Ashes 2023 timepass
Lifestyle

Ashes 2023 : அனல் பறந்த சம்பவங்கள் - ஒரு ரீவைண்ட் | AUS vs ENG

பழைய ஆஷிஸ் தொடர்கள்ல நடந்த சில உரசல்கள ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமா?

Ayyappan

ஒரு டிராபின்றது சிலநேரம் அணிகளுக்கு வெற்றிக்கான குறியீடு, சிலநேரம் போராட்டத்துக்கான பரிசு, சில இடங்கள்ல அர்ப்பணிப்புக்கு கிடைச்ச அங்கீகாரம். ஆனால், ஆஷஸ் தொடர்ல அது மிகப்பெரிய கௌரவம்! ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் அத போட்டியா இல்லாம தங்களது மரியாதையைத் தாங்குற பல்லக்காக பார்க்குறாங்க.

அந்தக் காரணத்தினால்தான் இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக்குற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மேல கிரிக்கெட் ரசிகர்களோட எதிர்பார்ப்பு எப்படி இருந்ததோ அதுக்குக் கொஞ்சமும் குறையாம அதற்கடுத்து நடக்கப் போற ஆஷஸ் தொடர் மேலேயும் நிறைஞ்சிருக்கு.

வார்த்தைப் போர்கள், Sledging சீண்டல்கள், களத்துலயே அரங்கேறுற விவாத மேடைகள், ஒருத்தரை ஒருத்தர் தந்திரமா வீழ்த்த முயற்சிக்குற மைண்ட் கேம்கள்னு ரெண்டு பக்கம் இருந்தும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம முட்டி மோதிக்கிட்டே இருப்பாங்க. அதுல இறந்த காலத்துல நடந்த சில உரசல்கள ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமா?

மார்க் வாக், ஸ்டீவ் வாக் பிரதர்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட்ல அரசாண்டவங்கதான். இருந்தாலும் ஆஸ்திரேலியாவோட பாரம்பரியம் மாறாம மத்தவங்கள ஸ்லெட்ஜிங் பண்றவங்க. ஒரு தடவ மார்க் வாக் இங்கிலாந்தோட அறிமுக வீரர் ஜிம்மி ஆர்மாண்ட வம்பிழுத்து ஆட்டமிழக்க வைக்க நினைச்சாரு. அதுக்காக அவர்கிட்ட போய், "நீ இங்க என்ன பண்ற, இங்கிலாந்துக்காக ஆடறதுக்கு எல்லாம் உனக்குத் தகுதியே இல்லையே"னு கலாயச்சு அவரோட கவனத்த சிதறடிக்க முயற்சி பண்ணாரு.

அதுக்கு ஆர்மாண்ட் கொஞ்சமும் அசராம, "இருக்கலாம், ஆனா குறைந்தபட்சம், என்னோட குடும்ப அளவிலாவது நான் சிறந்த வீரரா இருக்கேனே"னு சொன்னாரு. தனது சகோதரர் ஸ்டீவ் வாக் அளவிற்குக் கூட அவரால பெர்ஃபார்ம் பண்ண முடியலேன்னு குத்திக் காட்டி மார்க் வாக்கை வாயடைக்க வச்சுட்டாரு ஆர்மாண்ட்.

இங்கிலாந்தோட மைக் கேட்டிங் கொஞ்சம் பருமனாக இருப்பாரு. அவர கிண்டல் பண்ணி மைண்ட் கேம் ஆட நினைச்ச டென்னிஸ் லில்லி, "ஸ்டம்ப்ஸ விட்டு நகர்ந்து நில்லுங்க கேட்டிங், என்னால ஸ்டம்புகள பார்க்க முடியலே"ன்னு கலாய்ச்சாரு. ஆனா மைக் கேட்டிங் கொஞ்சமும் தயங்காம டென்னிஸ் லில்லி வீசுன அடுத்த பாலை பவுண்டரிக்கு விளாசிட்டு, "இப்போ உங்களுக்கு பாலும் தெரியாதே", அப்படின்னு சரியா திருப்பிக் கொடுத்தாரு.

இயான் செப்பல் கேப்டனாக தனக்குனு தனி ராஜாங்கத்தையே கட்டமைச்சவரு. தக் லைஃபுக்கும் பேர் போனவர். ஒருமுறை டென்னிஸ் லில்லி வீசுன பந்து இங்கிலாந்தோட அண்டர் உட்டை தாக்கிக் காயமேற்படுத்த ஃபீல்டிங்ல நின்ற செப்பல் வேகமா அண்டர்உட்டை நோக்கி ஓடி வந்தாரு. "அய்யோ, அடிபட்ருச்சா, எந்தக் கைல?"னு கேட்க, அண்டர்உட் வலதுகைலனு சொல்ல," அய்யய்யோ, நாங்க இடது கையத்தானே குறி வச்சோம்"னு சொல்லி நக்கலா சிரிச்சுக்கிட்டே போய்டாராம். திரும்ப பௌலிங் போட வந்தப்போ இயான் செப்பலுக்கு மட்டும் பாடிலைன்லயே பாலைப் போட்டு தன்னோட கடுப்ப அண்டர் உட் தீர்த்துக்கிட்டாராம்.

இப்படியான சம்பவங்கள் சமயத்துல ஜென்டில்மேன் கேம்ல தேவைதானானு சிலர் விவாதிக்கலாம். ஆனா ஆட்டத்தோட ஓட்டத்தையும், தொடரோட போக்கையும் இப்படிப்பட்ட சின்ன சின்ன உயராய்வுகளும் அது உண்டாக்குற தீப்பொறியும் இன்னமும் சுவாரஸ்யம் உடையதாக ஆக்குதுன்றது மறுக்க முடியாத உண்மை.

போன முறை ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று இருந்துச்சு, அதுவும் ரொம்ப மோசமாக இங்கிலாந்தை வீழ்த்தி. இம்முறை நடக்க இருக்க தொடரை தங்களோட பழி வாங்கும் படலமாக பார்க்குற இங்கிலாந்து சரியான பதிலடி கொடுக்குமா அல்லது சொந்த மண்ணுலயும் தோல்வியைத் தாங்குமான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.