உலகின் சிறந்த ஸ்ட்ரீட் ஃபுட் பட்டியலை வெளியிட்டது டேஸ்ட் அட்லஸ் நிறுவனம். வெளியிடப்பட்ட 50 சாலையோர உணவு இனிப்புகள் பட்டியலில் மைசூர் பாக் உட்பட மூன்று இந்திய உணவுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் உலகின் டாப் 50 பட்டியலை வெளியிட்டுள்ளது.
இனிப்பு என்றாலே இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் பல வகைகள் உள்ளது. இப்படி உலகம் முழுக்க உள்ள இனிப்புகள் தரம் பிரித்து இந்த பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள பிரபலமான இனிப்பு வகைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. அவற்றில் முதலாவது கர்நாடகாவின் மைசூர் மன்னரின் அரச சமையலறையில் உருவான மைசூர் பாக். இந்த மைசூர் பாக் உலகளவில் 50 சிறந்த சாலையோர உணவு இனிப்புகளில் 14வது இடத்தைப் பிடித்துள்ளது. குல்ஃபி 18வது இடத்தையும், ஃபலூடா 32வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த மைசூரு பாக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூரு உடையார் ராஜ்ஜியத்தில் அரச சமையற்காரராக இருந்த மாதப்பா, சர்க்கரை-நெய்-கடலை மாவு கலவையால் செய்தார். இந்த இனிப்பு அப்போதைய மகாராஜாவான கிருஷ்ணராஜ வாடியாரால் மிகவும் விரும்பி உண்ணப்பட்டது.
இந்தப் பட்டியல் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள சிலர், "இது ஒவ்வொரு கன்னட மக்களுக்கும், குறிப்பாக மைசூர் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். மைசூர் பாக்கின் இனிமை மற்றும் பாரம்பரியம் இன்றும் மாறாமல் நாங்கள் தொடர்கிறோம்." என்றும் "மைசூர் வெற்றிலை, மைசூர் பட்டு, மைசூர் மல்லிகை இந்த வரிசையில் மைசூர் பாக்கும் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன" என்று கூறியுள்ளனர்.
உலகின் சிறந்த சாலையோர உணவு இனிப்பு வகைகளில் மைசூர் பாக் இடம்பிடித்திருப்பது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.