Modi  Modi
அரசியல்

Modi : Degree certificate-ஐ கேட்பது மோடியின் Privacy-ஐ பாதிக்கிறது - குஜராத் பல்கலைக்கழகம்

மறைக்க எதுவும் இல்லை என்றாலும், தகவலை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை வற்புறுத்த முடியாது. மேலும் இது பிரதமரின் தனியுரிமையை பாதிக்கும் என்று குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சு.கலையரசி

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழ் நகலை கேட்பதால், அவருடைய தனிமனித உரிமை பாதிக்கப்படுகிறது என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில், குஜராத் பல்கலைக்கழகம் நேற்று (9 பிப்ரவரி 2023) தெரிவித்துள்ளது.

மோடி குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978 இல் பட்டப்படிப்பையும், 1983 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரினார்.

அதைத் தொடர்ந்து, மோடியின் பட்டபடிப்பு விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையமானது (CIC), பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தகவல் அதிகாரி(PIO), குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களின் PIOக்களுக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதி நீதிமன்றம் விசாரித்தது.

பிப்ரவரி 9ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில், குஜராத் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (எஸ்ஜி) துஷார் மேத்தா வாதிடுகையில், "மறைக்க எதுவும் இல்லை என்றாலும், தகவலை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை வற்புறுத்த முடியாது. மேலும் இது பிரதமரின் தனியுரிமையை பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும் "ஜனநாயகத்தில், பதவி வகிக்கும் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவராகவோ அல்லது படிப்பறிவில்லாதவராகவோ இருப்பதால், எந்த வித்தியாசமும் ஏற்படாது. இந்த வழக்கில் பொது நலன் எதுவும் இல்லை. பிரதமரின் தனியுரிமை பாதிக்கப்படுகிறது" என்று துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பெர்சி கவினா, "தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் அவரது கல்வித் தகுதி குறிப்பிட்டதால்தான் பட்டபடிப்புச் சான்றிதழைக் கேட்கிறோம், அவருடைய மதிப்பெண் பட்டியலைக் கேட்கவில்லை. பட்டம் இணையதளத்தில் கிடைக்கவில்லை" என்று வாதிட்டுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ், வழக்கை ஒத்திவைத்துள்ளார்.