Gavaskar Gavaskar
Lifestyle

Virat Kohli : கைகுலுக்கினா லக் போய்டுமா? - WI மண்ணில் Gavaskarக்கு நடந்த சுவாரஸ்யம்!

கோலி ஃபார்ம் அவுட் ஆன சமயத்துல பாபர் அசாமை தற்செயலா சந்திச்சாரு. ரெண்டு பேரும் கைகுலுக்கினாங்க. அடுத்த போட்டிகள்ல பாபர் சொதப்ப, கோலி கலக்க, `அதிர்ஷ்டம் கைகுலுக்கல்ல கைமாறிடுச்சு'னு சொல்லப்பட்டுச்சு.

Ayyappan

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரா டெஸ்ட்ல இந்தியாவோட முதல் வெற்றியும் இந்தியாவோட தலைசிறந்த ஓப்பனர்கள்ல ஒருத்தரோட அறிமுகமும் ஒன்னா நடந்தேறுச்சு.

கிட்டத்தட்ட 17 வருஷங்கள் இந்தியக் கிரிக்கெட்ட கட்டி ஆண்டு இப்போவும் அதுகூடவே வேறு வடிவத்துல பயணிச்சுட்டு இருக்க லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர். தன்னோட முதல் தொடர்லயே எதிரணிய கலங்கடிச்சு நான்கு போட்டிகள்ல 774 ரன்களக் குவிச்சவர். அந்தத் தொடர்ல நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான் இது.

ஆடப்போற முதல் போட்டி, அதுவும் நம்ம ஊரு எல்லை தெய்வங்கள் மாதிரி மிரட்டும் தோரணையோட அடிவயிற்றில் ஆசிடைக் கரைக்குற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுற பந்த எதிர்கொள்ளணும்! எவ்ளோ பயம் இருக்கணும்?

அதுவும் ஒரு 22 வயது இளைஞனுக்கு? ஆனா அது எதுவுமே இல்லாம தான் தன்னோட டெபுட் மேட்ச்ல கவாஸ்கர் இறங்குனாரு. தொடரோட முதல் போட்டிய விரல்ல ஏற்பட்ட காயத்தால தவற விட்டவருக்கு இரண்டாவது போட்டில தான் யாருனு நிரூபிக்கணும்ன்ற அவசியம் நிரம்பவே இருந்தது.

வழக்கம் போல பவுன்சர்களாலும் யார்க்கர்களாலும் ஃபாஸ்ட் பௌலர்கள் போர் தொடுக்க, அது அத்தனையையும் அவரோட பேட் கேடயமாகி சமாளிச்சது. தற்காப்புக் கலைல கைதேர்ந்தவரு மாதிரி ஒவ்வொரு பந்தையும் அவரு டிஃபெண்ட் பண்ண விதமே அவருக்கு மேற்கிந்தியத்தீவுகள்லகூட ரசிகர்களக் கொண்டு வந்துருச்சு.

ஒரு சின்னப் பையன் எவ்வளவு அழகா பேட்டிங் பண்றார்னு கொண்டாடுனாங்க. அந்தப் போட்டியோட இரு இன்னிங்ஸ்லயும் அரைசதம் கடந்தாரு கவாஸ்கர். முதல் முறையா வரலாற்றுப் பதிவா இந்தியா மேற்கிந்தித்தீவுகளுக்கு எதிரா ஒரு வெற்றியப் பதிவு பண்ணுச்சு.

அடுத்தடுத்த போட்டிகள்லயும் கவாஸ்கர் கலக்குனாரு மூன்று போட்டிகள்ல மூன்று சதங்கள், ஒரு இரட்டை சதம்னு அசத்துனாரு. அதேநேரம் எதிரணில இருந்த தலைசிறந்த வீரர்கள்ல ஒருவரான கார்ஃபீல்ட் சோபர்ஸ் முதல் மூணு போட்டிலயும் சரியா ஆடல. அவரு கவாஸ்கர் ஆடுன விதத்தப் பார்த்து அசந்து போய்ட்டாருனே சொல்லணும். கவாஸ்கருக்கு `லிட்டில் மாஸ்டர்'ன்ற டைட்டில் கொடுத்ததும் அவருதான்.

எப்படியாச்சும் கவாஸ்கர மேட்ச் முடிஞ்ச பிறகு தனியா பார்த்துப் பேசணும்னு ஆசைப்பட்ட அவரு இந்திய அணி கேப்டனா இருந்த அஜித் வடேகர்ட்ட இதப்பத்தி சொல்ல, "தாராளமா எப்போ வேணும்னாலும் வாங்க"ன்னு சொன்னார். ஆனா சோபர்ஸ் கவாஸ்கரப் பார்க்க வந்தப்போ நடந்த கதையே வேற!

சோபர்ஸ் வந்தது தெரிஞ்சதும் கவாஸ்கரை குளிக்கப் போக சொல்லி அனுப்பி விட்டாரு வடேகர், அதுவும் தான் சொல்றவரை வெளியே வரக்கூடாதுன்ற கண்டிஷன்ல. ஏன்னா தொட்டா கவாஸ்கரோட லக் சோபர்ஸ்ட்ட போய்டும்ன்ற பயம். ஆக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் வெளிய சோபர்ஸ் காத்துட்டு இருக்க கவாஸ்கர் குளிச்சுட்டே இருந்தாரு. அத்தொடர் முடியறவரை ரெண்டு பேரையும் வடேகர் பார்க்க விடவே இல்ல.

கோலி ஃபார்ம் அவுட் ஆகி இருந்த சமயத்துல பாபர் அசாமை ஆசியக் கோப்பைக்கு முன்னாடி தற்செயலா பயிற்சியப்போ சந்திச்சாரு. அப்போ ரெண்டு பேரும் கைகுலுக்கினாங்க. இதுக்கு அடுத்து வந்த போட்டிகள்ல பாபர் சொதப்ப, கோலி கலக்க, `அதிர்ஷ்டம் கைகுலுக்கல்ல கைமாறிடுச்சு'னு சொல்லப்பட்டுச்சு. மூடநம்பிக்கைதான், இருந்தாலும் இதுபோன்ற விஷயங்கள் கிரிக்கெட்ல சாதாரணம். இதேதான் வடேகரும் பண்ணாரு.

மேற்கிந்தியத்தீவுகள கவாஸ்கர் ஆக்ரமிச்சத வச்சு அங்க இருந்த பிரபலப் பாடகர் "Gavaskar Calypso"ன்ற ஆல்பம்லாம் வெளியிடற அளவுக்கு அவரோட திறமையை மதிச்சாங்க. ரிசப் பண்டை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொண்டாடுனது போல கவாஸ்கர் மேலேயும் மேற்கிந்தியத்தீவுகள் ரசிகர்களுக்கு அலாதியான அபிமானம் இருந்துச்சு. ஆனா அவரோட திறமையை அதிர்ஷ்டம்னு நம்ம அணி வீரர்கள் நினைச்சதுதான் கொடுமை.