Rats in Rails Timepassonline
Lifestyle

Lucknow:வடக்கு ரயில்வேயில் ஒரு எலியைப் பிடிக்க 41 ஆயிரம் ரூபாய்! -RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ மற்றும் பெரோஸ்பூர் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளைக் கொண்ட வடக்கு ரயில்வேயில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதால், எலிகளைப் பிடிப்பதற்காக ரயில்வே துறையால் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு எனக்கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் கேட்ட தகவல்களுக்கு பெரோஸ்பூர் மற்றும் மொராதாபாத் பிரிவுகள் பதிலளிக்கவில்லை. அம்பாலா மற்றும் டெல்லி பிரிவுகள் பெரும்பாலான கேள்விகளைத் தவிர்த்து விட்டன. ஆனாலும், அம்பாலா பிரிவு ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2023 வரையிலான இரண்டு ஆண்டு காலகட்டத்தில் எலிகளைப் பிடிக்க 39.3 லட்ச ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ளது. இருப்பினும் பிடிபட்ட எலிகளின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை.

'வடக்கு ரயில்வே (லக்னோ கோட்டத்தில்) எலிகளைப் பிடிப்பதற்கு யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது?' என்ற கவுரின் கேள்விக்கு, லக்னோவைச் சேர்ந்த சென்ட்ரல் கிடங்கு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு எலிகளைப் பிடிக்க 2019 முதல் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அத்தோடு ஒவ்வொரு எலியையும் பிடிக்க 41,000 ரூபாய் ரயில்வே செலவிடுவதாகவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 168 எலிகளைப் பிடிக்க இரண்டு ஆண்டுகளில் 69.5 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்!


ஆனால், டெல்லி பிரிவோ கூடுதல் விவரங்களைத் தெரிவிக்காமல், பயணிகள் ரயில்களில் பூச்சி மற்றும் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் யாருக்க வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை மட்டும் தந்துள்ளது.

எதுவாயினும் கொறித்துண்ணிகள் தந்துள்ள சேதத்தின் மதிப்பு குறித்து, லக்னோ பிரிவின் மத்திய பொதுத் தகவல் அதிகாரியிடம் கேட்டபோது, "சேதமடைந்த பொருட்கள் மற்றும் பொருட்களின் விவரங்கள் கிடைக்கவில்லை. சேதம் மதிப்பீடு செய்யப்படவில்லை" என்று பதிலளித்துள்ளார்.

ஒரு எலியைப் பிடிக்க 41,000 ரூபாய்  செலவிட்ட ரயில்வே துறையை நினைத்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். 

- மோ.நாக அர்ஜுன்