Lifestyle

'ஆகா.. நமக்கு வயசாகிடுச்சு போலயே' - அறிகுறிகள் ஒரு லிஸ்ட்

சொந்தக்காரவுங்க பிரச்சனை, பக்கத்து வீட்டுக்காரவுங்க பிரச்சனைக்கு மட்டுமில்ல, உள்ளூர் பிரச்சனையில இருந்து உக்ரைன் போர் வரைக்கும் உங்கக்கிட்ட தீர்வு இருக்கும்.

Aravindraj R

சாதா காய்ச்சல்ல ஆரம்பிச்சு, கொரோனா வரைக்கும் நமக்கு வந்துருக்கானு சில அறிகுறிகள வச்சு தெரிஞ்சுக்கலாம். அதேமாதிரிதான், வயசாகிடுச்சானு சில அறிகுறிகள் வச்சு தெரிஞ்சுக்கலாம். அதெல்லாம் என்னனு பாக்குறதுக்கு முன்னாடி உங்க மனச திடப்படுத்திக்கோங்க.

அறிகுறி 1:

கல்யாணங்காட்சி, காது குத்து, நல்லது பொல்லதுனு எந்த விஷேசத்துக்கு போனாலும், வயசு பசங்கள்லருந்து வயசாகி பென்ஷன் வாங்கிட்டிருக்கவுங்க வரைக்கும் அம்புட்டுப்பேத்தையும் புடிச்சு வச்சுக்கிட்டு,

"அப்புறம் மாப்ள படிப்பெல்லாம் எப்டி போகுது?,

"ஆமா.. போன வாரம் கணேஷ் தியேட்டர்ல உன்னை ஒரு பொண்ணோட பாத்ததா உங்கத்த சொன்னாளே?",

"உனக்கு வயசாச்சா இல்லையாடா? எப்பதான் கல்யாணம் பண்ண போறயோ?",

"கல்யாணமாகி நாலு மாசமாச்சு ஒரு நல்ல சேதி உன்கிட்டருந்து வரலயே. ஏதும் பிரச்சனைனா பெரிப்பாக்கிட்ட சொல்லுடா?",

"என்ன பங்காளி.. உன் பய பன்னென்டாவதுல இவ்ளோதான் மார்க் வாங்கிருக்கான் போல. அத வச்சு எங்கக்கொண்டி சேப்ப அவன?",

"என்னம்மா ஈஸ்வரி.. உன் தம்பிக்கு இன்னும் பொண்ணு கெடச்ச பாடில்ல போலயே.. பரமக்குடில போன மாசம் பாத்த பொண்ணு என்னாச்சு? ஜாதகத்துல ஏதும் பிரச்சனையா?"னு கேள்வியாக் கேட்டு, 'அது நம்மள நோக்கி வருது. எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க"னு எல்லாத்தையும் அலற வச்சு பயந்து ஓட வைப்பீங்க.

அறிகுறி 2:

உலகத்துல உள்ள எல்லா பிரச்சனைக்கும் உங்க கிட்ட தீர்வு இருக்கும். அதுக்காக நீங்க உங்க வாழ்க்கைல 20,000 புத்தகமோ, நாலு பிஎச்டியோ இல்ல 10 மாஸ்டர் டிகிரியோ எல்லாம் படிச்சுருக்க மாட்டீங்க.

தினம் காலைல பத்து நிமிஷம் தந்தி பேப்பரையும், கால் மணி நேரம் பாலிமர் டிவி நியூஸையும் பாக்குறவரா இருப்பீங்க.

ஆனா, சொந்தக்காரவுங்க பிரச்சனை, பக்கத்து வீட்டுக்காரவுங்க பிரச்சனைக்கு மட்டுமில்ல, உள்ளூர் பிரச்சனையில இருந்து உக்ரைன் போர் வரைக்கும் உங்கக்கிட்ட தீர்வு இருக்கும்.

செவ்வாய் கிரகத்துலருந்து சென்னைக்கு தண்ணிக் கொண்டு வரதுக்கு ஐடியா கேட்டாக் கூடா யோசிக்காம, ஏழெட்டு ஐடியாவ எறக்கிவிட்டு, நாசா விஞ்ஞானிகளையே அசர வைப்பீங்க.