Asia Cup timepass
Lifestyle

Asia Cup 2023 : India vs Pakistan மோதிக்கொண்ட Austral - Asia Cup பற்றி தெரியுமா ? | Ind vs Pak

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் இந்த கோப்பைக்காக அடிச்சுக்கிட்டாங்க. மினி உலகக்கோப்பை போல நடைபெற்ற அந்த Austral - Asia கோப்பை பற்றியும் அதுல நடந்த ஒரு முக்கிய போட்டி பற்றியும் பார்ப்போமா?

Ayyappan

துணைக்கண்டம் மொத்தத்துலயும் ஆசியக்கோப்பை காய்ச்சல் அடிக்குது. ஆறு நாடுகள் இருவேறு பிரிவுகளாகப் பிரிஞ்சு 19 நாட்கள் நடக்குற 13 போட்டிகள்ல ஒரு கோப்பைக்காக மோதிட்டிருக்கு. அதைப் பத்திய தகவல்களும் எல்லாருக்கும் விரல்நுணில இருக்கு. அதேசமயம் இந்த ஆறில் மூன்று அணிகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் 1994-க்கு முன்பாக இன்னொரு தொடர்லையும் கோப்பைக்காக அடிச்சுக்கிட்டாங்க. மினி உலகக்கோப்பை போல நடைபெற்ற அந்த Austral - Asia கோப்பை பற்றியும் அதுல நடந்த ஒரு முக்கிய போட்டி பற்றியும் பார்ப்போமா?

1986, 1990 மற்றும் 1994 ஆகிய மூணு வருஷம் மட்டுமே இந்த Austral - Asia கோப்பை நடைபெற்றது. அரபு எமிரேட்ஸ்ல கிரிக்கெட் ஆர்வத்த தூண்டணும்னு அங்க இருந்த ஒரு அரபுக் கிரிக்கெட்டரால நடத்தப்பட்டதால எல்லாப் போட்டிகளுமே அங்கேயே தான் நடந்துச்சு. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து அணிகளும் மூன்று சீசன்களிலுமே ஆட, இவங்களத் தவிர்த்து இரண்டாவது சீசன்ல பங்களாதேஷும், அவங்களுக்குப் பதிலா மூன்றாவது சீசன்ல அரபு எமிரேட்ஸும் ஆடுச்சு. இந்த மூன்று சீசன்கள்லயுமே பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றது.

இதுல நடைபெற்ற பல போட்டிகளும் சுவாரஸ்யமான தருணங்கள தாங்கிட்டு இருந்தாலும் இன்றைக்கும் மறக்க முடியாத வலியாக இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கொண்டாடித் தீர்க்கும் தருணமா பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் அமைஞ்சது முதல் சீசன்ல இந்த இரு அணிகளும் மோதிக்கிட்ட இறுதிப் போட்டிதான். பொதுவாகவே இந்திய பாகிஸ்தான் அணிகள் சமபலத்தோடவே பெரும்பாலும் இருக்கதால இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பல போட்டிகள் கடைசி ஓவர் வரை போகும். இப்போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியா 245 ரன்களை அடிச்சிருக்க, அதிகபட்சமா கவாஸ்கர் 92 ரன்களைக் குவிச்சிருந்தாரு. இதை பாகிஸ்தான் துரத்த போட்டி கடைசி ஓவர் வரை போய்டுச்சு. கடைசி ஓவர்ல 11 ரன்கள் எடுக்கணும்ன்ற நிலை, பெரிய பவுண்டரிகள் மட்டுமில்லாம டி20லாம் புழக்கத்துல வராத அந்தக் காலகட்டத்துல, இது அவ்வளவு சுலபமில்ல. அதனால இந்தியா ஜெயிக்கும்ன்றது பலரோட எதிர்பார்ப்பா இருந்தது. அப்பதான் சேத்தன் ஷர்மா பௌலிங் செய்ய வந்தார்.

அந்தக் கடைசி ஓவர்ல இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்த விழுந்துடுச்சு. ஒரு விக்கெட்தான் இருக்கு, ஒரே பந்துதான் மிச்சம் இருக்கு, அதுல நான்கு ரன்கள் எடுக்கணும்ன்ற நிலை. கைல இருப்பதும் ஒரு விக்கெட் மட்டும்தான். ஸ்ட்ரைக்ல ஜாவத் மியான்தத் நின்றிருந்தாரு. யார்க்கர் போடணும்னு சேத்தன் ஷர்மா முயற்சிக்க அது லோ டாஸ் பாலாக மாற அது அப்படித்தான மாறும்னு முன்கூட்டியே கணித்த ஜாவத் மியான்தத் அதை சிக்ஸராக மாத்தி ஈசியா அணிய ஜெயிக்க வச்சுட்டாரு. முதல் Austral - Asia கோப்பைய பாகிஸ்தான் கையில் ஏந்துச்சு. நடந்து முடிஞ்சு 38 ஆண்டுகள் வரை ஆகிட்டாலும் இன்னமும் கிரிக்கெட் சர்க்கிள்கள்ல பேசப்படற போட்டியா இது இருக்கு.

நிதியுதவி இல்லாம அந்த மூணு சீசனோட இந்தத் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்படியில்லாம இரு அணிகள் மட்டுமே மோதிக்குற அளவுக்கு அதிகமான பைலேட்டரல் சீரிஸ்களுக்கு பதிலாக இது போன்ற மல்டிநேஷனல் தொடர்கள் நடைபெறுவது கிரிக்கெட்டோட வளர்ச்சிக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும், ரசிகர்களுக்கும் பேரானந்தமா இருக்கும்.