புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது, மற்றொரு லாரி ஓட்டுநருடன், இந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த அந்த மற்றொரு ஓட்டுநர்... இந்த கண்டெய்னர் லாரியில் ஓட்டுநரின் கதவை திறந்து ஏறி சண்டையிட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரோ, "என்கிட்டியே வா" என்று லாரியைக் கிளப்பிக்கொண்டு தாறுமாறாக ஓட்டி வந்திருக்கிறார். ரேஸராக மாறிய அவர், சாலையின் வளைவுகளிலும் வேகத்தை குறைக்காமல் இ.சி.ஆர் சாலை வழியே கோட்டக்குப்பம் எல்லை வரை லாரியை இயக்கியிருக்கிறார். அந்த மற்றொரு நபரோ... 'சுந்தரம் டிராவல்ஸ்' வடிவேலு கதையாக உயிரை கையில் பிடித்தபடி லாரியின் கம்பிகளை கெட்டியாக பிடித்தபடியே தொங்கியிருக்கிறார்.
லாரியில் ஒருவர் தொங்கியபடி செல்வதையும், அசூர வேகத்தில் லாரி செல்வதையும் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், லாரியை நிறுத்த முற்பட்டதோடு... அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ஆனால், அந்த கோவக்கார போதை ஓட்டுநரோ... லாரியை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்துள்ளார். எனவே, இது குறித்த புகார் போலீஸூக்கு செல்ல, கோட்டக்குப்பம் போலீஸார் கண்டெய்னர் லாரியை ச்சேஸ் செய்து மடக்கி பிடித்துள்ளனர். உயிரை கையில் பிடித்தபடி சென்ற நபர், பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து. கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே, மருத்துவர் மூலம் அவரை பரிசோதித்து போதையில் இருப்பதற்கான சான்றிதழ் பெற்று வழக்கு பதிந்து, ரூ.10,000 பத்தாயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான பரிந்துரையும் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அ.கண்ணதாசன்.