Temjen டைம்பாஸ்
Lifestyle

Earth Day 2023 : இணையத்தை கலக்கிய நாகாலாந்து அமைச்சர் Temjen Imna இன் கடிதம் !

"மழை பெய்யும் போது மண் வாசனை பிடிக்காதா? உங்கள் கண்களை நட்சத்திரங்கள் மீதும், உங்கள் கால்களை தரையிலும் வைத்திருங்கள்"

சு.கலையரசி

நாகாலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென், புவி தினமான ஏப்ரல் 22 அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றிய கடிதம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

உலக புவி தினத்தை முன்னிட்டு , சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பதிவுகளை பல தலைவர்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். அவர்களில் நாகாலாந்தின் சுற்றுலா மற்றும் உயர்கல்வி அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்கும் ஒருவர். தனது நக்கல் நய்யாண்டியான பதிவுகளுக்கு பெயர்பெற்றவர் டெம்ஜென்.

பூமி தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க கடிதம் ஒன்றை டெம்ஜென் இம்னா எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “மழை பெய்யும் போது மண் வாசனை பிடிக்காதா? பின்னர், இந்த பூமி தினத்தில் உங்கள் எதிர்காலத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இயற்கையைப் பாதுகாக்கவும். உங்கள் கண்களை நட்சத்திரங்கள் மீதும், உங்கள் கால்களை தரையிலும் வைத்திருங்கள்." என்று எழுதி அந்த கடிதத்தில் “ஆப்கா க்யூட் சா டெம்ஜென் (யுவர்ஸ் க்யூட் டெம்ஜென்)” என்று அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இப்பதிவிற்கு கமெண்டில் ஒருவர், ''நேற்று மழையில் நான் அனுபவித்த அதே விஷயம் ! இப்போது ஆர்கானிக் மண்ணையும் மழை வாசனை திரவியத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளேன். ஆனால், இயற்கை இயற்கைதான், அதை மாற்ற முடியாது" என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், "புவி தின வாழ்த்துகள். செய்தியை அழகாகத் தெரிவித்திருக்கிறீர்கள். மிட்டி கி மஹாக் கிசே பசந்த் நஹி (மண்ணின் வாசனை யாருக்கு பிடிக்காது?)'' என்று பதிவிட்டிருந்தார்.