Namakkal  Namakkal
Lifestyle

Namakkal : பூசாரிக்கு கோவில் கட்டிய அத்திமரத்துக்குட்டை கிராம மக்கள் - சுவாரஸ்யமான பின்னணி !

கடந்த ஓர் ஆண்டாகவே பூசாரியின் ஆன்மா சாந்தி அடையாமல், உறவினர்களான தங்களை பல்வேறு தருணங்களில் உணர வைத்ததாக அவரது உறவினர்கள் உணர்ந்துள்ளனர்.

டைம்பாஸ் அட்மின்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரம், தாண்டாகவுண்டன்புதூர் அருகே இருக்கிறது அத்திமரத்துக்குட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி அய்யமுத்து. இவரின் மனைவி அய்யம்மாள். அய்யமுத்து இந்த பகுதியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் பணி செய்து, மக்களுக்கு வாக்குச் சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில், அய்யம்மாள் கடந்த 2020 ம் ஆண்டு வயோதிகம் காரணமாக காலமானார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பூசாரி அய்யமுத்து காலமானார். பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பிறகு தனக்குச் சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அவர் இறந்தபோது, சில காரணங்களால் அவரின் உறவினர்கள் அவரின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டாகவே பூசாரியின் ஆன்மா சாந்தி அடையாமல், உறவினர்களான தங்களை பல்வேறு தருணங்களில் உணர வைத்ததாக அவரது உறவினர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் தவறை உணர்ந்த உறவினர்கள் பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும் போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என கூறினாரோ, அதே இடத்தில் அய்யமுத்து - அய்யமாளுக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதன்படி கோவில் கட்டி சிலை வைத்து கும்பாமிஷகம் நடத்தினர்.

பூசாரி அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அய்யமுத்து - அய்யமாளின் கோவில் முன்பாக, வேம்பரசு மரத்தின் அடியில் விநாயகர் சிலை வைத்து மகா கும்பாபிஷேகம் விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து அய்யமுத்து - அய்யம்மாள் சிலைகளுக்கு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டனர்