காசு பணம் இல்லாவிட்டாலும் கடைசி வரை நண்பனாக கூடவே இருக்கும் ஒரு ஜீவன் நாய் என்பதற்கான சரியான உதாரணம் ஒன்று நடந்திருக்கிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் பிணவறை முன்பு வளர்ப்பு நாய் ஒன்று இறந்து போன உரிமையாளருக்காக நான்கு மாதங்களாக காத்திருந்த நெகிழ்ச்சி சம்பவம்தான் அது.
இந்த மருத்துவமனையின் ஊழியர்கள் நான்கு மாதங்களாக இந்த நாய் பிணவறையை சுற்றி வருவதை கவனித்தனர். ஆரம்பத்தில் அந்த நாய் ஏதோ ஒரு வீட்டில் இருந்து காணாமல் போயிருக்கலாம் என்று கருதி, அதற்கு ‘ராமு’ என்று பெயர் வைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் எதேச்சையாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் ஊழியர்கள் நாயைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த நெகிழ்ச்சிகரமான உணர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நோயாளி சிகிக்சைக்காக வந்தபோது, அவருடன் இந்த நாயும் வந்துள்ளது. துரதிஷ்டவசமாக நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது அந்த நாய் உரிமையாளரை பிணவறைக்குள் அழைத்துச் செல்வதைக் கண்டது. எனவே, அந்த நாயின் உரிமையாளர் பிணவறைக்குள் இருப்பதாக நாய் நினைத்துக்கொண்டு, அவர் மீண்டும் திருப்பி வருவார் என்று நாய் அந்த இடத்தை விட்டு செல்லாமல், கடந்த நான்கு மாதங்களாக இந்த பிணவறைக்கு முன்பு காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வுக்கு பின் மருத்துவமனை ஊழியர்கள் இந்த நாயை அவரின் உரிமையாளரின் நினைவுகளுடன் மருத்துவமனையிலேயே வளர்ப்பதாக தெரிவித்தனர்.
- மு.குபேரன்.