Street Cricket டைம்பாஸ்
Lifestyle

'அம்மா சத்தியம், ஒன் பிட்ச் கேட்ச்' - Street Cricket அட்ராசிட்டிஸ்

ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் ஐ.சி.சியை மிஞ்சும் அளவுக்கு விதிமுறைகளைப் போட்டு கலாட்டா செய்திருப்போம். அங்கு நடக்கும் அட்ராசிட்டிகளைச் சொல்லவா?

கிங் காங்

சிறுவயதில் நாம் அனைவரும் கிரிக்கெட் விளையாடி இருப்போம். ஏரியா கிரிக்கெட்டில் ஐ.சி.சி விதிமுறைகளை மிஞ்சும் அளவுக்கு எக்கச்சக்க விதிமுறைகளைப் போட்டு கலாட்டா செய்திருப்போம். அங்கு நடக்கும் அட்ராசிட்டிகளைச் சொல்லவா?

காமன்மேன் :

ஒரு அணிக்கு 11 பேர் என்ற `ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்' எல்லாம் `ஸ்ட்ரீட் கிரிக்கெட் ரூல்ஸ்'-ல் இல்லை. ஏரியாவில் விளையாடும்போது மொத்தம் எத்தனைப் பேர் வருவார்கள் என்று சொல்ல முடியாது.

விளையாட வருபவர்களைச் சரி பாதியாகப் பிரித்து விளையாடுவதுதான் வழக்கம். இரண்டு பக்கமும் ஆள் எடுத்ததுக்குப் பிறகும் ஒரு நபர் மட்டும் கூடுதலாக இருந்தால், அவனை காமன்மேனாக விளையாட வைக்கும் கலாசாரத்தை நாம்தான் தொடங்கிவைத்தோம்.

காமன்மேனா இருக்கிறதுல என்ன பிரச்னைன்னா... அவனுக்கு பேட்டிங் மட்டும்தான் கிடைக்கும். பெளலிங் போட பந்தைத் தொடவே முடியாது. மற்றவர்கள் இரக்கப்பட்டால் விக்கெட் கீப்பராகி, பந்தைத் தொடும் பாக்கியம் கிடைக்கும்.

காமன்மேன் கடைசியாகத்தான் பேட்டிங் பிடிக்க வேண்டுமென்பது எழுதப்படாத `விதி' பாஸ். ஆனால், நான் ரெண்டு டீம்லயும் ஓப்பனிங் பேட்ஸ்மேனா நின்னு போங்கு பண்ணி இருக்கேனே!

அம்பயர் :

விளையாடவே ஆள் வராதபோது, அம்பயருக்கு எங்கே போறது? பேட்டிங் பிடிக்கும் டீமிலிருந்து யாராவது ஒரு ஆள் அம்பயராக நிற்க வேண்டும். அதற்கும் நம்ம பசங்க ஒரு ட்விஸ்ட் வெச்சாங்க. ஓப்பனிங் பேட்ஸ்மேன்ஸ் யாராவது அவுட்டானால் அடுத்து பேட்டிங் பிடிக்கப்போகும் நபர்தான் அம்பயராக நிற்க வேண்டும்.

பேட்டிங் பிடிக்க வேண்டுமென்ற நப்பாசையில், அம்பயராக நிற்கும் நம்ம டீம் ஆளே சீக்கிரம் விக்கெட் விழ வேண்டுமென்று எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக்கொண்டிருப்பான். நான்லாம் எல்.பி.டபிள்யூலாம் கொடுப்பேனே!

பேட்டிங் பிடிக்கும் நபர் பௌலிங் போடக்கூடாது:

ஒருவன் பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் சகலகலா வல்லவனாக இருப்பான். அப்படி இருப்பவன் நிலைமை ரொம்பப் பாவம். ஏன்னா... ஓப்பனிங் பேட்ஸ்மேனா கெத்து காட்டிட்டு, பெளலிங் போடவந்தா பெரிய கலவரமே வெடிக்கும்.

`பேட்டிங் புடிச்சான்ல... ஓப்பனிங் பெளலிங் போடக்கூடாது' என்று நம்ம டீமிலிருந்தே சண்டைக்கு ஆள் கிளம்பி வருவார்கள். நான்லாம் ஓவருக்கும் 7 பால் போட்டிருக்கேனே!

அம்மா சத்தியம் :

டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால், ரீ-ப்ளே போட்டுப்பார்த்து அதை அவுட்டா, இல்லையா என்று முடிவுக்கு வருவார்கள். ஆனால் இதெல்லாம் தெருவில் விளையாடும்போது சாத்தியமில்லை.

அதற்குப் பதிலாக ரீ-ப்ளேவை விட மிகக் கொடூரமான `மெத்தட்' ஒன்று இருக்கிறது. அதுதான் `அம்மா சத்தியம்'. பொதுவாக இந்த மாதிரியான க்ளைம், ரன் அவுட்டுகளின் பொதுதான் அதிகம் நடக்கும்.

அது அவுட்டா இல்லையான்னு பேட்ஸ்மேனுக்கு மட்டும்தான் தெரியும். பேட்ஸ்மேன்கிட்டேயே `டேய் அம்மா சத்தியம் பண்ணு, இது அவுட் தானே?' எனக் கேட்டு முடிவை அறிவிக்கும் சாமர்த்தியம் உலகத்துலயே கிடையாது. நான்லாம் அழுதுடுவேனே!

ஒன் பிட்ச் கேட்ச் :

கிரிக்கெட்டை கிடைக்கும் சந்து பொந்தில் எல்லாம் விளையாடுவோம். அப்படி இடப்பற்றாக்குறையான இடத்தில் விளையாடும்போது `ஒன் பிட்ச் கேட்ச்' என்ற முத்தான ரூல்ஸைக் கொண்டு வருவோம்.

அதாவது பேட்ஸ்மேன் அடித்துப் பின்னர் அந்தப் பந்தை ஒருமுறை தரையில் குத்தவிட்டுப் பிடித்தாலும் பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்ப வேண்டும். தூக்கி அடிச்சி அவுட் ஆவேனே!