West Indies West Indies
Lifestyle

Ind vs Wi : 70களில் India Team-ஐ புரட்டியெடுத்த West Indies - அதெல்லாம் அந்தக் காலம் !

சுப்பிரமணியம் நண்பர்கள் மாதிரி வரிசை கட்டி நிக்குற மேற்கிந்தியத் தீவுகளோட வேகப்பந்து வீச்சாளர்களப் பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் இரவுத் தூக்கத்த தொலைச்சு பயந்து பம்மிய காலகட்டம்.

Ayyappan

ஆல் அவுட் பண்ண முடியாட்டி ஆளையே அவுட் பண்ற வித்தையோட மேற்கிந்தியத் தீவுகள் 70-கள்ல வலம் வந்துச்சு. இந்தியாவும் ஒருமுறை அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுச்சு.

சுப்பிரமணியம் நண்பர்கள் மாதிரி வரிசை கட்டி நிக்குற மேற்கிந்தியத் தீவுகளோட வேகப்பந்து வீச்சாளர்களப் பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் இரவுத் தூக்கத்த தொலைச்சு பயந்து பம்மிய காலகட்டம் அது. 1976-ல இந்தியா அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ல ஆடிட்டிருந்தது.

முதல் போட்டிய ஒரு இன்னிங்ஸ் 97 ரன்கள் வித்தியாசத்தில ரொம்ப சுலபமா மேற்கிந்தியத் தீவுகள் வெல்ல, இரண்டாவது போட்டியில டஃப் ஃபைட் கொடுத்து இந்தியா டிரா அளவுக்கு எடுத்துட்டுப் போனதோட மூன்றாவது போட்டிய ஆறு விக்கெட் வித்தியாசத்திலயும் ஜெயிச்சது. தொடர் 1/1-னு சமனாக நான்காவது போட்டி மேல இருந்த எதிர்பார்ப்ப கூடுச்சு.

ஆஸ்திரேலியால போய் அவங்களையே ஆட்டிப்படைச்சுட்டு இருந்த மேற்கிந்தியத் தீவுகள் தங்களோட மண்ல ஒரு தொடர எதிரணி வெல்ல அனுமதிப்பாங்களா? எப்படியாவது ஜெயிக்கனும்ன்ற வெறி அவங்களுக்குள்ளேயே ஊறுனதாச்சே? களப்பலிக்கு எதிராளியோட ரத்தத்தக் கொடுக்கவும் அவங்க தயாரா இருந்தாங்க.

பவுன்சர்தான் அவங்களோட கைகள் லோட் பண்ணிட்டு வந்த புல்லட்ஸ். ஏதோ பெட்ரோல் வெடிகுண்டை வீசப்படுவது மாதிரி எதிர்கொண்ட ஒவ்வொரு பேட்ஸ்மேன்கள் கண்லயும் பயத்தைப் பார்க்க முடிஞ்சது.

மணிக்கு 90 மைல் வேகத்துல தாக்குறதுக்கு ஏவுகணையா வர்ற பந்து அல்லோகலப்படுத்த அன்சுமான், ப்ரிஜேஷ் ரிட்டயர்ட் ஹர்ட் ஆக, குண்டப்பா உள்ளிட்ட பல வீரர்களுக்கு காயமேற்பட, 306/6னு இருக்கப்பவே டிக்ளேர் பண்ணுச்சு இந்தியா. பதிலுக்கு விளையாடி முதல் இன்னிங்ஸ்லயே 85 ரன்கள் லீட் எடுத்தது மேற்கிந்தியத்தீவுகள்.

இரண்டாவது இன்னிங்ஸ இந்தியா ஆட இறங்கும்போவே இன்னிங்ஸ் வெற்றின்ற வெறியோடதான் மேற்கிந்தியத்தீவுகள் பௌலர்கள் இறங்குனாங்க போல. இரக்கமே இல்லாம பாடிலைன்ல பந்துகள் வந்துட்டே இருந்தது. ஷார்ட் பால்கள் தலையைக் குறிவச்சே முன்னேறி அவர்கள நிலைதடுமாற வச்சது. 2020 ஆஸ்திரேலியத் தொடர்ல நடந்த மாதிரி கிரவுண்டா எமர்ஜென்ஸி வார்டானு கேட்குற அளவுக்கு பந்துகளால இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்கப்படுறதும் காயத்தால வெளியேறுறதும் தொடர்ந்து கொண்டே இருந்துச்சு.

மொகிந்தர் அமர்நாத் மட்டும்தான் எதற்கும் பயப்படாம இதையும் சமாளிச்சு 3 சிக்ஸர்கள் எல்லாம் தூக்கியடிச்சு 60 ரன்களை சேர்த்தாரு. அதுபோலவே 21 ரன்கள் எடுத்த வெங்சர்க்கார் தவிர்த்து வேறு யாரும் ரெட்டை இலக்கத்தையே எட்டல. இதைவிடக் கொடுமை என்னன்னா அன்சுமான், குண்டப்பா, ப்ரிஜேஷ், பிஷன் பேடி, சந்திரசேகர் ஆகிய 5 வீரர்கள் காயங்களால ஆப்சென்ட் ஹர்ட் ஆக, ஐந்து விக்கெட்டுகள் தான் விழுந்திருந்தாலும் ஆட ஆள் இல்லாததால இந்தியாவுக்கு டிக்ளேர் பண்றது மட்டுமே ஒரேவழி ஆனது.

உயிர் தப்பினா போதும்ன்ற அளவுக்கு பௌலர்கள் அவங்களக் கொண்டு போய்ட்டாங்க. வெறும் 13 ரன்களை மட்டுமே இலக்காக வச்சு வேதனையோட டிக்ளேர் பண்ண இரு ஓவர்கள்லயே அதை அடிச்சு போட்டியையும் தொடரையும் ஒருங்கே வென்றது மேற்கிந்தியத் தீவுகள். தங்கள் மீதான பயம் தீர்ந்து போகாம அவங்க பார்த்துக்கிட்டதும் இதற்கான காரணம். அந்த ஸ்கோர்கார்ட் இப்பவும் அதற்கான சாட்சியா இருக்கு.

இதுல கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ஆன் ஃபீல்டுலதான் இந்த முரட்டுக்குழந்தை பாணிலாம். ஆஃப் ஃபீல்டுல அப்படியே வேறுமாதிரி. 1983ல தங்கள்ட்ட உலகக்கோப்பைய தட்டிப்பறிச்ச இந்திய அணிக்கு டிரெஸ்ஸிங் ரூம்ல சாம்பெய்ன் பாட்டில்களோட போய் வாழ்த்து சொல்ற அளவுக்கு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கான அர்த்தத்தையும் தெரிஞ்சவங்கதான் மேற்கிந்தியத் தீவுகள். அதனாலதான் அந்த அணி இன்றைக்கும் பலரோட ஃபேவரைட்.