ஹல்க் மனிதன் டைம்பாஸ்
Lifestyle

13.5 டன் லாரியை கையால் இழுத்து சாதனை - இந்தியாவின் ஹல்க் மனிதன்!

தற்போது உலக சாதனை முயற்சியாக 14 டயர்களுடன் 13 1/2 டன் எடை கொண்ட லாரியை 4 நிமிடத்தில் 111 மீட்டர் இழுத்தார்.

டைம்பாஸ் அட்மின்

14 டயர் கொண்ட 13 1/2 டன் லாரியை நான்கு நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்த குமரி மண்ணின் மைந்தன் கண்ணன். பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் என பலர் பங்கேற்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாமரை குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் உடல்வலு பயிற்சியாளர் ஆவார். 2003ம் ஆண்டு ஜூனியர் ஆசிய இரும்பு மனிதன் பட்டத்தையும் 2004 ம்ஆண்டு ஜூனியர் உலக இரும்பு மனிதன் பட்டத்தையும் கைவசப் படுத்தியவர். 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் 3வது இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

இந்நிலையில் உலக சாதனை படைக்க விரும்பினார் கண்ணன், ஐரோப்பா போன்ற உலக நாடுகளில் இருமுனை கயிறு மூலம் அதாவது ஒரு கையால் கயிற்றால் கட்டப்பட்ட கனரக வாகனத்தையும் மற்றொரு கையால் எதிர்முனையில் உள்ள தூணில் கட்டப்பட்ட கயிற்றை பிடித்து இழுப்பார்கள். ஆனால் கண்ணன் இதனை ஒரு பக்க இழுவையால் சாதித்துள்ளார்.

தற்போது உலக சாதனை முயற்சியாக 14 டயர்களுடன் 13 1/2 டன் எடை கொண்ட லாரியை 4 நிமிடத்தில் 111 மீட்டர் இழுத்தார். "தன் சாதனையை தானே முறியடித்து" சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். 

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , மேயர் மகேஷ் , சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

உலக சாதனை நிகழ்ச்சியை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கண்ணனின் சாதனையை கண்டு அனைவரும் மெய் சிலிர்த்து நின்றனர். மேலும், அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.  

இதுகுறித்து, கண்ணன் கூறும்போது, "தமிழக அரசு சார்பில் உதவி செய்தால் உலக அளவில் சாதனையை என்னால் படைக்க முடியும். மாவட்டந்தோறும் 100 இளைஞர்களை என்னால் உருவாக்க முடியும்." என்றார்.

விளையாட்டுத்துறையில் உதவிகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக அமைகிறது.

- நாக லெட்சுமி.