`காதலில் தோத்தா ஒண்ணு தாடி வை. இல்லை சரக்கடிச்சு குப்புறப்படு'னு ஊட்டி வளர்த்துட்டாங்க. எத்தனை காலத்துக்குத்தான் அந்தக் கோலத்தோடு திரிவது? பார்பர் ஷாப் கடையெல்லாம் காத்தாட வைக்கிற அந்தப் பாவம் நமக்கு வேணுமா பாஸ்? காலத்துக்குத் தகுந்தமாதிரி புதுசு புதுசா துக்கத்தை அனுஷ்டிக்கலாமேனு சில ஐடியாஸ்!
காதல்ல தோல்வி வந்தா என்ன... தாடியை மழுமழுன்னு வழிச்சுக்கிட்டு வழக்கமான காஸ்ட்யூம்லயே வாங்க. நீங்க தாடி வெச்சுகிட்டுப் போய், உங்களுக்கே தெரியாம உங்களை சைட் அடிச்ச ராதாவோ, மாலாவோ உங்க கோலத்தைப் பார்த்து, `இது ஏற்கனவே லவ் ஃபெயிலியராகி, விட்டத்தை வெறிக்கிற கேஸு போலிருக்கே'னு கண்டுக்காம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்புறம், `வடபோச்சே'னு வடிவேலு வருத்தப்பட்ட கதை ஆயிடும்.
அப்படியும் துக்கம் அனுஷ்டிக்கணும்னா ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் எதுக்கு இருக்கு? உங்க சோகக் கோலத்தைப் போட்டோ எடுத்து புரொஃபைல் பிக்சரா வைங்க.
`ஐயோ பாவம்'னு பரிபாதப்படுற `வாலி' சிம்ரன் மாதிரி பொண்ணுங்க இருக்கும்போது, உங்க போட்டோவுக்கு மட்டுமில்ல... உங்களுக்கும் சேர்த்து லைக்ஸ் விழ வாய்ப்பு இருக்கு!
கைமீறிப்போன காதலி ஞாபகம் வருதா? கவலையே படாம டக்குனு ஆண்ட்ராய்டு போனை எடுத்து, ஆங்கிரி பேர்டு கேமை வெறித்தனமா விளையாடுங்க. இல்லைனா, போட்டிருக்குற முண்டா பனியனைக் கழட்டிட்டு பத்து, பதினைஞ்சு புல்லப்ஸ் எடுக்க ஆரம்பிச்சீங்கன்னா, உடம்புக்கு நல்லது!
நெகட்டிவா ஏன் திங்க் பண்ணணும்ங்குறேன்? காதலிக்கும் போது புசுபுசுனு வீங்கிக்கெடந்த உங்க பர்ஸ், எப்படியெல்லாம் நோஞ்சானா மெலிஞ்சதுனு அரைகுயர் நோட்டு வாங்கி கணக்குப் போட்டுப் பாருங்க.
அந்தப் பணமெல்லாம் அப்படியே இருந்திருந்தா, இன்னைக்கு ஏ.டி.எம் வாசல்ல கால் கடுக்க நிற்கிற நிலைமை வந்திருக்குமானு யோசிங்க. அப்படியெல்லாம் யோசிச்சுட்டு, விபரீத முடிவுகளுக்குப் போயிடாம, `தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு'னு விட்டுடணும். நமக்கு எதுக்கு வம்பு?
காதல் கவிதை பாடிட்டு இருந்த சமயத்துல, பலபேரைக் கண்டுக்காம இருந்திருப்பீங்க. ஒண்ணுவிட்ட மாமா பொண்ணு, ரெண்டுவிட்ட சொந்தக்காரப் பொண்ணுனு ஒண்ணு விடாம, ஊருக்குள்ள தேடுங்க. ஒருவேளை அவங்களும் உங்களைத் தேடிக்கிட்டு இருந்தா... வாழ்க்கை வானவில் ஆயிடுமே பாஸ்!