ட் ஃபுட் தொழிலாளர்கள் பல வருடமாக தொழிலாளர் சட்டங்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குறைந்த சம்பளத்துடன் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். எனவே பல தொழிலாளர்கள் வேலையை விட்டுவிடும் எண்ணத்தில் உள்ளனர்.
பெரும்பாலும் கலிபோர்னியாவைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவர்கள் கடையை தொடர்ந்து நடத்துவதற்கு ஊழியர்கள் மிகவும் அவசியம். மேலும் புதிய ஊழியர்களை நியமித்து பயிற்சியளிப்பதும் சிக்கலான ஒன்று. எனவே, இந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர கலிபோர்னியாவில் ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, ஃபாஸ்ட் ஃபுட் தொழிலாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் $20 (இந்திய மதிப்பில் ரூ. 1,660) ஊதியம் வழங்கப்படும். இந்த சட்டமன்ற மசோதா 1228-ன் படி, கலிபோர்னியாவில் 500,000 ஃபாஸ்ட் ஃபுட் தொழிலாளர்களையும், சுகாதாரத் துறையில் 455,000 தொழிலாளர்களையும் உள்ளடக்கும்.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $20 வரை அதிகரிக்க வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.
- மு.குபேரன்.