டி.வி வந்த புதுசுல அதைப் பார்க்கிறதுக்கு நாயா பேயா அலைஞ்ச ஆளுங்கள்லாம் கையைத் தூக்குங்க. விளம்பரங்கள் பற்றி நாஸ்டால்ஜியா சொல்றேன்.
இங்கிலீஷ் மாரி, பேக்மேன் பிஸ்கெட், பார்லே ஜி பிஸ்கெட்லாம் சாப்பிடச் சொல்லி படுத்தி எடுப்பாங்களே, ஞாபகம் இருக்கா?
‘லைஃபாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்’னு குளிக்க வைக்க ஒரு குரூப் சுத்துமே!
‘வாஷிங் பவுடர் நிர்மா’ பாட்டுக்கு இந்தியாவே ஆடி இருக்குமே!
‘ஜண்டு பாம் ஜண்டு பாம் வலிகளை நீக்கும் பாம்’ என்ற பாட்டும், சச்சினும் கபில்தேவும் ரகசியம் சொல்லும் பூஸ்ட், அண்டை வீட்டாருக்கு பொறாமை வரவைக்கும் மொட்டைத்தலை ஒனிடா மண்டையன்லாம் இப்பவும் ஞாபகத்துல இருக்காங்களா?
சண்ட்ராப் ஆயில் விளம்பரத்துல அம்மா சுட்டு வெச்ச மெகா சைஸ் குலாப் ஜாமூன், பூரிகளுக்கு நடுவுல ஓடுவானே ஒரு சுட்டிப்பயல்... பூரிகூட உருண்டு விழுமே... ஞாபகம் வருதா?
‘சில விஷயமே நம்மிடமே...சில விசேஷமே!’னு தம் கட்டி சங்கர் மகாதேவன் வாய்ஸ்ல கேட்ட கேட்பரீஸ் டெய்ரி மில்க் விளம்பரத்தை மறக்க முடியுமா?
டயனோரா, சாலிடெர் ப்ளாக் அண்ட் ஒயிட் டி.வி-க்கு டெல்டா டர்போ அது இதுனு பேரு வெச்சு பட்டையைக் கிளப்புவாங்களே..! விக்கோ டர்மெரிக் ஆயுர்வேதிக் க்ரீம் விளம்பரங்களில் வரும் குரலும் இசையும் இன்னும் எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் மறக்க முடியுமா?
கருப்பு கலர்னு மட்டும் நம்ம ஊர்ல சொன்ன காலத்துல ‘இது கோல்ட் ஸ்பாட்... ஸிங் திங்’னு அடிக்கடி விளம்பரத்துல பட்டையைக் கிளப்புவாங்களே, ஞாபகம் இருக்கா?
எம் 80-யை வைத்து சாகசம் பண்ணும் அஞ்சாத நிருபர் வீரபத்திரன், பஜாஜ் ஸ்கூட்டர் வைத்திருக்கும் ஹமாரா இந்தியா ஹமாரா பஜாஜ் மக்கள், நம்ம ஊரு வண்டினு டிவிஎஸ் 50, ‘சுசுகி சாமுராய் நோ ப்ராப்ளம்’னு சொல்லிட்டுப் போற ஜப்பான்காரர்னு இப்பவும் மனசுல ஈரமாய்!
‘ஐ யம் எ காம்ப்ளான் கேர்ள்’னு பொண்ணு சொல்ல ‘ஐ யம் எ காம்ப்ளான் பாய்’னு சொல்வான் பையன்... ஞாபகம் இருக்குதா?
உண்ணாவிரதம் இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா ‘கேட்பரீஸ் பெர்க்’கை லவட்டுறதை ரசிச்சவங்கள்லாம் இப்போ என்ன பண்ணிட்டு இருப்பாங்க?
‘லா லலலா லலலா லாலா லாலா’ லிரில் சோப்பேதான் பாஸ். அந்த அருவியும் அந்த அழகியையும் மறந்தாலும் அந்த லா லலலாவை யாரும் மறக்க முடியாதுல்லா?
‘ப்ரீத்திக்கு நான் கியாரன்டி’னு பல பேரைக் கிண்டல் பண்ண வெச்சது ஞாபகம் இருக்கா?
தன்னைத்தானே வரைந்துகொள்ளும் லெஹர் 7-அப் கார்ட்டூன் கேரக்டரை எத்தனை பேர் கையில் வரைந்திருப்போம்!
‘அரே உசுர் வாவ் தாஜ் போலியே!’ என தபேலாவில் உருட்டி விளையாடும் ஜாஹீர் உசேனை ஞாபகம் இருக்கா?
மூக்கை உறிஞ்சிக்கொண்டே படம் பார்ப்பவரைப் பார்த்து எல்லோரும் திரும்ப, ஸ்டைலாய் விக்ஸ் இன்ஹேலரை வைத்து உறிஞ்சிக்கொண்டே படம் பார்க்கும் யூத்தை மறக்க முடியுமா?
அனாசின் நான்கு விரல்களை மடக்கி வெச்சு மெடிக்கல்ல மாத்திரை கேட்போமே...?
நினைத்தாலே மனசு இனிக்குதப்பா!