Helmet Helmet
Lifestyle

TN Police : Helmet அணியவில்லை என்பதால் தனக்கு தானே அபராதம் விதித்து கொண்ட எஸ்.ஐ!

ஒரு போலீஸே ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் செலுத்துகிறார் என்ற செய்தி பலரை சென்றடையும். அவர்கள் டூவீலரில் செல்லும் போது நிச்சயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் வரும்.

டைம்பாஸ் அட்மின்

தலைக்கவசம் உயிர்கவசம் என்றாலும் டூவீலர் ஓட்டுனர்கள் அதனை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. விதியை பின்பற்றி ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி செல்பவர்களிடம் போலீஸார் அபராதம் வசுலிக்கின்றனர். அடுத்த முறை ஹெல்மெட் அணியாமல் வரக்கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

எல்லோரும் ஆச்சரியப்படுத்தும் விதமாக நாகையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ் ஒருவர் தனக்கு தானே அபராதம் விதித்து கொண்டுள்ளார். எல்லோரையும் இது சென்றடையும் என்பதற்காகவே இது போல் நடந்து கொண்டதாக சக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக இருப்பவர் கனகராஜ். இவர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி சென்றதை கவனித்த எஸ்.பி ஹர்ஷ் சிங் அதனை சுட்டிக்காட்டியதுடன் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

தவறு நடக்காமல் கண்காணிப்பது, தவறு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி தருவது மட்டும் போலீஸின் கடமை கிடையாது. போலீஸ் தவறு செய்தாலும் அது தவறு என உணர வேண்டும். எஸ்.ஐ.கனகராஜ் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது தவறு என்பதை உணர்ந்து தனக்கு தானே அபராதம் விதித்து கொண்டது காக்கிகள் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

அத்துடன் காவல்துறை உயர் அதிகாரிகள் கனகராஜின் இந்த செயலை பாராட்டி வருவதுடன் மற்ற போலீஸாரும் இது போல் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். டூவீலர் ஓட்டி செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்பவர்களை நிறுத்தும் போலீஸார் அவர்களிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்கின்றனர்.

பின்னர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். போலீஸாரும் டூவீலரில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான போலீஸார் பின்பற்றுவதில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் போனால் அபராதம் வசூலிக்கும் போலீஸார் அவர்கள் மட்டும் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள் என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஹர்ஷ் சிங். காவலர்கள் டூவீலர் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வாக்கி டாக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து எஸ்.பி.ஹர்ஷ் சிங் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது கனகராஜ் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி சென்றதை பார்த்துள்ளார். பின்னர் நீங்கள் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் செல்வது தவறு விதியை போலீஸான நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என கனகாரஜிடம் அறிவுறுத்தியிருக்கிறார். சாரி சார் இனி இது போல் நடக்காது என்ற கனகராஜ் தன் தவறை உணர்ந்தார். அடுத்து அவர் செய்தது தான் பெரிய அளவில் கவனம் பெற்றது.

ஹெல்மெட் அணியாததற்கு தனக்கு தானே ரூ.1,000 அபராதம் விதித்து தன் பெயரில் ரசீது போட்டுக் கொண்டார். ஒரு முறை செய்த தவறை திருத்திக் கொண்டு அதற்கான தண்டனையை அனுபவித்தால் அடுத்த முறை நிச்சயம் அதே தவறை மீண்டும் செய்ய மாட்டோம். எனக்கு நானே அபராதம் விதித்து கொண்டது எப்போதும் என் நினைவில் இருக்கும். டூவீலரை எடுக்கும் போதே ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

அதற்காகவும் ஒரு போலீஸே ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் செலுத்துகிறார் என்ற செய்தி பலரை சென்றடையும். அவர்கள் டூவீலரில் செல்லும் போது நிச்சயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் வரும்.

இதன் மூலம் விபத்துகள் ஏற்பட்டாலும் உயிர் காக்கப்படும். அதற்கான விழிப்புணர்வுக்காகத்தான் எனக்கு நானே அபராதம் விதித்து கொண்டேன் என சக போலீஸாரிம் தெரிவித்திருக்கிறார் கனகராஜ். இதை கேட்ட பலரும் அவரை மெய்சிலிர்த்து பாராட்டியிருக்கின்றனர்.