கடுமையான வெப்பம், போதிய விளைச்சல் இல்லாதது, பருவமழை பற்றாக்குறை, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. தக்காளி விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரிக்கும் வரை விலை குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து தான் காணப்படுகிறது.
சில பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.300/- வரை உயர்ந்துள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு சில விவசாயிகளுக்கு ஒரு வரமாக மாறியுள்ளது. "தக்காளி விற்றே கோடியில் வருமானம், கண்ணீர் துடைத்த தக்காளி" என்றெல்லாம் பல செய்திகளை கேட்டிருப்போம். அதே மாதிரி ஒரு விவசாயி தக்காளி விற்றே புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
கர்நாடகாவில் ராஜேஷ் என்ற விவசாயியும் தனது தக்காளியை விற்று ரூ.40 லட்சம் சம்பாதித்துள்ளார். இவர் தக்காளி விலை உயரும் முன்பே, 12 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டுள்ளார். இந்த சீசனில் தக்காளியை விற்று சம்பாதித்த பணத்தில் ஒரு எஸ்யூவி காரையும் வாங்கியுள்ளார்.
ராஜேஷ் 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு கிட்டத்தட்ட 800 தக்காளி மூட்டைகளை விற்று ரூ. 40 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். சில மாதங்களுக்கு தக்காளியின் விலை இதே நிலையில் இருந்தால், ₹1 கோடி வரை லாபம் கிடைக்கும், நிலத்தை நம்பியதால் வீண் போகவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த தக்காளி விலை உயர்வு போதுமான பணத்தை கொடுத்துள்ளதால் இனி திருமணம் செய்துக்கொள்ள மணமகளைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண் வீட்டார், அரசு மற்றும் கார்ப்பரேட் வேலைகளுடன் கூடிய மாப்பிள்ளைகளை விரும்புகிறார்கள். ஒரு கார்ப்பரேட் ஊழியரை விட விவசாயிகளால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்து விட்டேன் . இனி நான் எனது புதிய எஸ்யூவி காரில் சென்று மணமகளைத் தேடுவேன் என்றும் கூறியுள்ளார்.