சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தில் ‘தி முகாப்’ என்ற பெயரில் ஒரு பெரிய கட்டிடம் ஒன்று கட்டப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டதோடு, இது தொடர்பாக ஒரு காணொளி ஒன்றையும் சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல 20 மடங்கு பெரிதாக என்றும் 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் இந்த கட்டிடம் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதில் அருங் காட்சியகம், தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், பல்நோக்கு திரையரங்கம் மற்றும் 80-க்கும் மேற்பட்ட கலாச்சார மையங்களும் அமைய உள்ளன.
இவற்றோடு, 1.04 லட்சம் வீடுகள், 9,000 ஓட்டல் அறைகள், 9.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் சில்லறை வணிக கடைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடங்கள், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்கள், 18 லட்சம் சதுர மீட்டர் சமுதாய மையங்களும் இதில் அமைய உள்ளன.
இதன் கட்டுமானப் பணி 2030-ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3.34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.