Ashes 2023 timepass
Lifestyle

Ashes 2023 : Australia-வுக்கு பாடம் நடத்தும் தகுதி McCullum-க்கு தகுதி இருக்கிறதா?

Ayyappan

தனது எல்லைக்குள்ள நிற்காம காலனி ஆதிக்கம்ன்ற பேர்ல எல்லா நாடுகளையும் ஒருகாலத்தில வளைச்சுப் போட்ட பழக்கமோ என்னவோ இப்பவும் ஸ்ட்ரைக்கர்/நான் ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன்கள் தங்களது எல்லைக்குள்ள நின்னு ஆடற பழக்கமே இங்கிலாந்துட்ட இல்ல. அதற்கான தண்டனையா அவுட் ஆக்கப்படும் போதெல்லாம் "Spirit of cricket"ன்ற பேர்ல போர்ப் பதாகை தூக்கறதும் இங்கிலாந்தோட வழக்கமாயிடுச்சு.

நடப்பு ஆஷஸ் தொடர்லயும் பேர்ஸ்டோ விஷயத்துல அதேதான் பண்ணிட்ருக்கு இங்கிலாந்து. பந்த டிஃபெண்ட் பண்ண கையோட அது டெட் பால் ஆகறதுக்கு முன்னாடியே, அடுத்த பக்கம் இருக்க பென் ஸ்டோக்ஸ்கிட்ட குசலம் விசாரிக்க நகர, அந்த கேப்ல விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே கைக்கு வந்த பந்தால ஸ்டம்பிங் பண்ணி பேர்ஸ்டோவ வெளியேத்திட்டாரு. போட்டியோட முக்கிய திருப்புமுனையா இது மாறி 43 ரன்கள் வித்தியாசத்தில இங்கிலாந்து தோற்கவும் இது காரணமாச்சு.

ஆடியன்ஸ்ல இருந்து லார்ட்ஸோட MCC மெம்பர்கள் வரைக்கும் ஏதோ ஏமாற்றி ஆஸ்திரேலியா போட்டிய ஜெயிச்ச மாதிரி கூச்சலிட்டதோட அவங்கள கிண்டல் பண்ணி சத்தம் எழுப்பிட்டே இருந்தாங்க. உண்மை என்னன்னா ஆஸ்திரேலியா விதிகளுக்கு உட்பட்டு தான் ஆடியிருந்துச்சு. இது அவங்களுக்குப் புரியலேன்னாலும் நியூசிலாந்தோட முன்னாள் ஸ்டார் பிளேயரும் இங்கிலாந்தின் இந்நாள் கோச்சுமான பிரண்டன் மெக்கல்லத்துக்கே புரியலேன்றதுதான் காலக்கொடுமை.

போட்டிக்கு முன்னதாக இது விளையாட்டு மட்டுமே, அது முடிஞ்சதும் நாங்கள் சேர்ந்து அமர்ந்து பீர் அருந்துவோம்னு சொல்லியிருந்தவரு, போட்டி முடிவுக்கு பின் இனி அவ்வளவு சீக்கிரமா அது நடக்காதுன்னு சொல்லியிருந்தாரு. இதுதான் இப்போ விமர்சனத்த சந்திச்சுருக்கு. ஏன்னா 2006/2007 ஆம் ஆண்டு இலங்கை நியூசிலாந்துல சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்துல மெக்கல்லம் அலெக்ஸ் கேரே பண்ண அதே காரியத்த தானே பண்ணியிருந்தாரு.

குமார் சங்கக்காரா 99 ரன்கள்ல ஆன்ஸ்ட்ரைக்ல இருந்தாரு. எதிர்முனைல முத்தையா முரளிதரன் அவரோட பத்தாவது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைச்சுட்டு இருந்தாரு. ஷேன் பாண்ட் வீசுன பந்த ஃபைன் லெக்ல அடிச்சுட்டு சங்கக்காரா ரன் எடுக்க ஓடி தன்னோட செஞ்சுரிய நிறைவு செய்ய உற்சாக மிகுதியில ஸ்ட்ரைக்கர் எண்ட்ல இருந்த முரளிதரன் அவர நோக்கி ஓட, சமயோசிதமா அதிவேகமா செயல்பட்ட மெக்கல்லம் ஸ்டம்பை தகர்த்து முரளிதரன ஆட்டமிழக்க வச்சாரு.

போட்டிக்குப் பின்பு தந்த பேட்டியில நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ஃப்ளம்மிங் தங்களோட காரியத்துல இருந்த நியாயத்த விளக்கியிருந்தாரு. அதுல தப்பு எதுவும் இல்லேன்றதுதான் உண்மை. இந்த சம்பவம் நடைபெற்று பத்தாண்டுகள் கழித்து MCC Spirit of cricket லெக்சர் கொடுத்த மெக்கல்லம் இதைப் பற்றி சொல்லி அங்கிருந்த சங்கக்காராவிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். ஆனால் இது நட்பு ரீதியாகக் கேட்கப்பட்ட மன்னிப்பே ஒழிய அப்போது மெக்கல்லம் செஞ்சதுலயோ, இப்போ அலெக்ஸ் கேரே செஞ்சதுலயோ தப்பு எதுவும் இல்லேன்றது மட்டுமே உண்மை.

ஆனா இதை உணராம பயிற்சியாளருக்குரிய பொறுப்போட அடிப்படை விதிகளைக்கூட கடைபிடிக்காம அவுட் ஆன பேர்ஸ்டோவை "Stay inside your line"னு கடிந்து கொள்ளாம "Spirit Of Cricket"ன்ற பேர்லயும் ஜென்டில்மேன் கேம்ன்ற பேர்லயும் அந்தப் பழியை எதிரணியின் மேல் தூக்கிப் போடுவதுதான் நகைப்புக்குரியதாகி இருக்குது.

மற்ற நாட்டு கிரிக்கெட் போர்டுகள் அனைத்தும் இணைந்து கிரிக்கெட் ரூல்கள் இருக்க புத்தகத்தை இங்கிலாந்துக்கு பரிசளிக்கறதுதான் அவங்களுக்கு விதிகளைப் புரிஞ்சுக்க வைக்க சாலச்சிறந்த வழி.