Koovagam
Koovagam  Koovagam
Lifestyle

Miss Koovagam 2023 : டைட்டில் வின்னர்ஸ் யார் யார்?

டைம்பாஸ் அட்மின்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், இந்தத் திருவிழா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த திருவிழாவையொட்டி நடத்தப்படும் திருநங்கைகளுக்கான `மிஸ் கூவாகம்' அழகிப் போட்டி, மிகவும் பிரபலமானது. அதன்படி, இந்த போட்டி மே 1-ம் தேதி காலை விழுப்புரத்தில் துவங்கியது. இதன் முதல் சுற்றில் சுமார் 46 திருநங்கைகள் போட்டியாளராக பங்குபெற்ற நிலையில், 16 திருநங்கைகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகினர்.

'மிஸ் கூவாகம்- 2023' திருநங்கையர்கள் யார் யார் என்பதனை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி, 1-ம் தேதி மாலை விழுப்புரம் நகராட்சி திடலின் பிரம்மாண்ட மேடையில் ஆரம்பமானது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், எம்.பி கௌதம சிகாமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே கனமழை பொழிந்ததால், போட்டி பாதியிலேயே தடைப்பட்டது.

இதனால் மிகுந்த வருத்தமடைந்த திருநங்கைகள்... நேற்று (02.05.2023) காலை, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், தடைப்பட்ட நிகழ்ச்சியை எளிமையாக நடத்தினர். 16 பேரில் இருந்து 7 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னணி இசை இசைக்கப்பட, ஒருவரை தொடர்ந்து மற்றொருவர் ஒய்யாரமாக நடந்து வந்தனர். அவர்களிடம் பொது அறிவுத்திறன் குறித்த கேள்வியும் எழுப்பப்பட்டது.

இதில், மிகவும் சிறப்பாகப் பதிலளித்த சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா, 'மிஸ் கூவாகம் - 2023' அழகி பட்டத்தை வென்றார். அதே சென்னையைச் சேர்ந்த டிஷா இரண்டாவது இடத்தையும், சேலத்தைச் சேர்ந்த சாதனா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றியாளர்கள் தங்களின் அலாதியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பார்வையாளர்களும், சக போட்டியாளர்களும் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தினர்.

மிஸ் கூவாகம் - 2023 வெற்றியாளர்கள்!

1). நிரஞ்சனா - சென்னை (எண்:18, சிவப்பு நிற புடவை)

2). டிஷா - சென்னை (எண்:32, இளஞ்சிவப்பு (pink) நிற புடவை)

3). சாதனா - சேலம் (எண்:15, சாம்பல் நிற புடவை)

- அ.கண்ணதாசன்.

போட்டோ: தே.சிலம்பரசன்.