ஃபேஸ்புக் எழுத்தாளர் ஃபேஸ்புக் எழுத்தாளர்
Satire

ஃபேஸ்புக் எழுத்தாளர் ஆவது எப்படி?

‘கிராவிட்டி’ படம் நல்லாயிருக்குனு உலகமே சொல்லிட்டிருக்கும்போது, ‘‘த்தூ.. படமா அது?’’ என்று கவன ஈர்ப்பு ஸ்டேட்டஸ் போட்டு, கேப்ல கெடாயை வெட்டணும்.

டைம்பாஸ் அட்மின்

நீங்கள் ஒரு புண்ணாக்கு வியாபாரியாக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம், யாராக இருந்தாலும் இப்ப லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகிறதுதான் பாஸ். டக்குனு ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க.

கீழே கொடுத்திருக்கும் விஷயங்களை நோட் பண்ணி அதை ஃபாலோ செய்தால் போதும். நாளையில் இருந்து உங்களுக்கும் ‘பிரபல எழுத்தாளர் .....க்கு’ என்று மின்னஞ்சல் வரும்.

எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்கனும். அண்ணாச்சிக் கடை அக்கவுன்ட் மாதிரி கஷ்டம் எதுவும் இல்லை. இது செம ஈஸி! ஃபேஸ்புக்ல உங்க பேருக்கு முன்னாடி ரைட்டர்னு ஆங்கிலத்துல சேர்த்து எழுதμம். அப்பதான் நமக்கே நம்ம மேல் நம்பிக்கை வரும்.

எல்லாத்துக்கும் கருத்து சொல்லμம். முக்கியமா எல்லோரும் சொல்ற கருத்துக்கு எதிராச் சொல்லணும்.

உதாரணத்துக்கு ‘கிராவிட்டி’ படம் நல்லாயிருக்குனு உலகமே சொல்லிட்டிருக்கும்போது, ‘‘த்தூ.. படமா அது?’’ என்று கவன ஈர்ப்பு ஸ்டேட்டஸ் போட்டு, கேப்ல கெடாயை வெட்டணும். ‘‘இது நல்ல படம் இல்லைன்னா, வேற எது நல்ல படம்?’’னு கோவமாக் கேட்டு, ஒண்ணு ரெண்டு ஆடு சிக்கும், இறங்கி அலசித் தேடினாலும் நெட்ல கிடைக்காத எதாவது ஒரு ஈரானிய, ஈராக்கிய, தைவானியப் படங்கள் பெயரைச் சொல்லி, அது மாதிரி வருமானு கேக்கணும்.

அந்தப் படத்தை தேடிப் போனவன், அப்புறம் ஃபேஸ்புக் பக்கமே வரமாட்டான்.

ஓகே இதுவரை சொன்னது அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு. இனிதான் கொஞ்சம் கொஞ்சமா கங்காவாக இருந்து சந்திரமுகியா மாறும் ஜோதிகா மாதிரி நீங்க பிரபல எழுத்தாளராகப் போறீங்க.

எப்படியும் இலக்கியவாதிகள்னா, அதிலே ஏகப்பட்ட குரூப்ஸ் இருக்கும். ஏதாவது ஒரு குரூப்ல ஐக்கியமாகித் தளபதி ஆகணும். அப்புறம் ‘தல’யே உங்களைப் பத்தி பாராட்டியோ, திட்டியோ எழுதிப் பிரபலம் ஆக்கிடுவார்.

புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நீங்க வெளியிடப்போற புத்தகத்துக்கான விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கணும். ‘‘காபி ஷாப்பில் நல்ல காபி கிடைக்கிறது. ஆனால் ஒயின் ஷாப்பில் நல்ல ஒயின் கிடைப்பது இல்லை.’’ வெளியாகவிருக்கும் ‘கொலைவெறி’ நாவலில் இருந்து... இப்படி நாள் ஒன்றுக்கு 18 ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் போட வேண்டும்.

புத்தக வெளியீட்டு விழாவில் வாசகிகளின் சார்பாக ஒருவர் மட்டும் பேசுவார் என்று அறிவிப்பு வெளியிட்டு, நிறைய வாசகிகள் விழாவிற்கு வருவார்கள் என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அப்புறம் என்ன, வெளியீட்டு விழாவுக்குக் கூட்டம் பிச்சுக்கும். விழா அன்று வாசகிகள் என்று யாரும் வரப்போவது இல்லை என்பதால், ஷூட்டிங் ரிச் கேர்ள்ஸ் புக் செய்து அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்புக்காக பௌன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேல உள்ள டிப்ஸையெல்லாம் குறிச்சிக்கிட்டீங்களா? முதல் வேலையா வாசகர் வட்டம் ஆரம்பிச்சிருவோம்.