mohammed siraj timepassonline
Lifestyle

Police: இனிமேல் ஸ்பீடா வண்டி ஓட்டினால் அபராதம் கிடையாது! -ரொம்ப சந்தோசப்படாதீங்க... அது நமக்கில்லை!

'இனிமேல் ஸ்பீடா வண்டி ஓட்டினால் அபராதம் கிடையாது!' ரொம்ப சந்தோசப்படவேண்டாம்... இந்த சலுகை நமக்குக் கிடையாது. சமீபத்தில் நடந்து முடிந்த 'ஆசியக் கோப்பை' இறுதிப்போட்டியில் அபாரமாக ஆடிய முகமது சிராஜுக்குத் தான்!

8-வது முறையாக ஆசியாவின் கிரிக்கெட் ராஜா யார் என்பதைத் தீர்மானிக்கும் Asian Cup Final போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றிருக்கிறது. இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் 'பௌலிங்' செய்த இந்திய அணி தன்னுடைய அபாரமான பந்துவீச்சால்  இலங்கை அணியை திக்குமுக்காட வைத்து வெறும் 50 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் சுருட்டியது.

அதற்குக் காரணம் பௌலிங்கில் தன்னுடைய அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது சிராஜ். 16 பந்துகளில் முதல் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் என்பது இதுவே முதல்முறை! 

இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்த சிராஜின் பௌலிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது மட்டுமல்லாமல் கூடவே டெல்லி போக்குவரத்து காவல்துறையிடமிருந்தும் ஒரு வித்தியாசமான வாழ்த்து செய்தி  x செயலியின் மூலம் வந்து சேர்ந்தது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அது என்னவென்றால்... 'இன்று வேகமாக வண்டி ஓட்டினால் சிராஜுக்கு அபராதம் இல்லை.' -சிராஜுடைய ஆட்டத்தைப் பாராட்டி டெல்லி போக்குவரத்து காவல்துறை இப்படி வித்தியாசமாக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறது. அதாவது இவரின் வேகத்துக்கு தடையில்லை என்று வேடிக்கையாக பாராட்டியிருக்கிறார்கள். 

நடைபெற்ற இறுதிப்போட்டியில் மழையின் காரணமாகப் போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதில் துரிதமாகச் செயல்பட்ட அந்த கிரவுண்டின் தரை ஊழியர்களை அங்கீகரிக்கும்விதமாக சிராஜ் தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் பரிசுத்தொகையான 4.45 லட்சம் ரூபாயை அவர்களுக்குச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்து இந்தியர்களின் மனதில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். 

- பா.முஹம்மது முஃபீத்