சமையலில் தக்காளியை, தன்னிடம் கேட்காமல் கணவன் சேர்த்ததால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் காய்கறி விலை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முக்கியமாக தக்காளி கிலோ ரூ.160-ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இந்த விலையேற்றம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்களை மட்டுமின்றி ஓட்டல்கள், உணவகங்கள், உணவு தயாரிப்பாளர்களையும் இந்த விலையேற்றம் பாதித்துள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சமைக்கும் உணவில் தக்காளியை சேர்த்ததற்காக மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்தக் கதையை பார்ப்போம்.
ஷதோல் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தீப் பர்மன். இவரது மனைவி ஆர்த்தி பர்மன். சமீபத்தில் சமையல் செய்த சந்தீப் பர்மன், 2 தக்காளியை பயன்படுத்தி உள்ளார். இது குறித்து, அவர் மனைவியிடம் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால், கோபமடைந்த ஆர்த்தி சண்டை போட்டுள்ளார். பிறகு குழந்தையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனால், விரக்தியடைந்த சந்தீப் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஆர்த்தி கணவனுடன் சண்டையிட்டு, அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரையும் மொபைல் போனில் பேச வைத்து சமரசம் செய்துள்ளோம். அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்றனர்.