Climate Change
Climate Change டைம்பாஸ்
Lifestyle

Climate Change : 140 மொழிகளில் விழிப்புணர்வு பாடல் - கின்னஸ் சாதனை படைத்த கேரள பெண் !

டைம்பாஸ் அட்மின்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, 140 மொழிகளில் பருவ நிலை மாற்றம் தொடர்பான ஒரு விழிப்புணர்வுப் பாடலை பாடி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சுசிதா சதீஷ். துபாயில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு பயின்று வருகிறார். இவர், துபாயில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில், 140 மொழிகளில் விழிப்புணர்வு பாடல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் புனேயைச் சேர்ந்த பாடகி மஞ்சுஸ்ரீ ஓக் 121 மொழிகளில் பாடிய சாதனையை சுசிதா சதீஷ் தற்போது முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பாக சுசிதா 2021ஆம் ஆண்டு 120 மொழிகளில் பாடி உலக சாதனை படைத்திருந்தபோதிலும், நவ. 24, 2023 அன்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக ஆடிட்டோரியத்தில் நவ. 30 முதல் டிச. 12 வரை நடைபெறவுள்ள பருவநிலை மாற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த முறை இவர் இச்சாதனையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுசிதாவுக்கு 145 மொழிகளில் பாடத் தெரிந்திருந்தாலும், இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள 140 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே 140 மொழிகளில் பாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மொத்த உலகத்தையும், மனித சமூகத்தையும் பாதிக்கும் பருவநிலை மாற்றங்கள் குறித்த முக்கியமான பிரச்னை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தான் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடக் கற்றுக் கொள்ள முயன்றதன் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது என்கிறார். மேலும், 'எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இசை' என்ற தனது லட்சினை, பருவகால மாற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சியின் மையக் கருத்தை உலக மக்களிடம் கொண்டு செல்ல இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறுகிறார்.

பல மொழிகளில் பாடும் சுசிதாவின் இசைப்பயணம், இவரது 10ஆவது வயதில் தொடங்கியுள்ளது. இவரது தந்தையின் ஜப்பானிய நண்பரின் மூலம் ஜப்பான் மொழிப் பாடலை இவர் கேட்டு, அப்படியே பாடியதை கண்ட இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இவரை ஊக்கப்படுத்த, இவரின் பன்மொழி பாடல் பயணம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, இவர் அரபி, இந்திய பழங்குடியின மொழிகள் மற்றும் ஆப்பிரிக்க மொழிகளில் பாடி பயிற்சி பெற்றுள்ளார். இசை மீதான இவரின் ஆர்வம், இவரை மொழி, இனம், நாடு என்ற பேதங்களைத் தாண்டி, உலக அளவில் கொண்டு சென்றுள்ளது.

சுசிதாவின் இசை ஆர்வத்தை 4 வயதிலேயே கண்டறிந்த இவரின் பெற்றோர், இவருக்கு கர்நாடக இசை மற்றும இந்துஸ்தானிய இசையில் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர். சுசிதாவின் வித்தியாசமான முயற்சிகளும், தொடர் பயிற்சிகளும் அவர் அடுத்தடுத்த உலக சாதனைகளைச் செய்ய வழிவகுத்தது.

- மு. ராஜதிவ்யா.