நீங்கள் இதற்கு முன்னர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் பல வழிகளில் அவுட் ஆனதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் டைம் அவுட் முறையில் அவுட் ஆகி பார்த்திருக்க மாட்டீர்கள்..! ஆம் தற்போது நடைபபெற்று வரும் உலகக் கோப்பையின் வங்கதேசம் மற்றும் இலங்கை போட்டியின் போது இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூவுக்கு தான் இந்த சர்ச்சைக்குரிய 'டைம் அவுட்' முறையில் அவுட் ஆகி உள்ளார்.
இந்த நிலையில் போட்டியின் போது இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ், ஹெல்மட் பட்டை அறுந்திருந்தது தெரியாமல் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வேகமாக வந்தவர். அதற்கு பிறகு வேற ஹெல்மட்டை கொண்டு வருமாறு சக அணியினருக்கு சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து கடுப்பான ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டதால், போட்டியின் நடுவர்களிடம் டைம் அவுட் அப்பீல் செய்தார்.
இதனால் கலந்து பேசிய இரு நடுவர்களும் எதிர் அணியின் அப்பீலை கருத்தில் கொண்டு மேத்யூஸ்க்கு டைம் அவுட் முறையில் அவுட் கொடுத்தனர். இதைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய ஏஞ்சலோ மேத்யூஸ் உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார். இருப்பினும் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர்.
இதனால் கோபமடைந்த மேத்யூஸ், களத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். அப்போது இதற்கெல்லாம் இந்த ஹெல்மட் தான் காரணம் என்று நினைத்தாரோ என்னவோ, அவரின் ஹெல்மட்டை பவுண்டரிக்கு அருகே தூக்கி கடாசினார். பின்னர் அவரின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டிடம் சென்று கோபத்தில் கொந்தளித்தார். இதுக்கெல்லாமா அவுட் கொடுப்பாங்க.. ஒரு வார்னிங் கூட கொடுக்கவில்லை... என்று புலம்பினார்.
இதன் நிகழ்வின் மூலம் எந்த ஒரு பந்தையும் எதிர்கொள்ளாமல், கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மேத்யூஸ். மேலும் இந்த நிகழ்வு நெட்டிசங்களிடையே பேசுபொருளாகி வருகிறது.
- மு.குபேரன்.