Ind vs Wi Ind vs Wi
Lifestyle

Ind vs Wi Test : 56 ஆண்டுக்கு முன்பு கொல்கத்தாவை மிரட்டிய West Indies அணி ! | Cricket

Ayyappan

ஈடன் கார்டன்ஸ் எரிதணல் காடா மாறுறது கிரிக்கெட் உலகத்துக்கு ஒன்னும் புதுசில்ல.

1996 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியப்போ இந்தியா இலங்கைகிட்ட தோல்வியத் தழுவப் போகுதுன்ற கட்டத்துல அதைப் பொறுக்க முடியாம ரசிகர்கள் வரம்பு மீற, ஈடன் கார்டன்ஸ் கலவர பூமியா மாறுச்சு.

இருந்தாலும் இதுலாம் சாதாரணமப்பானு சொல்ற அளவுக்கு இதுக்குப் பல வருஷங்களுக்கு முன்னாடியே இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில 96 சம்பவத்தவிட மிகப்பெரிய கொந்தளிப்ப ஈடன் கார்டன்ஸ் பார்த்திருந்துச்சு.

1967-ம் ஆண்டு புத்தாண்டோட முதல் நாள் அது. டெஸ்டின் முதல் நாளான முந்தைய நாள் ஆட்டநேர முடிவுல மேற்கிந்தியத் தீவுகள் 212/4 அப்படின்னு ஓரளவு வலுவான நிலையிலேயே முடிச்சிருந்தது. 59000 மக்கள் மட்டுமே அமர்ந்து பார்க்கற வசதியிருந்த கிரவுண்ட்ல நடந்த அந்த மேட்சுக்கு பணத்துக்காக 80000 டிக்கெட்டுகள பெங்கால் கிரிக்கெட் அசோசியேசன் வித்துத் தீர்த்துருந்துச்சு.

சமீபத்தில சென்னைல நடந்த சிஎஸ்கே போட்டிகள்ல நடந்த டிக்கெட் பஞ்சாயத்துக்கள் மாதிரியும் குளறுபடிகள் மாதிரியும் கருப்புச் சந்தைல டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டிருந்தது. அதிகமான கூட்டம் குழப்பத்தையும் கூடவே கூட்டிட்டு வந்துருச்சு.

இடப்பற்றாக்குறை, கொஞ்சமும் பொறுமையின்மை அப்படின்னு என்ன நடக்குதுன்னே புரிஞ்சுக்க முடியாத நிலை. ரசிகர்களோட நடத்தை எல்லா விதிகளையும் மீறியே ஆவோம்ன்ற மாதிரியே இருந்துச்சு. இன்னமும் சொல்லப் போனா ஒருகட்டத்தில வேலிகள எல்லாம் தள்ளி விட்டுட்டு கிரவுண்டுக்குள்ளேயே நுழைய ஆரம்பிச்சாங்க. மொத்தத்திலே ரொம்ப மோசமான நிலைமைக்கு நிகழ்வுகள் கொண்டு போய் விட்ருச்சு.

போலிஸ் லத்தி சார்ஜ் நடத்துற அளவுக்கு எல்லாமே கை மீறிப் போச்சு. ஆனா கூட நிலைமைய கட்டுக்குள்ள கொண்டு வர முடியல. டீச்சர் இல்லாத சமயத்தில எல்லா கட்டுப்பாடுகளையும் உடைச்சு எறியணும்னு முயற்சிக்குற ஸ்டூடண்ட்ஸ் மாதரி கூட்டம் கூடு கலைக்கப்பட்ட தேனீக்களா மாறி காவலர்களையும் சூறையாடுச்சு.

ரொம்ப நேரமாகியும் ஸ்டேடியத்துக்குள்ள இருக்க கூட்டத்த கட்டிப் போட முடியல. மூர்க்கத்தனமா கூரைகளுக்கு தீ வைக்குற அளவு போயிட்டாங்க. மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணி வீரர்கள் யார் எங்கே இருக்காங்கன்னே தெரியாத அளவு ஆளுக்கு ஒரு பக்கமா தெறிச்சு ஓடிட்டாங்க. அவங்களை ஒன்னா சேர்த்து ஹோட்டல் அறைகளுக்கு அனுப்பறதே பெரிய கஷ்டமாக காவல் துறைக்கு மாறிடுச்சு.

வெளியிலே இருந்த போலிஸ் ஜீப்புக்கு தீ வைக்குற அளவு பார்வையாளர்கள்ல சிலர் வெறித்தனமான செயல்கள்ல ஈடுபட அந்தப் பக்கமா வந்த பஸ்கள் கூட தீயோட நாக்குக்கு தீனியாச்சு. ரேடியோல பனி மூட்டத்தால போட்டி ஆரம்பமாகுறதுல தாமதம்னு சமாளிச்சுட்டு இருக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்துலயும் அதை சுத்தி இருக்க இடங்கள்லயும் இந்தக் கூட்டம் பூகம்பத்தையே வர வச்சுடுச்சு.

இதுல ஆச்சரியம் என்னனா இவ்வளவு பெரிய சூராவளியே வீசி ஓஞ்சிருந்தாலும் அடுத்த இரு நாட்கள்லயே நிலைமை சீர் செய்யப்பட்டு போட்டி தொடர்ந்துச்சு. அவ்வளவு பதற்றத்துல ஆடியும் அந்தப் போட்டிய இன்னிங்க்ஸ் கணக்குல மேற்கிந்தியத் தீவுகள் அணி சுலபமா வெல்லவும் செஞ்சது.

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே எப்போ டெஸ்ட் போட்டி நடந்தாலும் எங்கே நடந்தாலும் அதுல யாரெல்லாம் ஆடினாலும் இந்த சம்பவம் ஒவ்வொருத்தரோட மனசுலயும் நிழலாடும்ன்றத மறுக்க முடியாது.