Titanic house Timepass
Lifestyle

TITANIC house: 13 வருடங்களாய் 'டைட்டானிக் கப்பல்' வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் விவசாயி!

'கப்பல் மாதிரி வீடு'னு பேச்சுக்கு சொல்வாங்க. ஒருத்தர் கப்பல் மாதிரியே வீட்டைக் கட்டின கதை தெரியுமா..? டைட்டானிக் கப்பலை நம்ம எல்லாருக்கும் தெரியும்... ஆனா, டைட்டானிக் வீடு தெரியுமா..? வாங்க சொல்றேன்! 

ரீசென்ட்டா ட்ரெண்ட் ஆகிட்டிருக்கிற ஒண்ணுதான் இந்த டைட்டானிக் வீடு!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, அவருடைய கனவு இல்லமான இந்த 'டைட்டானிக் வீடு' கட்டுவதற்கு 13 வருடங்களை செலவு பண்ணியிருக்கிறாராம்..! 'என்னது ஒரு வீட்டைக்கட்ட இத்தனை வருஷங்களா!'னு ஆச்சர்யப்படுறீங்களா..?

மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்துல 'மின்டு ராய்' என்ற 52 வயது விவசாயி தன் குடும்பத்தோட வாழ்ந்துட்டு இருக்காரு. இவர் (ராயல் மெயில் ஸ்டீமர், ஆர்எம்எஸ்) டைட்டானிக் கப்பலை மாதிரியா வெச்சி மூணு அடுக்கு வீடு ஒண்ணு கட்டிட்டு இருக்காரு.. டைட்டானிக் படம் பார்த்ததுல இருந்து அப்படிப்பட்ட கப்பல்ல போகணும்னு ஆசைப்பட்டவர், 'ஏன் நம்மளால அதே போல ஒரு வீட்டைக் கட்ட முடியாதா?'னு யோசிச்சு களத்துல குதிச்சிட்டாரு.

2010ல் 9.5 தசம நிலத்துல இந்த வீட்டுக்கான கட்டிட வேலையை ஆரம்பிச்சாரு மின்டு. இந்த வீடு 'பாசிதேவா' என்ற ஊருல இருக்குற நிச்பரி கிராமத்துல இருக்கு‌. குடும்ப நிதியை சமாளிக்க முடியாம இந்த வீட்டோட கட்டிட வேலை ரொம்ப நாள் எடுத்துருச்சு. இந்த வீட்டுக்கான கட்டிட வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி ஒரு இன்ஜினியர்கிட்ட ப்ளானைச் சொல்லி இருக்காரு மின்டு ராய். ஆனா மின்டுவால பணம் கட்ட முடியாதுனு அந்த இன்ஜினியர் பின் வாங்கிட்டாரு. அதுக்கப்புறம் மின்டு ராய் நேபாளத்துக்குப் போயி கட்டிட வேலைய கத்துக்கிட்டாரு. மூணு வருஷத்துக்கு அப்புறம், அவருடைய சொந்த ஊருக்கு வந்து, அவரு சேத்து வெச்சிருந்த பணத்த வெச்சி அவருடைய கனவு இல்லத்துக்கான கட்டிட வேலைய ஆரம்பிச்சாரு.

இந்த வீட்ட பத்தி மின்டு ராயுடைய மனைவி இட்டி, "இதுவரைக்கும் நாங்க எவ்வளவு பணம் செலவு பண்ணி இருக்கோம்னு கணக்கு எதுவும் எடுத்து வைக்கல.. ஆனா கிட்டத்தட்ட 15 லட்சம் செலவு பண்ணிருப்போம். நாங்க ரொம்ப வசதியானவங்களாம் கிடையாது. எங்க பொண்ணு பொறந்ததுக்கு அப்புறம் மத்தவங்க கிட்ட நிலத்தை குத்தகைக்கு வாங்கி, அங்க காய்கறிகளை பயிரிட்டு நாங்க பணம் சம்பாதிச்சிட்டு இருக்கோம்.. அப்புறம் எங்க மாமனார்கிட்ட கொஞ்ச நிலம் வாங்கி அங்கு தேயிலை பயிரிட்டு அதுலயும் கொஞ்சம் சம்பாதிச்சிட்டு இருக்கோம்.. கூடவே என்னுடைய கணவரும் ஆட்டோ ஓட்ட போயிடுவாரு, அதுவும் எங்களுக்கு கூடுதலான பணத்தை கொடுக்கும்"னு சொன்னாங்க..

இந்த டைட்டானிக் வீட்டை பத்தி மின்டு ராய் "அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள இந்த வீட்டுக்கான கட்டிடப் பணிகளை முடிச்சுட்டு அங்க குடிபோகணும். அந்த வீட்டிலேயே ஒரு சின்ன டீக்கடை நடத்தணும். உண்மையான டைட்டானிக் கப்பல்ல எந்த மாதிரியான வேலைப்பாடுகள் இருக்கோ, அது எல்லாமே இந்த வீட்ல இருக்கு. இதனுடைய படிக்கட்டுகள், மரவேலைகள்னு எல்லாமே அந்த டைட்டானிக் கப்பலோட ஒத்துப் போகிற மாதிரி தான் இருக்கும்"னு சொன்னாரு!

இந்த டைட்டானிக் வீட்டைப் பற்றி மின்டு ராயுடைய மகன் கிரண் ராய் என்ன சொல்றாருன்னா... "எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கறவங்கள்ள  ஆரம்பிச்சு தூரமா இருக்குறவங்க வரைக்கும் நிறைய பேரு எங்க வீட்டை வந்து பார்த்துட்டு போட்டோ எடுக்குறாங்க.. பத்திரிகையாளர்களும் எங்க வீட்டைப் போட்டோ எடுத்துட்டுப் போறாங்க, அது மட்டும் இல்லாம, இந்த வீட்டைப் பத்தின சில செய்திகளையும் போன் மூலமா கேட்டுத் தெரிஞ்சிக்கிறாங்க. எங்க அப்பாவுடைய இந்தக் கனவு இல்லத்தை நினைவாக்குறதுக்கு நிதி சார்ந்து நானும்  நிறைய உதவுவேன்!"னு சொல்கிறார்.

மூழ்காத ஷிப்...! 

- ராதிகா நெடுஞ்செழியன்