என்னதான் ஐபிஎல் போன்ற டி20 லீக்குகள் திருவிழானு சொல்லப்பட்டாலும் முழுபலத்தோட இருக்க பல அணிகளும் வெறிகொண்டு மோதிக்குற உலககோப்பைக்கு ஈடாகாது.
ஃபேன்டஸி கிரிக்கெட்லாம் நகைப்புக்குள்ளாக இண்டர்ஸ்டெல்லாரோட Murphy's Law எல்லாம் இங்கே பொய்யாகும். ஜெயிக்கும்னு நினைச்ச அணி மண்ணைக் கவ்வும், தோற்கும்னு ஒதுக்குன அணி வெற்றி பெறும். எல்லாம் அழுத்தம் தர்ற பதற்றத்துனால நடக்குற தான். அந்த வகையில எப்போதும் தென்னாப்பிரிக்கா உலககோப்பையை பொறுத்தவரை கொஞ்சம் அதிர்ஷ்டம் கம்மியான அணிதான்.
மழையோட குறுக்கீடால ஒரு பந்துல 22 ரன்களக் குவிக்க சொன்ன 1992 உலககோப்பை ஆகட்டும், டக்வொர்த் லூயிஸால டை ஆன இலங்கைக்கு எதிரான 2003 நாக்அவுட்டுக்கு முந்தைய Do or Do மேட்சாகட்டும், கேன் வில்லியம்சனோட ரன்அவுட் மிஸ் ஆகி 2019 உலககோப்பையை விட்டே வெளியேறிய போட்டி ஆகட்டும் எல்லா சந்தர்ப்பங்கள்லயும் அதிர்ஷ்டம் தன் இஷ்டத்துக்கு தென்னாப்பிரிக்காவ அல்லாட விட்டுருக்கு. அப்படி இன்னொரு சம்பவமும் 1999 உலககோப்பைல நடந்தது....
தென்னாப்பிரிக்கா அந்தப் போட்டியில ஆஸ்திரேலியாவை சந்திக்க ஆஸ்திரேலியா முதல்ல பேட்டிங் பண்ணுச்சு. ஸ்ட்ராங்கான தென்னாப்பிரிக்க பௌலிங்கை ஆஸ்திரேலியாவால தாக்கு பிடிக்க முடியல. ஷான் பொல்லாக் அஞ்சு விக்கெட்டுகளையும் ஆலன் டொனால்ட் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்த வெறும் 213 ரன்களை மட்டும்தான் ஆஸ்திரேலியாவால எடுக்க முடிஞ்சது.
கத்துக்குட்டி அணியாவே இருந்தாலும் தத்தித் தடுமாறி எடுக்கக்கூடிய ஸ்கோர்தான். ஆனா எதிரே நின்னது ஆஸ்திரேலியாவாச்சே? உலககோப்பைனாலே அவங்க கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஒன்னா இறக்குவாங்க. அந்தப் போட்டிலயும் அதுதான் நடந்துச்சு.
கிட்டத்தட்ட 20 ஓவர்களுக்குள்ளவே கிப்ஸ், கேரி கிறிஸ்டன், க்ரோஞ்சி மூணு பேரும் அவுட். 60 ரன்களைக்கூட தென்னாப்பிரிக்கா தாண்டல. காலீஸ் மற்றும் ஜான்டி ரோட்ஸ் கூட்டணி கொஞ்சமா தாக்குப் பிடிச்சு 84 ரன்கள் சேர்த்தது. அவங்களுக்குப் பிறகு விக்கெட்டுகள் இன்னொரு முனைல விழுந்தாலும் க்ளூசினர் மட்டும் எல்லைச்சாமி மாதிரி ஆங்கரிங் ரோல் ஆட ஆரம்பிச்சுட்டாரு.
இலக்கு பக்கமா நெருங்க நெருங்க அவரோட தன்னம்பிக்கையும் அதிகரிக்க ஆரம்பிச்சது. ஒருவழியா இறுதி ஓவர்ல 9 ரன்கள் வேணும்ன்ற நிலை. பிரச்சினை என்னன்னா கைவசம் இருந்தது ஒரே ஒரு விக்கெட்னால கரணம் தப்பினா மரணம்தான். க்ளூசினர் கூட ஆலன் டொனால்ட் இன்னொரு பக்கம் இருந்தாரு.
டேமியன் ஃப்ளமிங் பந்துவீச, டெய்ல் எண்டருக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு முதலிரு பந்துகள்ல இரு பவுண்டரிகள க்ளூஸ்னர் அடிச்சுட்டாரு. மூன்றாவது பந்து டாட் பாலாக இறுதி மூன்று பந்துகள்ல ஒரு ரன்தான் தேவைன்ற நிலை. பதற்றம் க்ளூஸ்னரை தொத்திக்கிட, பாலை சரியா டைமிங் செய்யாம ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடிட்டு ஓடத் தொடங்குனாரு, மறுமுனையில இருந்த ஆலன் சற்றே தயங்கி அதன்பின் ஓடத்தொடங்க அந்த அவகாசத்துல மார்க் வாக், ஃப்ளமிங், கில்கிறிஸ்ட் எல்லோரும் சேர்ந்து ஸ்டம்ப் தகர்த்துட்டாங்க.
ஸ்கோர்ஸ் லெவல்தான் போட்டி டை தான் அப்படினாலும் சூப்பர் 6 ஸ்டேஜ்ல ஏற்கனவே தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்ததால அதன் அடிப்படையில நேரடியாக இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா நகர்ந்தது. க்ளூசினர் கொஞ்சமா பொறுமை காத்திருந்தா அல்லது ஆலன் டொனால்ட் தயங்காம ஓடியிருந்தா குறைந்தபட்சம் ஸ்டம்பிங்கையாச்சும் ஆஸ்திரேலியா மிஸ் பண்ணியிருந்தா தென்னாப்பிரிக்காவின் தலை தப்பியிருக்கும்.
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்ற நிலை தான் தென்னாப்பிரிக்காவுக்கு பல உலககோப்பைகளாக நீடிச்சுட்டு இருக்கு. இந்த ஆண்டாச்சும் அதிர்ஷ்ட தேவதை தென்னாப்பிரிக்காவின் பக்கம் திரும்புமா???