Kallicharran  timepass
Lifestyle

World Cup 2023 : அந்த காலத்து Maxwell - ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த Kallicharran !

1975-ம் ஆண்டு, அவருக்கு வீசிய 10 பால்கள்ல 35 ரன்களை கண்ணிமைக்குறதுக்குள்ல அடிச்சாரு. இன்னைக்கு தேதில அது அடிக்கப்பட்டு இருந்தா வீடியோ எடிட்கள் வரிசை கட்டி வந்திருக்கும்.

Ayyappan

பென் ஸ்டோக்ஸோட Brain Fade மொமெண்டா ஷமியோட ஸ்பெல் மாறுன மாதிரி டென்னிஸ் லில்லிய மொத்தமா மெண்டல் ப்ளாக் ஆக்குன அந்த பேட்ஸ்மேன் பத்தி தெரியுமா?

பேட்ஸ்மேன்கள் கேமா கிரிக்கெட் மாறியிருக்கதெல்லாம் சமீபத்துல டி20 தாக்கத்தால நடந்தது தான். அதற்கு முன்பெல்லாம் பௌலர்கள் ராஜாங்கமா தான் இருந்தது. அதுவும் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியானு ஆளுக்கொரு பக்கமா ஃபாஸ்ட் பௌலர்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள சரணடைய வச்சுட்டு இருந்தாங்க.

அதுலேயும் டென்னிஸ் லில்லி புதுப் பந்தோட களமிறங்கினா அவர சந்திக்கிற எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் பயத்தோடதான் எதிர் கொள்வாங்க, கைகள் நடுங்குறதையோ, கண்கள் மிரளுவதையோ மறைக்கவே முடியாது. ஆனா அப்படிப்பட்ட ஒருத்தருக்கு அந்தக் காலத்திலேயே ஒரு பேட்ஸ்மேன் டி20 டெம்ப்ளேட்டோட டெமோ காட்டி தர்ம அடி கொடுத்து அனுப்பினார். வெஸ்ட் இண்டீஸோட கல்லிச்சரண் தான் அவர்.

1975-ம் ஆண்டு, ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மட்டோட முதல் உலகக்கோப்பை அது. சாம்பியனாக வாய்ப்பிருக்கிறதா சொல்லப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துன போட்டி. முதல்ல பேட்டிங் பண்ண ஆஸ்திரேலியாவோட டாப் ஆர்டர் வெஸ்ட் இண்டீஸோட வேகத்த தாக்குப்பிடிக்க முடியாம மோசமா சொதப்ப, வெறும் 192 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிடுச்சு ஆஸ்திரேலியா. ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்ல வந்த 99 ரன்களும் வராட்டி நிலைமை இன்னமும் மோசமா இருக்கும்.

எப்பவும் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் - பௌலர்கள் எண்கவுண்டர் சில போட்டிகள விறுவிறுப்பாக்கும். அன்னைக்கும் அதுதான் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களோட நாள் இதுனு பார்வையாளர்கள் நினைக்க அதையே சற்றே மறக்க வைக்குற ஒரு ஆட்டத்த கல்லிச்சரண் லில்லிக்கு எதிரா ஆடுனாரு. ஜென்மத்துக்கும் மறக்க முடியாத ஒரு பேரிடிய லில்லி தலைல இறக்குனாரு.

29 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் எடுத்தப்பவே முதல் விக்கெட் விழ, ஒன்டவுன்ல கல்லிச்சரண் இறங்குனாரு. பவுன்சர்களால அவர பயமுறுத்த ஆஸ்திரேலிய படை தயாராச்சு. ஆனா அவங்களோட சப்தநாடியையும் ஒடுக்கற மாதிரி உக்கிரத்த கல்லிச்சரணோட பேட் கக்க ஆரம்பிச்சது. குறிப்பாக லில்லி மேலதான் கொலை வெறித்தாக்குதல கட்டவிழ்த்தாரு கல்லிச்சரண். முந்தைய ஆஸ்திரேலிய டூர்ல மிச்சம் வச்ச பகையைத் தீர்க்க ஆரம்பிச்சாரு.

லில்லி அவருக்கு வீசிய 10 பால்கள்ல 35 ரன்களை கண்ணிமைக்குறதுக்குள்ல அடிச்சாரு. எந்த லைன்ல வேணும்னாலும் போடு, எந்த லெந்த்ல வேணும்னாலும் போடு, எல்லாத்துக்கும் பெரிய ஷாட்டா தான் பதில் சொல்வேன்ற மாதிரி ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அந்த பத்து பந்துகள்ல அடிச்சு தெறிக்க விட்டுட்டாரு.

இன்னைக்கு தேதில அது அடிக்கப்பட்டு இருந்தா வீடியோ எடிட்கள் வரிசை கட்டி வந்திருக்கும். அப்படிபட்ட கருணையே இல்லாத முரட்டு ஆட்டம் அது. ப்ரைம் ஃபார்ம்ல இருந்த லில்லிய ஏதோ க்ளப் பௌலர அடிக்கற மாதிரி விளாசி, நொந்து நூடுல்ஸ் ஆக வச்சு அனுப்பி விட்டாரு கல்லிச்சரண்.

வழக்கமா நடக்குற ஸ்க்ரிப்ட் மாதிரி வில்லியோட பந்துல தான் கல்லிச்சரண் கடைசியா ஆட்டமிழந்தாரு அப்படினாலும் டென்னிஸ் லில்லிய அவரோட கரியர்ல கல்லிச்சரண் அளவுக்கு யாருமே துவைச்சு எடுத்தது இல்லைன்ற பெருமையோட தான் அவரு வெளிய கம்பீரமா போனாரு. டென்னிஸ் லில்லியோட Nightmare இந்தப் போட்டி.